प्रविष्टि तिथि:
05 JAN 2018 7:26PM by PIB Chennai
தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிதி ஆயோக் அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், உயர் லட்சியம் கொண்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
2022-ம் ஆண்டில் இந்தியாவை மாற்றியமைக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் இலக்கு அடிப்படையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட வளர்ச்சி குறியீடுகளில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களை அதிவேகமாக மாற்றியமைக்க மிகப்பெரும் கொள்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
6 குழுக்களாக அதிகாரிகள், ஊட்டச்சத்து, கல்வி, அடிப்படை கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் நீர்வளம், இடதுசாரி பயங்கரவாதிகளை ஒழித்தல், நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு என்ற கருத்துருக்கள் அடிப்படையில், செயல் விளக்கம் அளித்தனர்.
பல்வேறு மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் முதலாவது அரசு நிகழ்ச்சி என்பதால், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
குறிப்பிட்ட சில பிராந்தியங்கள் பின்தங்கியிருப்பது, அந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்படும் அநீதி என்று அவர் தெரிவித்தார். இந்த சூழலில், வறுமையில் வாடும் மக்களை மேம்படுத்துவதற்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள 115 மாவட்டங்களை மேம்படுத்தும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
மக்கள் நிதித் திட்டம், கழிவறைகளைக் கட்டுதல், கிராமப்புற மின்மயமாக்கல் ஆகிய உதாரணங்களைக் குறிப்பிட்ட பிரதமர், நமது தீர்மானம் உறுதியாக இருந்தால், நமது நாட்டில் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறினார். மேலும், மண் பரிசோதனை போன்ற முழுமையான புதிய முயற்சிகளில் மேற்கொண்ட சாதனைகளை அவர் வெற்றிக்கான உதாரணமாகக் கூறினார்.
இந்தியாவில் தற்போது எல்லையில்லா திறன், எல்லையில்லா சாத்தியக் கூறுகள், எல்லையில்லா வாய்ப்புகள் இருப்பதை அவர் குறிப்பிட்டார். இந்த சூழலில், எளிதாக தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு அரசு அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா-வே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
உயர்மட்ட முடிவுகளால் பலன்கள் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார். எனவே, களத்தில் உள்ள மக்களே பலன்களை அளிப்பதற்காக பங்களிப்பைச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இன்று அளிக்கப்பட்ட செயல் விளக்கத்தில் தெளிவான சிந்தனைகள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள நம்பிக்கைக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பிராந்திய சமநிலையற்ற தன்மை, வரையறை இல்லாமல் அதிகரிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் தெரிவித்தார். பின்தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவது அவசியம். எனவே, இந்தப் பகுதிகளில் எதிர்மறை மனநிலை மற்றும் எண்ண ஓட்டத்தை மாற்றியமைக்க வெற்றி சரித்திரங்கள் முக்கியம் என்று அவர் கூறினார். இதன் முதல் நடவடிக்கை என்பது அவநம்பிக்கை மனநிலையை, நம்பிக்கை கொண்டதாக மாற்றுவதுதான் என்று அவர் விவரித்தார்.
வளர்ச்சிக்கான மக்கள் இயக்கங்களுக்கு ஒரே எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் சந்திக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். இதற்காக மாவட்ட அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். மக்களை ஈடுபடுத்த அமைப்புரீதியான ஏற்பாடுகள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கு தூய்மை இந்தியா திட்டத்தை உதாரணமாகக் கூறினார். வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதில், சாதகமான சூழல் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
உயர் லட்சியம் கொண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உயர் லட்சியங்களை ஒழுங்குபடுத்துவதும், அங்கீகரிப்பதும் அவசியம் என்று பிரதமர் கூறினார். மக்களின் விருப்பங்களை, அரசின் திட்டங்களுடன் இணைக்கும் வகையில், பொதுமக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றி திருப்திஅடையும் வாய்ப்புகள், உயர் லட்சியம் கொண்ட 115 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்களுக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு சவால்களே பாதை என்றும், இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மூன்று மாதங்களில், அதாவது பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதிக்குள் கண்ணுக்குப் புலனாகும் முடிவுகளைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுபோன்று சிறப்பாக செயல்படும் ஒரு மாவட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நேரில் பார்வையிட தான் விரும்புவதாக பிரதமர் கூறினார். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக இந்த 115 மாவட்டங்களால் மாற முடியும் என்று பிரதமர் கூறினார்.
*****