ஆயுஷ்

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயுர்வேதம் மற்றும் மூலிகை பொருட்கள் தொடர்பான தவறான விளம்பரங்கள் குறித்த 804 புகார்கள் வந்துள்ளன: ஆயுஷ் அமைச்சர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2018 6:04PM by PIB Chennai

ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்கள் தொடர்பான தவறான விளம்பரங்கள் பற்றிய கூடுதலான புகார்கள் வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் 2015 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை மூலிகை, ஆயுஷ் பொருட்கள், சேவைகள், மற்றும் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்கள் குறித்த 804 புகார்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு வந்துள்ளன.  மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை பராமரித்து வரும், ‘தவறான விளம்பரங்களுக்கு எதிரான குறைகள் (காமா)’ வலைதளத்தில் இந்த புகார்கள் வந்துள்ளதாக இந்திய விளம்பர தரச்சபை தெரிவித்துள்ளது.

      1940 மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளில் மூலிகை மருந்துகள் குறித்த தெளிவான வரையறை ஏதுமில்லை என்பது உண்மைதான்.  ஆனால், 2015 நவம்பர் 30 ஆம் தேதி முதல் 1945 மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் விதிகளின் 2 (eb) பிரிவின்படி, ஃபைட்டோ பார்மசீட்டுக்கள் மருந்துகள் என்ற பெயரில் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்களில் இருந்து கிடைக்கும் மருந்துகளின் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மூலிகை செடிகளிலிருந்து எடுக்கப்படும் பொருட்களை தூய்மை ஆக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் நான்கு உயிரி அல்லது உயிரி வேதியியல் பொருட்கள் கலந்து செய்யப்படும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவர இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 1954 மருந்துகள் மற்றும் மந்திர நோய்தீர்ப்பு பொருட்கள் தவறான விளம்பரங்கள் சட்டத்தின்படி, மருந்து என்பதற்கு வரையறையாக உணவு அன்றி அனைத்து மருந்து பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மூலிகை மருந்து விளம்பரங்களுக்கான சட்ட குறைபாடுகள் ஏதுமில்லை என்று கூறலாம்.  தவறான விளம்பரங்களை கண்காணிக்கவும், அவற்றின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளவும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தேடுதல், பறிமுதல், ஆவண ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என அவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1954 மருந்துகள் மற்றும் மந்திர நோய்தீர்ப்பு பொருட்கள் தவறான விளம்பரங்கள் சட்டத்தின் 8 (1) பிரிவின்படி, இந்த அதிகாரிகள் தவறான விளம்பரங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 

ஆயுஷ் மருந்துகள் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்க அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் விஷயம் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வந்துள்ளது.  22 மாநிலங்கள் சட்டப் பிரிவை அமல்படுத்த 621 அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் சட்ட பிரிவுகளை அமல்படுத்தவும், தவறு இழைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆயுஷ் மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்களை தானாக முன்வந்து கண்காணிப்பதற்காக விளம்பர தரங்கள் சபையுடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகியவற்றில் ஆயுஷ் மருந்து தொடர்பான தவறான விளம்பரங்கள் இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட மாநில கட்டுப்பாட்டு அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் உதவும். 

ஆயுர்வேதம் மற்றும் இதர மருந்துகள் விற்பனைக்கென தவறான விளம்பரங்கள் வெளியிடுவதை பொதுநலன் கருதி தவிர்ப்பதற்காக ஊடக கட்டுப்பாட்டாளர்களிடம் அணுகி கோரிக்கை விடப்பட்டது.   இது சம்பந்தமாக 2017 ஜுலை 12 ம் தேதி தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து ஊடகங்களுக்கும் தகுதியான உற்பத்தி உரிமம் உள்ள பொருட்களுக்கு மட்டுமே விளம்பரம் அளிக்குமாறும், தவறான விளம்பரங்களை ஏற்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கியது.  1954 மருந்துகள் மற்றும் மந்திர நோய்தீர்ப்பு பொருட்கள் தவறான விளம்பரங்கள் சட்டம் மற்றும் விதிகளுக்கு எதிராக உள்ளவற்றை ஏற்கவேண்டாம் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது.  காமா வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மற்றும் மூலிகை மருந்து தொடர்பான தவறான விளம்பரம் குறித்த நுகர்வோர்களின் புகார்கள் ஆயுஷ் அமைச்சகம் நியமித்த இணைப்பு அதிகாரியால் ஆய்வு செய்யப்பட்டன.  இந்த ஆய்வின் அறிக்கை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

மக்களவையில் இன்று கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை (தனிபொறுப்பு) இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸ்ஸோ நாயக் இத்தகவலைத் தெரிவித்தார்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1520318) வருகையாளர் எண்ணிக்கை : 391
இந்த வெளியீட்டை படிக்க: English