சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பிபிஐஎன் மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தம் வேகம் பிடிக்கும் நேரம்.

பயணிகள் வாகனங்களுக்கான இயக்க நடைமுறை வரைவுக்கு வங்கதேசம், இந்தியா மற்றும் நேபாளம், ஒப்புதல்.
சரக்கு வாகனங்கள் இயக்கம் தொடர்பாக மேலும் பல்வேறு சோதனை ஓட்டங்களை மேற்கொள்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Posted On: 15 JAN 2018 5:47PM by PIB Chennai

2015 ஜூன் மாதம் கையெழுத்தான வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாள் (பிபிஐஎன்) மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தங்களுடைய பிராந்தியத்தில் பயணிகள் வாகனங்களை இயக்குவது தொடர்பான நடைமுறை வரைவுக்கு வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஒப்புதல் அளித்துள்ளன. விரைவில் பயணிகள் தொடர்பான நெறிமுறைக்கு உள் ஒப்புதல் நடைமுறையை பூர்த்தி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தி்ன் கீழ், சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, தொடர்பாக மேலும் பல்வேறு சோதனை ஓட்டங்களை மேற்கொள்வது என்றும் இந்நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. பெங்களூருவில் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் நடந்த கூட்டத்தில், இந்நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஏற்பாடு செய்து. இக்கூட்டத்தில் பூடான் நாட்டு அதிகாரிகள் குழுவினர், பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

முக்கியமான மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தம் (எம்விஏ), பிபிஐஎன் நாடுகளின் போக்குவரத்து துறை அமைச்சர்களால், பூடானின் திம்பு நகரில் 2015 ஜூன் 15ல் நடந்த கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டது. எம்விஏ.வின் கீழ், சரக்கு வாகனங்களின் சோதனை ஓட்டம், கொல்கத்தா தாகா அகர்தலா இடையேயும், டெல்லி கொல்கத்தா தாகா ஆகிய வழித்தடத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் பொருளாதார பலன்கள் கீழ் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம், இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவை எம்விஏ ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. மேலும், இம்மூன்று நாடுகளில் எம்விஏ அமலாக்கத்தை தொடங்குவது என்றும் ஒப்புக் கொண்டுள்ளன. பூடான் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த பின்னர், அதில் இணையும்.

மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணைச் செயலாளரும், பெங்களூருக்கு கூட்டத்துக்கு தலைமை வகித்தவருமான திருமதி. தக்‌ஷிதா தாஸ் கூறுகையில், ‘‘பிபிஐஎன் நாடுகளின் வலுவான உறுதிப்பாடு, எம்விஏ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல என்னை உற்சாகப்படுத்துகிறது’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த பிராந்தியத்தில் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும்  பொருளாதார ஒருங்கிணைப்பை உருவாக்கும் வகையில், எம்விஏ.வை வெற்றிகரமாக ஆக்குவதில் இந்தியா தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கட்டும்’’ என்றார்.

ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி), தன்னுடைய தெற்கு ஆசிய துணைப்பிராந்திய பொருளாதார கூட்டுறவு (எஸ்ஏஎஸ்இசி) திட்டத்தின் ஒரு பகுதியாக, பிபிஐஎன் எம்விஏ.வுக்கு தேவையான தொழிநுட்பம், ஆலோசனைகள் மற்றும் நிதி உதவியை வழங்கும். எஸ்ஏஎஸ்இசி திட்டம் என்பது, பிபிஐஎன் நாடுகள், மாலத்தீவு, இலங்கை மற்றும் சமீபத்தில் இணைந்த மியன்மார் ஆகிய நாடுகளை பொருளாதார கூட்டு முயற்சியின் கீழ் ஒருங்கிணைப்பதாகும். எஸ்ஏஎஸ்இசியின் செயலகமாக ஏடிபி இருக்கும்.

இக்கூட்டத்தில், வங்கதேசத்தின் சாலை போக்குவரத்து மற்றும் மேம்பாலங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சபீக்குல் இஸ்லாம், நேபாளத்தின் வெளிப்புற கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து துறை இணைச் செயலாளர் திரு. கேசாப் குமார் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு பயணிகள் நெறிமுறைகள் தொடர்பான வரைவுக்கு ஒப்புக் கொண்டனர். இந்த வரைவில், பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எல்லை தாண்டிய இயக்க நெறிமுறைகள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் நாடுகளின் அரசுகள் உரிய உள் ஒப்புதல் நடைமுறைகள் முடித்த பின்னர், மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். மேலும், இந்நாடுகளின் பிரதிநிதிகள், சரக்கு வாகனங்களின் இயக்க நெறிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்பாக, சரக்கு வாகனங்களை குறிப்பிட்ட பாதைகளில் 2018 ஏப்ரல் முதல் சோதனை ரீதியாக இயக்கவும் ஒப்புக்கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும், இப்பிராந்தியத்தில் போக்குவரத்து வசதியை உருவாக்கும் நடவடிக்கையில் இக்கூட்டம் முக்கிய மைல்கல் என்று வர்ணித்தனர்.


(Release ID: 1516864) Visitor Counter : 148