நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீதான நடவடிக்கை
காமா (GAMA)இணைய தளத்திற்கு, ஏப்ரல் 2015 முதல் ஜனவரி 2018 வரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிராக 6230 புகார்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2018 6:55PM by PIB Chennai
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை),யின் சார்பாக ”காமா’ (GAMA -Grievance Against Misleading Advertisements)"விற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைப் பற்றிய புகார்களைக் கையாள இந்த இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
”காமா”(GAMA) தளத்தில் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்ககை எடுக்க “விளம்பரங்களுக்கான இந்திய தரநிர்ணய மன்றத்துடன் -ஏஎஸ்சிஐ” (ASCI -Advertising Standards Council of India) ”காமா”(GAMA) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட புகார்கள் ஏஎஸ்சிஐ (ASCI) யின் நுகர்வோர் புகார் மன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
புகார்கள் உறுதிசெய்யப்பட்ட வழக்குகளில், விளம்பரதாரர்கள் தவறான விளம்பரங்களை மாற்ற அல்லது திரும்பப் பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு இணங்காத நிலையில், ஏஎஸ்சிஐ (ASCI), தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளிக்கிறது.
2015 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், காமா(GAMA) இணையதளத்தில் மொத்தம் 6230 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 1262 புகார்கள் நிராகரிக்கப்பட்டு 3146 புகார்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1148 புகார்கள் கூடுதல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5.1.2018 அன்று நாடாளுமன்றத்தில் ”நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2018” அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தவும் "மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA- Central Consumer Protection Authority)" என்று அழைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பு ஒன்றை நிறுவுவது இந்த மசோதாவின் நோக்கமாகும்.
இந்த மசோதாவின் படி தவறான விளம்பரங்களை நிறுத்தவோ,மாற்றவோ அல்லது அபராதம் விதிக்கவோ, சம்பந்தப்பட்ட வர்த்தகர் உற்பத்தியாளர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர், விளம்பரதாரர் அல்லது பதிப்பாளர் ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கவோ தேவையான அதிகாரம் சிசிபிஏ (CCPA) விற்கு தரப்பட்டுள்ளது.
மேலும் நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பட்சத்தில் சம்பந்தபட்டவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த தகவல் மக்களவையில் இன்று நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக மாநில அமைச்சர் சி.ஆர்.சவுதரி அவர்களால் வழங்கப்பட்டது.
(வெளியீட்டு அடையாள எண்: 1519920)
வருகையாளர் எண்ணிக்கை : 140