பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இருதரப்பு முதலீடுகள்

Posted On: 13 FEB 2018 3:09PM by PIB Chennai

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது ஆற்றிய தொடக்க உரை.

பிரதமர் திரு மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம்  மேற்கொண்ட போது,  இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் எண்ணெய் மற்றும் வாயு தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ளப்பட்ட சில வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய முடிவுகள் பற்றி நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரதமரின் பயணத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில், இந்திய எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே லோயர் ஸகும் கடற்பகுதி எண்ணெய் வயலில் 10 சதவீத பங்குகளை வழங்குவதற்கான சலுகை ஒப்பந்தம் ஒன்றாகும்.  இந்திய ஸ்ட்ரேடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் நிறுவனம் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே மங்களூரில் பெட்ரோலிய வளத்தை ஆய்வு செய்வதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமும்  செய்து கொள்ளப்பட்டுள்ளது.

கையெழுத்திடப்பட்ட  இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் குறித்த முக்கிய விவரங்கள் பற்றி நான் தெரிவிக்க விரும்புகிறேன். 

சலுகை ஒப்பந்தம், அபுதாபி கடற்பகுதியில் லோயர் ஸகும் எண்ணெய் வயலில் 10 சதவீத பங்குகளை ஓ.என்.ஜி.சி விதேஷ்,  இந்திய எண்ணெய்க் கழகம், பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் ஆகியவை அடங்கிய இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு வழங்க வகை செய்கிறது.

இந்தச் சலுகை ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை நேரடியாக ஊக்கப்படுத்தக்கூடிய  வகையில் அமையும்.  இந்தியாவின் பங்காக 2018 மார்ச் மாதத்திற்கு டாஸ் கச்சா  எண்ணெய் ஒன்பது லட்சம் பீப்பாயும், ஏப்ரல் மாதத்திற்கு 12 லட்சம் பீப்பாயும், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஏற்கனவே வழங்க முன்வந்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் சேர்ந்து பணியாற்ற ஒரு மதிப்புமிக்க தளத்தை இந்த பங்கேற்பு வழங்கும்.  அத்துடன் நவீனத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளவும் இது வழிவகுக்கும்.

மங்களூரில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் முதலீடு செய்வது குறித்து, இந்திய ஸ்ட்ரேடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் நிறுவனம் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் இரண்டாவதாகும்.  மங்களூரில் உள்ள 58 கோடியே 60 லட்சம் பீப்பாய்கள் (0.81 எம்.எம்.டி) திறன் கொண்ட தரைக்கு அடியிலான சேமிப்புக் கிடங்கில் கச்சா எண்ணெயை நிரப்புவதில் 400 மில்லியன் டாலரில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் முதலீடு செய்யும்.  இந்தச் சேமிப்புக் கால அளவு மூன்றாண்டுகளாகும்.  அதன்பின்னர் இரண்டு இரண்டாண்டுகளுக்கு தானாக நீட்டிக்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நக்யான் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் அந்த நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.


(Release ID: 1520454) Visitor Counter : 237


Read this release in: English