தேர்தல் ஆணையம்

மேகாலயா நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அட்டவணை அறிவிப்பு – 2018,

Posted On: 18 JAN 2018 1:05PM by PIB Chennai

மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளின் பதவிக்காலங்கள் கீழ்க்கண்டவாறு நிறைவடைகின்றன:

மேகாலயா

06.03.2018

நாகலாந்து

13.03.2018

திரிபுரா

14.03.2018

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324, 172(1) மற்றும் 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 15வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மேகலாயமா, நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளுக்கு அவற்றின் இப்போதைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக புதிய சட்டப்பேரவைகளை அமைப்பதற்காக பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியாகவேண்டும்.

1. சட்டப்பேரவைத் தொகுதிகள்:

2008ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகள் தொகுதிகளின் மறுவரையறை ஆணைப்படி தீர்மானிக்கப்பட்டவாறு மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

மாநிலம்

மொத்த சட்டப்பேரவை  தொகுதி எண்ணிக்கை

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டவை

 பழங்குடியினருக்கு

ஒதுக்கப்பட்டவை

மேகாலயா

60

---

55

நாகாலாந்து

60

---

59

திரிபுரா

60

10

20

2. வாக்காளர் பட்டியல்கள்:

தூய்மையான மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்தான் நேர்மையான, சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த தேர்தலுக்கு அடித்தளம் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. அதற்காக வாக்காளர் பட்டியல்களின் தரம், ஆரோக்கியம், வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் கவனம் செலுத்திவருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஆணையம், தகுதியுள்ள, ஆனால் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் முறைப்படி சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், 1.1.2018ஆம் நாளைத் தகுதி காணும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சுமூகமாகவும், சிறப்பாகவும் உள்ளடக்கிய வகையிலும் செய்து முடிக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள முக்கியமான குறைகளை அடையாளம் காணவும், சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் அவற்றைக் களையவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கான அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் தற்போதைய வாக்காளர் பட்டியல்கள் 1.1.2018 ஆம் நாளைத் தகுதி காணும் நாளாகக் கொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள் 5.1.2018 அன்று வெளியிடப்பட்டது. மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியல்கள் 10.1.2018 அன்று வெளியிடப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல்களின் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல்களின் படி, ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

01/01/2018 ஆம் தேதியைத் தகுதி காணும் நாளாகக் கொண்டு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்

மாநிலம்

வரைவுப்பட்டியலின்படி  மொத்த வாக்காளர்கள்

 

இறுதிப்பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள்

மேகாலயா

17,68,515

18,30,104

நாகாலாந்து

 

11,63,388

11,89,264

திரிபுரா

25,05,997

25,69,216

 

அ. புகைப்பட வாக்காளர் பட்டியல் :

இந்தப் பொதுத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டவுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் புகைப்பட வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் விழுக்காடு பின்வருமாறு:

 

மாநிலம்

புகைப்பட வாக்காளர் பட்டியல் விழுக்காடு

மேகாலயா

100 %

நாகாலாந்து

97.92 %

திரிபுரா

100 %

 

ஆ. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள்:

தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காணவேண்டியது கட்டாயமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் புகைப்பட வாக்காளர்கள் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவார்கள். மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளின் விழுக்காடு பின்வருமாறு:

 

மாநிலம்

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விழுக்காடு

மேகாலயா

100 %

நாகாலாந்து

97.92 %

திரிபுரா

100 %

இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாத வாக்காளர்கள் அனைவரும் உடனடியாக அவர்களின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அதிகாரிகளிடமிருந்து புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எந்தவொரு வாக்காளரும் தமது வாக்குரிமையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான கூடுதல் ஆவணங்களை அனுமதிப்பது குறித்த அறிவிப்புகள் தனியாக வெளியிடப்படும்.

இ. புகைப்பட வாக்காளர் சீட்டுகள்:

வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடி மற்றும் பிற விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நோக்குடன் வாக்காளரின் புகைப்படத்துடன் கூடிய (வாக்காளர் பட்டியலில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்) புகைப்பட வாக்காளர் சீட்டுகள் தேர்தல் நாளுக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியால் வழங்கப்படும். புகைப்பட வாக்காளர் சீட்டுகள் வழங்கப்படும் பணியை மிகவும் உன்னிப்பாகவும்

தீவிரமாகவும் கண்காணிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளரை அடையாளம் காணும் பயன்பாடு மற்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதை மேம்படுத்துதல், விழிப்புணர்வு, வழிகாட்டுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புகைப்பட வாக்காளர் சீட்டுகளின் அளவு, வடிவம், அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் எந்தமொழிகளில் பதுப்பிக்கப்பட்டுள்ளதோ, அதே மொழியில்தான் புகைப்பட வாக்காளர் சீட்டுகளும் அச்சிடப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகைப்பட வாக்காளர் அடையாள சீட்டுகள் வாக்குச்சாவடி நிலையிலான அதிகாரிகள் மூலம் முறையாகவும், சிறப்பாகவும், குறித்த காலத்திற்குள்ளும் வழங்கப்படவேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையம் சிறப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. வாக்குச் சாவடி நிலையிலான அதிகாரிகள் முன்கூட்டியே அச்சிடப்பட்ட வாக்காளர் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும், யாருக்கெல்லாம் புகைப்பட வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்களின் கையெழுத்துக்களை அதில் பெறவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஈ. வாக்காளர் வழிகாட்டி சிற்றேடு:

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் தேதி மற்றும் நேரம், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் தொடர்பு விவரம், முக்கியமான இணையதளங்கள், உதவிக்கான தொலைபேசி எண்கள், வாக்குச்சாவடியில் அடையாளத்தை சரிபார்ப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்கள், வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் செய்யவேண்டியவை மற்றம் செய்யக் கூடாதவை குறித்த விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் அடங்கிய வாக்காளர் வழிகாட்டி சிற்றேடு ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும். இந்த சிற்றேடுகள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளால் புகைப்பட வாக்காளர் சீட்டுடன் சேர்த்து வழங்கப்படும்.

3. வாக்குச்சாவடிகள் மற்றும் சிறப்பு வசதிகள்:

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள் பின்வருமாறு:

 

 

மாநிலம்

2013ஆம் ஆண்டில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை

2018ஆம் ஆண்டில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை

 

உயர்வு விழுக்காடு

மேகாலயா

2485

3082

24%

நாகாலாந்து

2023

2187

8.10%

திரிபுரா

3041

3214

5.69 %

அ. வாக்குச்சாவடிகளில் உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள்:

வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் வசதிகளின் அளவை ஏற்கெனவே இருந்த குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் என்ற நிலையிலிருந்து உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் என்ற நிலைக்கு தேர்தல் ஆணையம் மேம்படுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கூடாரம், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான சாய்தளப்பாதை, தரப்படுத்தப்பட்ட அளவிலான வாக்களிக்கும் இடம் உள்ளிட்டவை அடங்கிய உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் வாக்காளர்களின் வசதிக்காக அமைக்கப்படுவதை உறுதி செய்யும்படி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றன.

 

ஆ. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள்:

அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்தில் அமைக்கப்படுவதையும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக சாய்தளப்பாதை அமைக்கப்படுவதையும் உறுதி செய்யும்படி தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மற்ற வசதிகளையும் வழங்கும்படி ஆணையிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படவேண்டும். தேர்தல் நாளன்று அவர்கள் எந்த சிக்கலும் இல்லாமலும், வசதியாகவும் வாக்களித்துச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் / மாவட்ட தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் உதவி செய்யவேண்டும். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் நுழைய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக வாக்குச்சாவடி நுழைவு வாயிலுக்கு மிக அருகில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும். செவித்திறன் மற்றம் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் தொடர்பாக தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இ. மகளிருக்கான சிறப்பு ஏற்பாடுகள்:

ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசைகள் இருக்கும். ஆண் வாக்காளர்களுக்கும், பெண் வாக்காளர்களும் முறைவைத்து வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரு பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இயலாத / மூத்த வாக்காளர்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண் வாக்காளர்கள் ஆகியோருக்கு வரிசையைக் கடந்து முன்னுரிமை அடிப்படையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

ஈ. வாக்காளர்களுக்கு உதவும் வகையிலான சுவரொட்டிகள்:

1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தும் விதிகளில் 31வது விதியின்கீழ் நிறைவேற்றப்படவேண்டிய சட்டபூர்வத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களின் விழிப்புணர்வு மற்றும் தகவலுக்காக வழங்கப்படவேண்டிய துல்லியமான விவரங்களை வழங்குவதற்காகவும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தரப்படுத்தப்பட்ட வாக்காளர்களுக்கு உதவும் சுவரொட்டிகள் ஒட்டப்படும். வாக்குச்சாவடி, குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகள், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் முக்கிய தேர்தல் பணியாளர்களின் தொடர்பு விவரங்கள், அனுமதிக்கப்படும் அடையாள ஆவணங்கள், வாக்குப்பதிவு முறையைச் சித்தரிக்கும் காட்சிகள், வாக்குச்சாவடியை ஒட்டிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள், தேர்தல் நாளன்று செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற தேர்தல் நாளன்று தேவைப்படும் வாக்காளர் சார்ந்த தகவல்களை வழங்கும் வகையில் 4 சுவரொட்டிகள் வடிவமைக்கப்படும். இந்த 4 சுவரொட்டிகளும் தேர்தல் நடக்கும் மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அனைவருக்கும் தெரியும் வகையில் ஒட்டப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உ. வாக்காளர் உதவி மையங்கள்:

ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியிலும் வாக்குச்சாவடி நிலை அதிகாரி / அதிகாரிகள் கொண்ட குழுவுடன் கூடிய வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடி எண், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண் ஆகியவற்றைக் கண்டறிந்து தெரிவிப்பதற்காக இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் நாளன்று வாக்காளர்கள் எளிதில் அடையாளம் கண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை கோரும் வகையில், வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வளாகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய இடத்தில் பெரிய அளவிலான அறிவிப்புப் பலகையுடம் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.

ஊ. வாக்களிப்பின் ரகசியத்தை உறுதி செய்வதற்காக வாக்களிக்கும் பகுதியில் உள்ள மறைப்பின் உயரத்தை அதிகரித்தல்:

தேர்தலின்போது வாக்களிப்பதின் ரகசியத் தன்மையை பராமரிக்கவும், வாக்களிக்கும் பகுதியில் அமைக்கப்படும் மறைப்பு ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்யவும் வசதியாக, அந்த மறைப்பின் உயரத்தை இப்போதுள்ள 24 அங்குலத்திலிருந்து 30 அங்குலமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இத்தகைய மறைப்புகள் 30 அங்குலம் உயரமுள்ள மேசையின் மீது வைக்கப்பட வேண்டும். ஸ்டீல் கிரே வண்ணத்தில் மறுமுறை பயன்படுத்த முடியாத, ஊடுருவி பார்க்க முடியாத பிளாஸ்டிக் அட்டைகள்தான் இத்தகைய மறைப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இத்தகைய தரப்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான மறைப்புகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்துவதன் மூலம் வாக்களிப்பதின் ரகசியத் தன்மை மேம்படுத்தப்படும், சிறிய அளவிலான பிறழ்சிகள் அகற்றப்படும், வாக்குச்சாவடிகளுக்குள் மறைப்புகளைத் தயாரிப்பதில் சீரற்ற தன்மை நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.

4. அனைத்து மகளிரால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள்:

பாலின சமத்துவம், தேர்தல் நடைமுறையில் பெண்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு ஆகியவற்றின் மீது தேர்தல் ஆணையம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், முடிந்தவரை ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியை முற்றிலும் மகளிரால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடியாக அறிவிக்கும்படி தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்படும் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களும் பெண்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை:

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலத் தேர்தல்களில் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத் தன்மையையும் அதிகரிக்கும் நோக்குடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை கருவிகளும் பயன்படுத்தப்படும். தேர்தல்கள் சுமூகமாக நடப்பதற்கு வசதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளும் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே செய்துள்ளது. இந்த இரு கருவிகளின் முதல்நிலை சரிபார்ப்பு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். அதன்பின் இரண்டாம்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை கருவிகளின் சரிபார்ப்பும் நடைபெறும். முதல்நிலையில் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகள் ஆகியவை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அதிகாரியால் ஒவ்வொரு தொகுதிக்கும் வரிசையற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். இரண்டாம் நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகியவை வேட்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வரிசையற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீட்டுப் பணி தேர்தல் ஆணையத்தால் அமர்த்தப்பட்ட பொதுப் பார்வையாளர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் / அவர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு இந்தப் பணி நடைபெறும். இந்தப் பணியின் போதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் / அவர்களது முகவர்கள் இந்தக் கருவிகளை சோதனையிட்டுச் சரிபார்க்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரியால் அனைத்து  வேட்பாளர்கள் முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட  வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவியில் சேர்ந்துள்ள காகிதச் சீட்டுகள் எண்ணப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இவ்வாறாக, மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் காகிதச் சீட்டுகள் எண்ணப்படும்.

அ. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளில் நோட்டா:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடைசி வேட்பாளரின் பெயருக்குக் கீழ் நோட்டா சின்னத்திற்கான பொத்தான் இருக்கும். எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டா பொத்தானை அழுத்தி தங்களின் வாக்குரிமையை செலுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நோட்டாவுக்காக புதிய சின்னத்தை வழங்கியுள்ளது. இது தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சின்னம் வாக்காளர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த உதவியாக இருக்கும்.

 

நோட்டா சின்னம்

 

 

நோட்டாவுக்குப் புதிய சின்னம் வழங்கப்பட்டிருப்பதை வாக்காளர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்ற அனைவருக்கும் தெரியபடுத்தவும், நோட்டா வசதி மற்றும் அதன் சின்னம் குறித்து தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து களநிலை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

. வாக்குப்பதிவு இயந்திர வாக்குச்சீட்டுகளில் வேட்பாளர்களின் புகைப்படங்கள்:

வேட்பாளர்களை வாக்காளர்கள் அடையாளம் காண வசதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டுகளிலும், அஞ்சல் வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படங்களையும் அச்சிடுவதற்கான கூடுதல் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரே பெயர் கொண்ட மற்றும் ஒரே மாதிரியான பெயர் கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும்போது குழப்பம் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, அண்மையில் எடுக்கப்பட்ட ஸ்டாம்ப் அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் வழங்கவேண்டும். தேர்தலை எதிர்கொள்ளும் 3 மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளில் வாக்காளர் படத்தை அச்சிடும் முறை இப்போதுதான் முதன்முறையாக கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போதிய அளவில் விளம்பரம் செய்யப்படுவதை உறுதி செய்யும்படி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

6. தேர்தல் அதிகாரிகளைப் பணியமர்த்தல் மற்றும் வரிசையற்ற முறையில் ஒதுக்கீடு செய்தல்:

தேர்தல் பணியாளர்கள் குழு, தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் வரிசையற்ற முறையில் தேர்வு செய்து அமைக்கப்படும். இதற்காக 3 கட்டங்களைக் கொண்ட வரிசையற்ற தேர்வு முறை கடைபிடிக்கப்படும். முதலில், மாவட்ட அளவில் தகுதியான அதிகாரிகளைக் கொண்ட பரவலான அதிகாரிகளைக் கொண்ட தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். அதிலிருந்து தேவைப்படும் தேர்தல் அதிகாரிகளில் குறைந்தது 120 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இரண்டாம் கட்டமாக பயிற்சிபெற்ற அதிகாரிகளிலிருந்து வரிசையற்ற முறையில் தேர்வு செய்யும் மென்பொருட்கள் மூலம் தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் சரியான எண்ணிக்கையில் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்றாம் கட்டமாக தேர்தல் பணிக்கு அதிகாரிகள் புறப்படுவதற்கு முன், ஒவ்வொரு அதிகாரிக்கும் எந்த வாக்குச்சாவடி என்பது வரிசையற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் நிறுத்தப்படும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோரும் இதே முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7. ராணுவத்தில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குமுறை:

2018ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல்களின் சுருக்க திருத்தத்திற்கான அட்டவணையைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆயுதப்படைகளில் பணியாற்றும் 9,99,468 வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல், 1.1.2018 அன்று வெளியிடப்பட்டது. முப்படை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சரியான விவரங்களுடன் சேர்ப்பதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. முப்படை வாக்காளர்களின் இறுதிப்பட்டியல் 31.1.2018 அன்று வெளியிடப்படும். மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மாநிலங்களுக்கான முப்படை வாக்காளர் வரைவுப்பட்டியல் 15.12.2017 அன்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 15.1.2018 அன்றும் வெளியிடப்பட்டன.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையிலும், கோவா மாநிலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும், மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குமுறை பயன்படுத்தப்பட்டது. அண்மையில் 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களிலும் இந்தமுறை பயன்படுத்தப்பட்டது. மேகாலயா, நாகலாந்து, திரிபுரா சட்டப்பேரவைகளுக்கு நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல்களிலும் மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குமுறையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

8. வேட்பாளர்களின் உறுதிமொழி பத்திரங்கள்:

. அனைத்து பத்திகளும் நிரப்பப்படவேண்டும்:

121 / 2008 என்ற எண் கொண்ட ரிட் வழக்கில் (Resurgence India Vs Election Commission of India and Another) 13.9.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வேட்பு மனுவுடன் உறுதிமொழித் பத்திரங்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யும்போது, அதில் அனைத்துத் தகவல்களும் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்ப்பது தேர்தல் அதிகாரியின் கடமையாகும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து பத்திகளையும் வேட்பாளர்கள் நிரப்பவேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. உறுதிமொழி பத்திரத்தில் ஏதேனும் ஒரு பத்தி நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருந்தால், அனைத்துப் பத்திகளும் நிரப்பப்பட்ட புதிய உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி அறிவிக்கை அனுப்பவேண்டும். அதன்பிறகும் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அனைத்து பத்திகளும் நிரப்பப்பட்ட முழுமையான உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தவறினால், வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அவரது மனு தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தும்படி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருக்கிறது.

. நிலுவையின்மை சான்றுடன் கூடுதல் உறுதிமொழிப் பத்திரம்:

4912 / 1998 என்ற எண் கொண்ட ரிட் வழக்கில் ((KRISHAK BHARAT VS UNION OF INDIA AND ORS)) 7.8.2015 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும்போது,  மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அரசு குடியிருப்பில் குடியிருந்தால் அதற்கான அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் தாம் எந்த நிலுவையும் வைக்கவில்லை என்று நிலுவையின்மை சான்றிதழ் பெற்று அதனுடன் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் கூடுதல் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்படும் படிவம் எண் 26 தவிர, கூடுதலாக இந்த உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும்; இந்தப் பத்திரம் உறுதிமொழி ஆணையர் அல்லது நோட்டரி பப்ளிக் அல்லது முதல்நிலை மாஜிஸ்டிரேட்டால் சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் உறுதிமொழி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான அதிகபட்ச காலவரம்பு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று பிற்பகல் 3 மணியாகும். நிலுவையின்மை சான்றுடன் கூடுதல் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யத் தவறுவது 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 36வது பிரிவின்படி குறையாகக் கருதப்படும்.

9. மாதிரி நடத்தை விதிகள்:

மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன. மாதிரி நடத்தை விதிகளின் அனைத்துப் பிரிவுகளும் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மேகாலயமா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில அரசுகளுக்கும் பொருந்தும். இந்த மாநிலங்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் / கொள்கை முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசுக்கும் மாதிரி நடத்தை விதிகள் பொருந்தும்.

மாதிரி நடத்தை விதிகள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நடத்தை விதிகள் மீறப்படுவது கடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிமுறைகள் அனைத்தையும், அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் / பிரதிநிதிகள் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. தவறான புரிதல்கள் அல்லது போதிய தகவல் இல்லாமை அல்லது போதுமான புரிதலின்மையை தவிர்க்கும் வகையில் இவ்வாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது அரசு இயந்திரம் / பதவிகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் 72 மணிநேரத்தில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தவும், வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 72 மணிநேரத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் கடுமையான செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விரைவான, சிறப்பான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை களத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளின் வடிவத்தில் இவை வெளியிடப்பட்டுள்ளன.

10. தொடர்புத்திட்டம்:

தேர்தல்களைச் சுமூகமாக நடத்தவும், தேர்தல் நாளன்று உடனுக்குடன் தலையிட்டு திருத்தங்களை மேற்கொள்ளவும், மாவட்ட / தொகுதி அளவில் மிகச்சரியான தொடர்புத்திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதற்கு தேர்தல் ஆணையம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த நோக்கத்திற்காக மாநிலத் தலைநகரங்களில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள், பி.எஸ்.என்.எல் / எம்.டி.என்.எல். அதிகாரிகள் மற்றும் அந்த மாநிலத்தில் சேவை வழங்கும் பிற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும்படி மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு மதிப்பிடப்பட்டு, எந்தெந்தப் பகுதிகளில் தொலைத்தொடர்பு பலவீனமாக உள்ளது என்பதை அடையாளம் காணமுடியும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் சிறப்பான தகவல் தொடர்புத் திட்டத்தைத் தயாரிக்கும்படியும், தொலைத்தொடர்பு கட்டமைப்பு பலவீனமாக உள்ள பகுதிகளில் செயற்கைக்கோள் தொலைபேசிகள், வயர்லஸ் கருவிகள் மற்றும் சிறப்புத் தொடர்பாளர்களை பணியமர்த்தி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

11. வீடியோ பதிவு / இணைய ஒளிபரப்பு / கண்காணிப்பு கேமராக்கள்:

அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்படவேண்டும். இதற்காக போதுமான அளவு வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களையும், கேமரா பதிவுக்குழுக்களையும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தயார் செய்வார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களைப் பரிசீலித்தல், சின்னம் ஒதுக்கீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு மற்றும் இருப்பு வைத்தல், தேர்தல் பரப்புரையின்போது நடைபெறும் முக்கியமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தபால் வாக்குச்சீட்டுகளை பிரித்து அனுப்பும் நடைமுறை, அடையாளம் காணப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறை, வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி, வாக்கு எண்ணிக்கை ஆகியவை வீடியோ பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய நிகழ்வுகளில் அடங்கும். மேலும், முக்கியமான எல்லைச் சோதனை நிலைகள் மற்றும் நிலையான சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் கண்காணிப்புக்காகவும், உளவு பார்ப்பதற்காகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். இவைதவிர, பதற்றமான வாக்குச்சாவடிகள், பதற்றமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் ஆகியவற்றில் வாக்குப்பதிவின் ரகசியத் தன்மையை மீறாத வகையில் தேர்தல் நடைமுறைகளை உன்னிப்பாக கண்காணிக்க வசதியாக இணைய ஒளிபரப்பு, கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ பதிவு, டிஜிட்டல் கேமரா பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

12. சட்டம் & ஒழுங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் படைகளை பணியமர்த்துதல்:

தேர்தலை நடத்துவது, விரிவான பாதுகாப்பு மேலாண்மையை உள்ளடக்கியதாகும். பாதுகாப்பு மேலாண்மையில் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப் பதிவுக் கருவிகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையின் பாதுகாப்பும் அடக்கமாகும். சுதந்திரமான நேர்மையான மற்றும் நம்பத்தகுந்த வகையில், சுமூகமாகத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற அமைதியான, சாதகமான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக உள்ளூர் காவல்படைக்கு உதவும் வகையில் உள்ளூர் காவல் படையுடன் மத்திய ஆயுத காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். எனவே, தேர்தல் அட்டவணை தயாரித்தல், பல கட்ட தேர்தல்களை வரிசைப்படுத்துதல், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துதல் என்பன உள்ளிட்ட விவரங்கள் பாதுகாப்புப் படையினரின் இருப்பு மற்றும் படை மேலாண்மையை மனதில் கொண்டு தீர்மானிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று எந்தவிதமான குறுக்கீடும், தேவையற்ற தாக்கமும் / அச்சுறுத்தலும் இல்லாமலும் வாக்களிப்பதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

களநிலை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய ஆயுதக் காவல்படைகளும், பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில ஆயுதப்படைகளும் இந்த தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். மத்திய ஆயுதக் காவல் படையினர் முன்கூட்டியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துதல், கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், மறுஉறுதி செய்வதற்குமான நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அப்பகுதிகளைப் பழகிக்கொள்ளும் வகையிலும், உள்ளூர் படையினருடன் இணைந்து செயல்படுவதற்காகவும் தரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மரபு வரிசை மற்றும் செயலாக்க நடவடிக்கைகளை அறிந்துகொள்ள வசதியாக, மத்திய ஆயுதக் காவல் படையினர் முன்கூட்டியே பணியமர்த்தப்படுவார்கள். தேர்தல் நடைமுறையில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மேற்கொண்ட கள எதார்த்த மதிப்பீடுகளின்படி, தேர்தலில் அதிகமாக செலவு செய்யப்படும் தொகுதிகள், மற்ற பதற்றமான பகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றிலும், மத்திய ஆயுதக் காவல்படைகள் / மாநில ஆயுதக் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேர்தலுக்கு சற்று முன்பாக இவர்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிக்குச் சென்று வாக்குச்சாவடிகளுக்கும், வாக்காளர்களுக்கும், வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். இவைதவிர, வாக்கு எண்ணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணிகளிலும், தேவைப்படும் மற்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அமைதியான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்தலை நடத்துவதற்காக இந்தப் படைகளை சிறப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக இவர்கள் பணியமர்த்தப்படும் விதத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாநில காவல்துறைப் பொறுப்பு அதிகாரியும் அன்றாடம் கண்காணிப்பதுடன், அதுகுறித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவது, தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் நடைபெறவேண்டும்.

தேர்தலின்போது சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கும் தேர்தல் ஆணையம் சிறப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. களநிலைமையைத் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. அமைதியான, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் இந்த 3 மாநிலங்களிலும் நடப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தேர்தல் ஆணையம் எடுக்கும்.

13. தேர்தல் செலவுக் கண்காணிப்பு:

தேர்தலில் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை சிறப்பாக கண்காணிக்க வசதியாக, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புப் படைகள், வீடியோ கண்காணிப்புப் படைகள் ஆகியவற்றை உருவாக்குதல், வருமான வரித்துறையின் புலனாய்வுப்பிரிவு இயக்குநரக அதிகாரிகளை  பணியில் ஈடுபடுத்துதல் உள்ளிட்டவை விரிவான, அறிவுரைகளில் அடங்கும். தேர்தல் நடைமுறையின்போது, மது மற்றும் பிற போதைப் பொருட்களின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை இருப்பு வைத்தல் ஆகியவற்றை கண்காணிக்கும்படி, மாநில கலால் துறையினரும், காவல்துறையினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பறக்கும் படைகள் / நடமாடும் குழுவினரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் ஜி.பி.எஸ். கருவிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

அதிகபட்ச வெளிப்படைத்தன்மை, தேர்தல் செலவுகளை எளிதாக கண்காணிக்கும் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக தனி வங்கிக் கணக்கை தொடங்கி அனைத்துச் செலவுகளையும் அந்த கணக்கிலிருந்துதான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதிக அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நுண்ணறிவுத் தகவல்களை திரட்டவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் உள்ள 6 விமானநிலையங்களில், விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவுகளை தொடங்கும்படி வருமான வரித்துறையின் விசாரணை இயக்குநரகத்தை, தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் செலவுக் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில புதிய முன்முயற்சிகள் வருமாறு:

. பணம் பறிமுதல் மற்றும் விடுவித்தலுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறை:

தேர்தலில் தூய்மையைப் பராமரிப்பதற்காக, தேர்தல் நடைமுறையின்போது அளவுக்கு அதிகமான பிரச்சார செலவுகள், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பொருட்களை கையூட்டாக வழங்குதல், சட்டவிரோதமான ஆயுதங்கள், வெடிமருந்துகள், மது, அல்லது சமூக விரோத நடமாட்டம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக பறக்கும் படையினருக்கும், நிலையான காண்காணிப்புக் குழுவினருக்கும் தரப்படுத்தப்பட்ட செயலாக்க நடைமுறை விதிகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொது மக்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் தேவையற்ற தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மாவட்டப் அளவிலான 3 அதிகாரிகளை, அதாவது 1) மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி/ சமுதாய மேம்பாட்டு அதிகாரி/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், 2) மாவட்டக் கருவூல அதிகாரி, 3) மாவட்டக் தேர்தல் அலுவலகத்தில் செலவுகளைக் கண்காணிப்பதற்கான பொறுப்பு அதிகாரி ( குழுவின் அமைப்பாளர்) கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று 29.05.2015 ஆம் தேதியிட்ட 76/Instructions/EEPS/2015/Vol-II  என்ற எண் கொண்ட சுற்றறிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை அல்லது பறக்கும் படைகள் அல்லது நிலையான கண்காணிப்புப் படைகள் பறிமுதல் செய்யும் பொருட்களை  இந்தக் குழுவினர் தானாக முன்வந்து ஆய்வு செய்யலாம். அந்தக் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை/ புகார்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலோபறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்  வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் பிரச்சாரத்துடன் சம்பந்தப்பட்டவை இல்லை என்றால் தரப்படுத்தப்பட்ட செயலாக்க நடைமுறைகளின்படி, அதுதொடர்பான காரண, காரியங்களை விளக்கி   உத்தரவு (Speaking Order)பிறப்பித்த பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க,  குழுவினர் ஆணையிடலாம்.  பறிமுதல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், இந்தக் குழு ஆய்வு செய்துமுடிவு எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை/ புகார் பதிவு செய்யப்படாத நிலையில், தேர்தல் தேதிக்கு 7 நாட்களுக்கு மேல் பணம்/பொருட்கள் பறிமுதல் தொடர்பான எந்த விவகாரமும் நிலுவையில் வைக்கப்படக்கூடாது.

ஆ. பிரச்சார வாகனங்களுக்கான செலவுகளை, அவற்றுக்கு அளிக்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கணக்கிடுதல்:

தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்களைப“ பயன்படுத்திக் கொள்ள தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி வாங்கும் வேட்பாளர்களில் சிலர் அவற்றுக்கான வாடகை அல்லது எரிபொருள் செலவுகளை தங்கள் தேர்தல் செலவில் காட்டுவதில்லை என்ற புகார் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவேபிரச்சாரத்திற்காக வாகனங்களைப“ பயன்படுத்திக் கொள்ள வாங்கப்பட்ட அனுமதியை திரும்ப ஒப்படைப்பதாக தேர்தல் அதிகாரியிடன் வேட்பாளர்கள் தெரிவிக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் எத்தனை வாகனங்களுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என்பதன் அடிப்படையில் அவற்றுக்கான செலவுகளைக் கணக்கிட்டு, அவரது தேர்தல் செலவுக் கணக்கில்  சேர்ப்பது என்று, தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

(இ) கணக்கு சமரசக் கூட்டம்:

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கு தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு முன்பாக, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 26 ஆவது நாளன்று கணக்கு சமரசக் கூட்டம்  மாவட்ட தேர்தல் அதிகாரியால் நடத்தப்படும்.

 (ஈ) வாக்குச்சாவடிக்கு வெளியில் அமைக்கப்படும் வேட்பாளரின் முகாம் அலுவலகச் செலவுகளும் வேட்பாளரின் தேர்தல் செலவுகளில் சேர்க்கப்படும்:

திறமையான, துல்லியமான, நம்பகமான தேர்தல் செலவு கண்காணிப்பை உறுதி செய்யவும், வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்குகள் அவர் உண்மையாக தேர்தலுக்கு செய்த செலவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்யவும் வசதியாக வாக்குச்சாவடிகளுக்கு வெளியில்  அமைக்கப்படும் வேட்பாளரின் முகாம் அலுவலகத்துக்கான செலவுகளை கட்சியின் பொதுப் பிரச்சார செலவுக்கணக்கில் சேர்ப்பதற்கு பதிலாக வேட்பாளரின்  தனிப்பட்ட தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகாம் அலுவலகங்களுக்கான அனைத்து செலவுகளும், அவை வேட்பாளர்/ அவரது தேர்தல் முகவரால்  செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். இது தொடர்பாக 23.12.2016 அன்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதிய 6/ECI/INST/FUNC/EEM/EEPS/2016/Vol. IX  என்ற எண் கொண்ட கடிதத்தின்படி, அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்திய பின்னர், வாக்குச்சாவடிகளுக்கு வெளியில் அமைக்கப்படும் வேட்பாளர்களின் முகாம் அலுவலகங்களுக்கான  செலவு விவரங்களை அறிவிக்கையாக வெளியிடும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

14) வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு:

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்மை 28.02.2014 ஆம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் இந்திய அரசு  திருத்தி அமைத்திருக்கிறது. திருத்தப்பட்ட உச்சவரம்பின்படி, மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில்  சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை  செலவு செய்யலாம். அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களின் செலவுக்கணக்குகளைத்  தாக்கல் செய்ய வேண்டும்.

15) அரசியல் கட்சிகளின் இறுதிக் கணக்குக் தாக்கல்:

சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் அனைத்து தேர்தல் பிரச்சாரச் செலவுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். அவற்றைத் தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்தச் செலவுக் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

16) ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளுதல்:

திறமையான, சிறப்பான தேர்தல் மேலாண்மையை உறுதி செய்வதில் ஊடகங்கள் முக்கியமான கூட்டாளிகள் மற்றும் நமது சக்தியை பலமடங்கு பெருக்கக்கூடியவை என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, ஊடகங்களுடனான ஆக்கப்பூர்வ, முற்போக்கான பயன்பாட்டிற்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அ)  தேர்தலின் போது ஊடகங்களுடன் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அனைத்து நேரங்களிலும் ஊடகங்களுடன் சிறப்பான, சாதகமான தகவல் தொடர்பை பராமரித்தல்.

ஆ) தேர்தல் தொடர்பான தகவல்களும், புள்ளி விவரங்களும் ஊடகங்களுக்கு சரியான நேரத்தில், எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநில அளவில் ஒரு பொறுப்பு அதிகாரியையும், செய்தித் தொடர்பாளரையும் நியமித்து மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பான முறையில் தகவல் வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதில்  உறுதியான, தொடர்ச்சியான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இ) தேர்தல் விதிகள் குறித்து ஊடகங்களுக்கு உணர்த்த திறமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈ) வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதிக் கடிதங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களுக்கும் வழங்க வேண்டும்.

சுதந்திரமான, நேர்மையான, வெளிப்படையான, பங்கேற்புத்தன்மை கொண்ட, அமைதியான, நம்பகமான தேர்தலை நடத்துவதற்கான  முயற்சிகளுக்குத் துணை நிற்பதிலும், உதவுவதிலும்  ஊடகங்கள்  சாதகமான, உயிர்ப்பான, ஆக்கப்பூர்வமான பங்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

17) சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல்:

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தல் நடைமுறையில் அனைத்து பங்குதாரர்களுடனான தகவல் பரிமாற்றத்தையும், ஈடுபாட்டையும் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும்சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும்அவற்றை பொதுமக்களுக்கு அதிக தொடர்பாடல் கொண்டதாகவும், கூடுதல் சுவையானதாகவும் மாற்றுவதற்கு வழிகாட்டவும்,  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

18) பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை தடுத்தல்:

பணம் கொடுத்து செய்தி வெளியிடப்படுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட, மாநில மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைய அளவில் 3 அடுக்குகளைக் கொண்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணம் கொடுத்து செய்தி வெளியிடப்படுவதை தடுப்பது தொடர்பான விரிவான அறிவுரைகள்  தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

19) அரசியல் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே சான்றிதழ்  பெறுதல்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் 28.05.2015 அன்று வெளியிட்ட  491/Media Policy/2015/Communication, என்ற எண் கொண்ட ஆணையில், அனைத்து மின்னணு ஊடகங்கள்/தொலைக்காட்சிகள்/ கேபிள் நெட்வொர்க்குகள்/ தனியார் பண்பலை வானொலி உள்ளிட்ட வானொலிகள்/ திரையரங்குகள்/ ஒலி-ஒளிக் காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வெளியிட எவ்வாறு முன்கூட்டியே சான்றிதல் பெற வேண்டுமோ, அதேபோல், செல்பேசிகளில் மொத்தமாக குறுஞ்செய்தி/ குரல் செய்திகளை அனுப்புவதும் முன்கூட்டியே சான்றிதல் பெறப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

20) முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வுக் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு:

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையின் போது வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகள் தொடரும். நடப்புத் தேர்தலின் போது இந்த நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

முந்தையத் தேர்தல்களில் மிகக்குறைந்த அளவில் வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஆய்வில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட ஐ.எம்.எஃப் (Information, Motivation and Facilitation)] பணிகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு, எந்த ஒரு வாக்காளரையும் தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதும் இந்தப் பணிகளில் அடங்கும்.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் முதன்முறையாக வாக்காளர் சரிபார்ப்பு, காகிதத் தணிக்கைச் சோதனை முறை பயன்படுத்தப்படவிருப்பதால் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்புப் பிரச்சாரம் 2017 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கப்பட்டு விட்டது. இதுதொடர்பான விழிப்புணர்வு விடியோ குறும்படம் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகள், கேபிள் தொலைக்காட்சிகள், வாட்ஸ் - ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமாக திரையிடப்பட்டு வருகின்றன. வானொலி, பாதாகைகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலமும் வாக்காளர் சரிபார்ப்புக் காகிதத் தணிக்கைச் சோதனை முறை குறித்து பரப்புரை செய்யப்பட்டு  வருகிறது. வாக்காளர் சரிபார்ப்புக் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவியுடன் கூடிய வாகனங்கள் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் தொடர்பான தகவல்கள் அதிக அளவு பரப்பப்படுவதையும், தேர்தலில் வாக்காளர்களை அதிக அளவில் பங்கேற்கச்  செய்வதற்கு போதுமான உதவிகள் செய்யப்படுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் உதவித் தொலைபேசி சேவைகள், வாக்காளர் உதவி மையங்கள், இணையம் மற்றும் குறுஞ்செய்தி சார்ந்த  தேடுதல் வசதிகள் ஆகியவை வாக்காளர்களின் உதவிக்காக செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தேதி குறித்த நினைவூட்டும்  சேவைகளையும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி,  வாக்காளர்களுக்கு விழிப்ப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்ந்த, நெறிகளின் அடிப்படையில் வாக்களிப்பது குறித்து ஊக்குவிக்கவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பங்கேற்பது குறித்து வாக்காளர்களுக்கு உதவவும், ஊக்குவிக்கவும் கல்வி நிலைய வளாகங்களில், வளாகத் தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வுக் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு முயற்சிகள் அதிகபட்ச அளவுக்கு  சென்றடைவதற்காக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், குடிமக்கள் சமுதாய இயக்கங்கள் மற்றும் ஊடகங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பு வாக்காளர்களைச் சென்றடையும் வகையில், அவர்களுக்கு ஏற்ற வகையில் தகவல் மற்றும் நோக்கப்படுத்தும் செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னணு, டிஜிட்டல், திறந்தவெளி, அச்சு, நாட்டுப்புறக் கலைகள், மனிதர்களுக்கு இடையிலான உரையாடல், சமூக ஊடகங்கள் என கிடைக்கும் அனைத்து தளங்களும் தகவல் பரப்புதலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

21) தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சியும், திறன் மேம்பாடும்

தேர்தலை நடத்துவது தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதைக் கருத்தில் கொண்டு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆழமான பயிற்சி மற்றும்  திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும்  அனைத்து தேர்தல் பயிற்சியாளர்களும் ‘பயிற்சியாளர்கள் மற்றும் உதவுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தின்’ கீழ் பயிற்சியளிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சி முறைகள்  குறித்து பயிற்சி பெறுவார்கள்.  பல்வேறு நிலைகளில் உள்ள குழுத் தலைவர்களுக்கு தலைமைப் பண்பு குறித்து, பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் இந்த மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் சுமூகமான முறையில் தேர்தலை நடத்தும் திறன் பெற்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

22) மத்தியப் பார்வையாளர்களை நியமித்தல்:

அ) பொதுப் பார்வையாளர்கள்

மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் தேர்தல்கள் சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக போதுமான அளவில் பொதுப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்கும். சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி  பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கும். அவர்கள் பணியமர்த்தப்படும் மாவட்டம்/தொகுதியில்  அவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவை உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரமாக  வழங்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளைக் களைவதற்காக அவர்களை மிகவும் எளிதாக அணுக முடியும். தேர்தல் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவதற்கு முன் தேர்தல் பணிகள் குறித்துப் பார்வையாளர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும்.  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,  வேட்பாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களை அவர்களின் தேர்தல் தொடர்பான குறைகளைக் களைவது குறித்து ஒவ்வொரு நாளும் சந்தித்து பேசுவதற்கான நேரத்தை, தேர்தல் பார்வையாளர்கள் நிர்ணயிப்பார்கள்.

ஆ) காவல் பார்வையாளர்கள்

 மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் தேவை, பதற்றம், கள நிலைமைகள், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புச் சூழல் ஆகியவை குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் மாவட்ட/தொகுதி அளவில் மூத்த இ.கா.ப. அதிகாரிகளை காவல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவாரகள். சுதந்திரமான, நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்காகப் படைகளை நியமித்தல், சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், குடிமை மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காவல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.

இ) செலவுக் கணக்குப் பார்வையாளர்கள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்  செலவுக்கணக்குகளைச் தனியாக கண்காணிப்பதற்கான செலவுக்கணக்குப் பார்வையாளர்கள் மற்றும் உதவிச் செலவுக் கணக்குப் பணியாளர்களைப் போதுமான எண்ணிக்கையில் நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. தேர்தல் நடைமுறையின் தொடக்கம் முதல் இறுதி வரை கட்டுப்பாட்டு அறை, புகார்களை கண்காணிக்கும் அறை, 24 மணி நேர இலவச தொலைபேசி அழைப்புகள் ஆகியவை செயல்பாட்டில் இருக்கும். சந்தேகத்திற்கு இடமான வகையில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கப்படுவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பும்படி வங்கிகள் மற்றும் இந்திய அரசின் நிதி நுண்ணறிவுப் பிரிவுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைச் சிறப்பான முறையில் கண்காணிப்பதற்கு வசதியாக, விரிவான அறிவுறுத்தல்களை, தேர்தல் ஆணையம் தனியாக வெளியிட்டுள்ளது.  அவற்றை www.eci.nic.in  என்ற முகவரியில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

ஈ) நுண் பார்வையாளர்கள்

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி பதற்றம் மிகுந்த பகுதிகளில்  தேர்தல் நாளன்று தேர்தல் நடைமுறைகளை கண்காணிப்பதற்காக மத்திய அரசு/பொத்துத்துறை அதிகாரிகளை நுண் பார்வையாளர்களாகப்,  பொதுப் பார்வையாளர்கள் நியமிப்பார்கள். தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படுவதில் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கைச் சோதனை முறை கருவிகள்  மற்றும் பிற ஆவணங்கள் சீல் வைத்து வாக்குச்சாவடியிலிருந்து அனுப்பப்படும் வரை, அனைத்து நிகழ்வுகளிலும் தேர்தல் ஆணையத்தின் அனைத்து அறிவுறுத்தல்களையும் தேர்தல் அதிகாரிகளும், முகவர்களும் பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்ய, அவற்றை நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால் அதுகுறித்து பொதுப்பார்வையாளருக்கு நேரடியாக தகவல்  தெரிவிப்பார்கள்.

23) எதிர்வரும் பொதுத்தேர்தல்களில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தகவல் தொழில்நுட்பங்கள்:

அ)  சமாதான்: பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் புகார்கள் கண்காணிப்பு அமைப்பு

தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகள், கவலைகள், நடத்தை விதி மீறல்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யும் அனைவருக்கும், தேர்தல் நடைமுறையின் பங்குதாரர்களான அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், குடிமை சமுதாய அமைப்புகள்,  மற்றும் பொதுமக்களால் தெரிவிக்கப்படும் யோசனைகளுக்கும், பொதுவான தளத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் விரிவான, வலிமையான, நம்பத்தகுந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்படி குடிமக்கள் தங்களின் புகார்களை இணையதளம், மின்னஞ்சல், கடிதம், தொலைநகல்,  அழைப்பு மையம் ( அழைப்பு மைய எண் 1950) உள்ளிட்ட பல்வேறு வழிகளில்/ ஆதாரங்கள் மூலம் தாக்கல் செய்ய முடியும். இந்தத் தளத்தில் புகைப்படங்கள்/வீடியோக்கள் ஆகியவற்றை பதிவு ஏற்றம் செய்ய வசதியாக செல்பேசி செயலியும் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆ) சுவிதான்: ஒற்றைச்சாளர அனுமதி முறை

தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து அனுமதிகள்/ ஒப்புதல்களை 24 மணி நேரத்தில் பெறுவதற்காக ஒற்றைச் சாளர மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், வாகனங்கள்,  தற்காலிகத் தேர்தல் அலுவலகம், ஒலிப்பெருக்கி ஆகியவற்றுக்கு  ஒரே தளத்தில் 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். அந்த கோரிக்கைகளை, அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள். இந்த புதிய முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரி அளவில் உட்கோட்ட வாரியாக ஏற்படுத்தப்படும். அனுமதி கோரி விண்ணப்பித்தல், ஆய்வு செய்தல், அனுமதி அளித்தல், கண்காணித்தல் ஆகியவை இந்த முறையில் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், ஹெலிகாப்டர் பயன்பாடு/ இறங்குவதற்கான அனுமதி, ஹெலிபேடுகளை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அனுமதி விண்ணப்பங்கள் குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்பாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இ) சுகம்: வாகன மேலாண்மை அமைப்பு

சுகம் என்பது தேர்தல் பயன்பாட்டுக்கான வாகனங்களின் தேவை மதிப்பீட்டில் தொடங்கி, பணி முடிந்து திருப்பி ஒப்படைக்கப்படுவது மற்றும் அதற்கான வாடகை செலுத்துவது வரையிலான பணிகளை மேலாண்மை செய்வதற்கான, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வாகன மேலாண்மை அமைப்பு ஆகும். வாகனங்களுக்கான வேண்டுகோள் கடிதம் அளித்தல், வாகன விவரங்களை அவற்றின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரின் முகவரி, செல்பேசி எண், வங்கிக் கணக்கு விவரங்களுடன் பராமரித்தல், வாகனங்களை ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட பணிகளையும் இதன் மூலம் செய்யலாம். இந்த தேர்தலில் தேவைப்படும் இடங்களில் இது பயன்படுத்தப்படும்.

ஈ) வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு/ கண்காணிப்பு காமிராக்கள்

பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில்  வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், பணம் வினியோகம் செய்தல், கள்ள ஓட்டு பதிவு செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், தேர்தல் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் வசதியாக, தேர்தல் நடைமுறைகளை நேரடியாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  அதுமட்டுமின்றி, தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைக்க செய்யப்படும் சதித்திட்டங்களை முறியடிக்கும் நோக்கத்துடன் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகள், நாகாஸ் மற்றும் பிற பதற்றமான/ முக்கியமான தொகுதிகளில் தேர்தல் நடைமுறையின் போது இணைய ஒளிபரப்பு மற்றும் சி.சி.டி.வி மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

உ) மின்னணு முறையில் பணம் வழங்குதல்

அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் 1) தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து சிவிலியன்/ காவல்துறை அதிகாரிகளுக்கு குறித்த நேரத்தில் மதிப்பூதியம் வழங்குதல், 2) தேர்தல் பயன்பாட்டுக்காக  கோரப்பட்ட வாகனங்களின் வாடகையை குறித்த நேரத்தில் வழங்குதல் 3) தேர்தல் பணிக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கிய வணிகர்களுக்குக் குறித்த நேரத்தில் பணம் வழங்குதல் ஆகியவற்றுக்கு எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம்  மின்னணு முறையில் பணம் வழங்கும்படி மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருக்கிறது.

24) அதிகாரிகளின் நடத்தை:

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அச்சமோ, விருப்பு வெறுப்போ இல்லாமல், பாகுபாடற்ற முறையில் பணியாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள  அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு அயல் பணியில் அழைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுவார்கள். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் மேற்பாட்டில் இருப்பதுடன் ஒழுங்குடன் செயல்பட வேண்டும். தேர்தல் தொடர்பான பொறுப்புகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அரசு அதிகாரிகளின் நடத்தையும் தேர்தல் ஆணையத்தால்  தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

25) தேர்தல் நாள் கண்காணிப்பு அமைப்பு

தேர்தல் நாள் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தேர்தல் நாள் கண்காணிப்பு அமைப்பின் மூலம் 24 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் கண்காணிக்கப்படும். தேர்தல் பணியாளர்கள் குழுவினர் வாக்குச்சாவடிகளை சென்றடைதல், வாக்குகள் பதிவு செய்யப்படுதல், வாக்காளர்களின் உருவங்கள் ஆகியவை அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் படம் பிடித்து கண்காணிக்கப்படும். இந்த செயலியை ஆஃப் லைனிலும்,  தொடர்புக் கட்டமைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. செயலியை இயக்குபவர் கவரேஜ் பகுதியில் வரும் போது ஆஃப்லைனில்  படம்பிடிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் மையப்படுத்தப்பட்ட சர்வரில் ஒழுங்கமைக்கப்படும். இந்த செயலியின் மூலம் வாக்குப்பதிவு அளவை, பாலின வாரியாகவும், வயது வாரியாகவும், பிரிவு வாரியாகவும் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

26) புதிய முயற்சிகள்

அ) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளின் பயன்பாடு

தேர்தலில் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் நோக்குடன் நடைபெறவுள்ள மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநில தேர்தல்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் தலா ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனைக் கருவிகளில் பதிவான காகிதச் சீட்டுகள் எண்ணப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

ஆ)  அனைத்து மகளிரால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள்

 முடிந்தவரை ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடி முற்றிலும் மகளிரால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடியாக அமைக்கப்படும். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்படும் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களும் பெண்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இ) ராணுவத்தில் பணியாற்றும் வாக்காளர்கள் மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்கு  பயன்படுத்தி வாக்களிப்பார்கள்:

வாக்காளர் பட்டியலில்  பதிவு செய்துள்ள முப்படை வீரர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையிலும், கோவா மாநிலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும், மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குமுறை பயன்படுத்தப்பட்டது. குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களிலும் இந்தமுறை பயன்படுத்தப்பட்டது.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும்  மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்கு  பயன்படுத்தப்படும். இதன்மூலம் 11.01.2018 அன்று வரை  பதிவு செய்துள்ளவாறு  மேகாலயாவில் 2181 படை வாக்காளர்களும்,  நாகலாந்தில் 5044 வாக்காளர்களும்,  திரிபுராவில் 5202 வாக்காளர்களும் புதிய முறையில் வாக்களிப்பார்கள். ராணுவ வீரர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 15.01.2018 அன்று வெளியிடப்படும்.

ஈ) மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியான வாக்குச்சாவடிகள்:

தேர்தல்கள் மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களுக்கு வசதியாகவும், எளிதில் அணுகும் வகையிலும் இருப்பதை உறுதி செய்வதற்காக  வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதிகள் செய்யப்படும்.

27) தேர்தல் அட்டவணை

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை, கல்வி நிறுவனப் பணி நாட்கள், முக்கிய விழாக்கள், சட்டம், ஒழுங்கு நிலைமை, மத்திய படைகளின் இருப்பு, அப்படையினர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல தேவைப்படும் கால அவகாசம், போக்குவரத்து, படைகளை சரியான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்துதல் மற்றும் பிற கள நிலைகள் குறித்த ஆழமான மதிப்பீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களுக்கான அறிவிக்கையை இதனுடன் இணைத்துள்ளவாறு 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகளின்படி வெளியிடும்படி அந்த மாநிலங்களின் ஆளுனர்களுக்கு பரிந்துரை செய்யத் தீர்மானித்துள்ளது.

தேர்தல் நடைமுறையில் அங்கம் வகிக்கும் அனைவரின் தீவிர ஒத்துழைப்பு, நெருக்கமான கூட்டு முயற்சி, ஆக்கப்பூர்வமான கூட்டாண்மை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கோருகிறது. மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 2018-ஆம் ஆண்டில் சுதந்திரமான, நேர்மையான, அமைதியான, உள்ளடக்கிய மற்றும் நம்பகமான பொதுத் தேர்தல்களை நடத்த அனைவரின் ஒத்துழைப்பையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

புதுதில்லி: 18 ஜனவரி, 2018

 

 

இணைப்பு-1

திரிபுரா சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அட்டவணை

 

தேர்தல் பணிகள்

திரிபுரா

அனைத்து 60 சட்டப்பேரவை தொகுதிகள்

தேர்தல் அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுதல்

24.01.2018 (புதன்)

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாள்

31.01.2018 (புதன்)

வேட்புமனுக்கள் பரிசீலனை

01.02.2018 (வியாழன்)

மனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

03.02.2018 (சனி)

வாக்குப்பதிவு நாள்

18.02.2018 (ஞாயிறு)

வாக்கு எண்ணிக்கை

03.03.2018 (சனி)

தேர்தல் நடைமுறைகளை முடிக்க கடைசி நாள்

05.03.2018 (திங்கள்)

 

 

 

இணைப்பு-2

மேகாலயா, நாகலாந்து சட்டப்பேரவைகளின் பொதுத்தேர்தலுக்கான அட்டவணை

 

தேர்தல் பணிகள்

மேகாலயா மற்றும் நாகலாந்து

( இரு மாநிலங்களில் தலா அனைத்து 60 சட்டப்பேரவை தொகுதிகள்)

தேர்தல் அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுதல்

31.01.2018 (புதன்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள்

07.02.2018 (புதன்)

வேட்புமனுக்கள் பரிசீலனை

08.02.2018 (வியாழன்)

மனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

12.02.2018 (திங்கள்)

வாக்குப்பதிவு நாள்

27.02.2018 (செவ்வாய்)

வாக்கு எண்ணிக்கை

03.03.2018 (சனி)

தேர்தல் நடைமுறைகளை முடிக்க கடைசி நாள்

05.03.2018 (திங்கள்)



(Release ID: 1518172) Visitor Counter : 924


Read this release in: English , Hindi