ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகத்தின் திறன் இந்தியா திட்டம் – பழகுநர் பயிற்சி

16 ரயில்வே மண்டலங்கள் மற்றும் 7 உற்பத்திப் பிரிவுகளில் 30 ஆயிரம் பேருக்கு பழுகுநர் பயிற்சி அளிக்க இலக்கு.

Posted On: 13 FEB 2018 5:28PM by PIB Chennai

திறன் இந்தியா திட்டத்தின்கீழ், பொருத்துநர், கடைசல்காரர் எந்திரவியலாளர்,  பற்றவைப்பவர், பெயிண்டர், தச்சர், எலெக்டரீசியன், குளிர்பதன பெட்டி மற்றும் குளிர்சாதன பழுதுபார்ப்பவர், மோட்டார் வாகன பழுதுபார்ப்பவர் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிப்பதில்  ரயில்வே அமைச்சகம் பெரும் பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 16 மண்டலங்கள் மற்றும் 7 உற்பத்திப் பிரிவுகளில் 30 ஆயிரம் பழகுநர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

     2017-18ஆம் ஆண்டில், 26 ஆயிரம் பேருக்கு பழகுநர் பயிற்சி அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.  பல்வேறு நிறுவனங்களில் ஏற்கனவே பயிற்சி பெற்றுவரும் 4 ஆயிரம் பேருடன் கூடுதலாக இவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பணிநிலை 1-ன்கீழ் 62 ஆயிரத்து 907 பணியாளர்களை தேர்வு செய்ய இந்த வார முற்பகுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரயில்வே அமைப்புகளில் பழகுநர் பயிற்சி பெற்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும். 1961ஆம் ஆண்டு பழகுநர் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்த முன்னுரிமை அளிக்கப்படும்.

     அதிக பணிமனைகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ள துறை என்ற அடிப்படையில், 1961ஆம் ஆண்டு பழகுநர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்திய ரயில்வே  முன்னணியில் உள்ளது.  ரயில்வே பணிமனைகளில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிமனைகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகளிலிருந்து ஆண்டுதோறும் பயிற்சி முடிக்கும் பெருமளவிலான பழகுநர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு, தொழிற்சாலைகளிலும், ரயில்வே துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் திறன் இந்தியா திட்டத்தில், இந்திய ரயில்வே முக்கியப் பங்கு வகிக்கிறது.

     பழகுநர் பயிற்சி என்பது, அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்புக்கான பயிற்சி / பணியிடங்களில் செய்முறைப் பயிற்சியும் கொண்டதாகும். தொழிலகப் பயிற்சி அல்லது திறன் பயிற்சி பெறாதவர்கள் வேலைவாய்ப்பு பயிற்சி / செய்முறைப் பயிற்சி பெறுவதற்கு முன்பாக, இந்த அடிப்படை பழகுநர் பயிற்சியை பெறுவது அவசியமாகிறது. இது பழகுநர் பயிற்சியின் ஒட்டுமொத்த பயிற்சிக் காலத்தில் 20-30% ஆகும்.  இது வேலைவாய்ப்பு பயிற்சியில் ஒர் அங்கமாக திகழ்வதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு பெறவும் உதவும்.

------



(Release ID: 1520526) Visitor Counter : 95


Read this release in: English