விவசாயத்துறை அமைச்சகம்
உலகில் பால் உற்பத்தியில் பெரிய நாடாக இந்தியா உள்ளது. 20 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் ராதா மோகன் சிங்
அதிக அளவில் தொழில்முனைவோர்க்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிலையை இந்தியா அடைந்துவிட்டது: வேளாண்துறை அமைச்சர்
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2018 3:49PM by PIB Chennai
பிகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டம் மோதிஹரி என்ற இடத்தில் முதல் பால் பண்ணை அமைப்பதற்கான அடிக்கல்லை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் இன்று (பிப்ரவரி 13) அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. சிங், “உலகிலேயே அதிக அளவில் தொழில்முனைவோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிலைக்கு இந்தியா உயர்ந்துவிட்டது” என்றார்.
திரு. சிங் மேலும் பேசுகையில், “பால் உற்பத்தியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தை வகித்து வருகிறது“ என்றார். பால் உற்பத்தியில் 1960ம் ஆண்டு 1.70 கோடி டன் முதல் 2.20 கோடி டன் வரையில் உற்பத்தி செய்து வந்தது. தற்போது, 2016-17ஆம் ஆண்டு 16 கோடி 54 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தியை எட்டியிருக்கிறது. 2016-17ம் ஆண்டில் பாலின் உற்பத்தி அளவு 2013-14ஆம் ஆண்டை விட 20.12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
“பாலின் தனி நபர் கையிருப்பு அளவும் 2013-14ஆம் ஆண்டில் இருந்ததை விட 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013-14ம் ஆண்டில் 307 கிராம் அளவு இருந்த பாலின் கையிருப்பு 2016-17ம் ஆண்டு 355 கிராமாக அதிகரித்துள்ளது” என்றும் அமைச்சர் திரு. சிங், கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:
பால் உற்பத்தியாளர்களின் வருவாய் அளவும் 2011-14ஆம் ஆண்டில் இருந்ததை விட 2014-17ம் ஆண்டு 23.77 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பால் உற்பத்தி ஆண்டுதோறும் 6.3 சதவீத அதிகரிப்பு என்ற நிலையில் நீடிக்கிறது. ஆனால், உலக அளவில் சராசரியாக பால் உற்பத்தி விகிதம் 2.1 சதவீதமே அதிகரித்து வருகிறது.
கிராமப்புறப் பகுதிகளில், குறிப்பாக, நிலமற்ற விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் பால் உற்பத்தியே ஆதாரமாக உள்ளது. சுமார் 8 கோடி விவசாயிகள் பால் உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் பால் தரும் கால்நடைகளைச் சார்ந்தே 80 சதவீதம் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
“இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி (2022ஆம் ஆண்டு) பால் உற்பத்தியாளர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது என்று மாண்புமிகு பிரதம மந்திரி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் ஆகியவற்றின் துறை எண்ணற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை இரு வழியில் அதிகரிக்கச் செய்யலாம். உற்பத்தித் திறனை மேம்படுத்தி, அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது ஒரு வழி. பச்சைப் பாலின் விலையை அதிகரிப்பது இரண்டாவது வழி. இவை மூலம் வருவாயை உயர்த்தலாம்.
உள்நாட்டு இன கால்நடை இனங்களைப் பாதுகாத்து, அதிகரிப்பதற்காக நாட்டில் முதல் முறையாக ராஷ்ட்ரீய கோகுல் இயக்கம் (Rashtriya Gokul Mission) 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை 28 மாநிலங்களில் செயல்படுத்துவதற்காக ரூ. 1350 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 503 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 12 மாநிலங்களில் 18 கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, தேசிய காமதேனு கால்நடை உற்பத்தி மையங்கள் (National Kamdhenu Breeding Centres) தென்னாட்டில் சிந்தளாதேவி, நெல்லூர் ஆகிய இரு இடங்களிலும் வடக்கு மண்டலத்தில் இட்டார்சி, ஹோஷங்காபாத் ஆகிய நகரங்களிளும் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இவற்றில் ஆந்திரப் பிரதேசம் சிந்தளா தேவி மையம் பூர்த்தியாகிவிட்டது. இத்திட்டத்தின் கீழ் 13 வகை எருமைகள் உள்பட 41 வகை கால்நடை வகைகள் பாதுகாக்கப்படும்.
ராஷ்ட்ரீய கோகுல் இயக்கத்தின் கீழ் கால்நடை உற்பத்தித் திறன் மேம்பாட்டு தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய இயக்கத்தின்கீழ் ரூ. 825 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் நோக்கம் பால் உற்பத்தியை அதிகரித்து அதிக லாபத்தைப் பெறுவதே.
இதனிடையே 9 கோடி பால்தரும் கால்நடைகளை அடையாளம் காண்பதற்கான முயற்சி பஷு சஞ்சீவன் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டது. அத்துடன், நகுல் ஸ்வஸ்தயா பத்ரா திட்டத்தின் கீழ் கால்நடைகளைப் பராமரிக்கப்படுகின்றன”
இவ்வாறு அமைச்சர் ராதா மோகன் சிங் பேசினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1520525)
வருகையாளர் எண்ணிக்கை : 3063