பாதுகாப்பு அமைச்சகம்
என்.எஸ்.சி.என் (கே.என்) அமைப்பின் உயர்நிலைத் தீவிரவாதி நாகாலாந்தில் கைது
Posted On:
24 JAN 2018 5:49PM by PIB Chennai
நாகா தீவிரவாதிகளுக்கு பெருத்த அடியாக, என்.எஸ்.சி.என் ( கிட்டோவி-நியோபாக்) தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூத்த தீவிரவாதி ஜனவரி 23-ம் தேதி கைது செய்யப்பட்டான்.
திமாப்பூர், ஜுனேபோடோ இடையே, மூத்த என்.எஸ்.சி.என் தீவிரவாதியின் நடமாட்டம் இருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை (NIA) அளித்த வேவுத் தகவல் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் (NIA) –வின் கூட்டுப்படை கொஹிமா மாவட்டத்தில் ஏராளமான சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனச் சோதனையில் ஈடுப்பட்டது.
கொஹிமா அருகே ஸூப்சா என்னுமிடத்தில் 23-ம் தேதி நடந்த வாகனச் சோதனையின் போது, டாடா பார்ச்சுனர் வாகனத்தில் (பதிவு எண் NL-07 C 2266 ) வந்த NSCN (KN) பிரிவு தளபதி மற்றும் இரண்டு கூட்டாளிகளை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதான மூத்த தளபதி நாகாலாந்தின் ஜுனேபோடோவைச் சேர்ந்த ஹோஷூஜூ என்பவரின் மகனான அஹேடோ சோப்பி என்று அடையாளம் காணப்பட்டது. அவனுடன் பிடிபட்ட இரண்டு பேர், விட்டி மராக், முஹாஹோட்டோ சுமி என்று தெரியவந்தது.
பிடிபட்ட அஹேட்டோ , என்ஐஏ பதிவு செய்த RC 03/2013/NIA/GUW ஜுனேபோடோ மாவட்ட ஆயுத கொள்ளை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாவான். அவனுக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிபதி கடந்த 2014-ம் ஆண்டு மே 14 மற்றும் 2014 ஜூலை 8 ஆகிய தேதிகளில் ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையின் போது, 56 ரக துப்பாக்கி ஒன்று, 176 துப்பாக்கிக் குண்டுகள், ரூ.1,32,320 மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகள், செல்போன்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

(Release ID: 1518110)
Visitor Counter : 141