குடியரசுத் தலைவர் செயலகம்
சென்னையில் நடைபெற்ற 32வது பொறியாளர்கள் மாநாட்டில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை வருமாறு
Posted On:
23 DEC 2017 8:40PM by PIB Chennai
நான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டிற்கு முதல் முறையாக வந்துள்ளேன். என்னுடைய வருகையும், இந்திய பொறியாளர்கள் நிறுவனம் தனது 32வது இந்திய பொறியியல் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதுடன் ஒன்றுபட்டிருப்பது பொருத்தமாக உள்ளது. இது நம் நாட்டிற்காக பங்களிப்பினை வழங்கிய பொறியாளர்களின், சமுதாய பொறியாளர்களின் பூமி. உள்ளபடியே நான் சென்னைக்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொறியியல் துறை அறிவியலின் வியப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து வலுவான கட்டமைப்புடன் இணைவதாகும். இந்த பண்புகள் தமிழ் சமுதாயத்துடன் ஒன்றியது. தமிழ் மக்களின் மனதில் பதியத்தக்க வரலாற்றை நாம் கூர்ந்து பார்த்தோமேயானால், நாம் சோழர்களின் கடற்படை மற்றும் கப்பல் வாணிபத்தை காண நேரிடுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய பெருங்கடலில் பயணித்துள்ளனர். இதைவிட புராதனமானது தமிழ் மன்னர்கள் பல்லவர்கள் கட்டியமைத்த மாமல்லபுரத்து சிற்பங்கள். மாமல்லபுரத்தின் நில அமைப்பு மற்றும் அதன் நுட்பமான கழிவுநீர் வடிகால் முறை இன்றளவும் சுவாரசமூட்டுகின்றன. இவை பொறியியலின் மேம்பட்ட அளவின் மாதிரிகள்.
இன்று காலை நான் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்திற்கு செல்லும் கவுரவத்தை பெற்றேன். மறைந்த திரு. ஆர். வெங்கட்ராமன் மற்றும் டாக்டர் கலாம் ஆகிய இரு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் எனக்கு முன்பாக பதவி வகித்த புகழ்பெற்ற தலைவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். டாக்டர் கலாம் பொறியாளராக பயிற்சி பெற்று, பிரபல ஏவுகணை நிபுணராகத் திகழ்ந்தார். அவர் இந்தியாவின் பெருமைக்குரிய மகனாவார். டாக்டர் கலாம் மேற்கத்திய நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஈட்டியிருக்க முடியும். ஆனால் அவர் தான் கற்ற கல்வியையும் தன் வாழ்க்கையையும் நம் நாட்டின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்தியர்களாகிய நாம், பொறியாளர்களாகிய நீங்கள் அவரிடம் இருந்து உந்துதலைப் பெறவேண்டும்.
கேள்வி ஞானம் மற்றும் சாட்சிகள் அடிப்படையிலான கொள்கை மற்றும் மக்களின் நல் வாழ்விற்கு தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலில் நிலையான நம்பிக்கை வைத்திருப்பது ஆகியவை நவீன தமிழ்நாட்டின் பொதுவாழ்வின் அடையாளமாக திகழ்கின்றன. நமது பசுமைப் புரட்சி மற்றும் உணவில் தன்னிறைவு ஆகியவை தமிழ்நாட்டின் ஜாம்பவான்களான மறைந்த திரு. சி. சுப்பிரமணியன் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு கடைமைப்பட்டுள்ளன.
சீர்திருத்தத்திற்கான பயணம் மற்றும் மக்களின் நல்வாழ்விற்கான பயணம் திரு. சி. அண்ணாதுரை மற்றும் திரு. கே. காமராஜர் ஆகியோரின் ஆட்சியில் தொடர்ந்தன. திரு. எம்.ஜி. ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் ஜே. ஜெயலலிதா தமிழ்நாட்டை இன்னும் முன்னெட்டிக் கொண்டு சென்றார். திறன் வாய்ந்த வார்த்தை சிற்பி நமது அரசியலின் முதுபெரும் தலைவர் திரு. மு. கருணாநிதியை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த குறிப்பிடத்தக்க தமிழ்நாட்டிற்கு வளமான வரலாற்றை வழங்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் பட்டியலில் நான் ஒருசிலரை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி, இந்தியாவிற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு எதிராக போராட முன்மாதிரியாக திகழ்ந்தது. இவை நம் குழந்தைகளின் உடல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஜவுளித்துறையோ அல்லது தகவல் தொழில்நுட்பமோ, நுட்பமான உற்பத்தித் துறையோ அல்லது வாகன உற்பத்தித் துறையோ, தமிழ்நாடு பொறியியலை பயன்படுத்தி உறுதியான தொழிற்துறை பொருளாதாரத்தைக் கட்டமைக்க பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்திய பொறியாளர்கள் நிறுவனம் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. 1920 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த இது பாடுபட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் 1987ல் ஏற்படுத்துவதற்கு முன்பு இந்திய பொறியாளர்கள் நிறுவனம் நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை நெறிப்படுத்தி வந்துள்ளது.
இந்திய பொறியாளர்கள் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கலாசாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களை படைப்பாற்றலில் சிறந்து விளங்கச் செய்துள்ளது. இதன் காரணமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனம் என்ற அந்தஸ்த்தை இந்திய பொறியாளர்கள் நிறுவனத்திற்கு வழங்க வகை செய்துள்ளது.
பொறியாளர்கள் மாற்றத்திற்கான முகவர்கள். சரித்திர ரீதியாகவே, பொறியாளர்கள் அணைகள் அல்லது பாலங்கள் கட்டுவதாக இருக்கட்டும், வாகனங்கள் அல்லது கணினிகளை வடிவமைப்பதாக இருக்கட்டும் அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வை எட்டியுள்ளனர். ஆரம்பகால உலோக ஆயுதங்கள் முதல் பிற்கால இண்டகிரேட்டட் சர்க்கியூட்டுகளாக இருக்கட்டும், 18ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை புரட்சி முதல் 21 ஆம் நூற்றாண்டின் நான்காவது தொழிற்துறை புரட்சியாக இருக்கட்டும், வருங்காலத்தின் மொழியை பேசியது பொறியியல் துறை தான். இன்று செயற்கை புலனறிவு மற்றும் இணையம் பற்றிய வாய்ப்புகள் அனைத்தையும் ஆராய்வது அல்லது நமது விருப்பமான இந்தியாவில் தயாரிப்போம் என்பதாக இருக்கட்டும். நமது பொறியாளர்களையே நாம் திரும்பிப் பார்க்கிறோம்.
இந்த வாய்ப்புகள் மிகவும் முக்கியம். ஏனெனில் மனித நாகரீகம் மாற்றுப்புள்ளியில் இருக்கிறது. தொழில்நுட்பங்களின் தோற்றம் நாம் வாழும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நாம் பணியாற்றும் விதத்திலும் நாம் சிந்திக்கும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பொறியியல் துறையின் செயல்பாட்டிலும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய பொறியியல் துறை தொடர்ந்து வாழும். ஏனெனில் நமக்கு இன்னும் இயந்திரங்கள் தேவை, மின் பகிர்மானங்கள், சாலைகள், பாலங்கள் , விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேவை. ஆனால் பாரம்பரியப் பழக்கங்கள் புதுமைகளை தழுவ வேண்டும். தொழில்நுட்பத்தில் நவீன உத்திகளை கடை பிடிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சிவில் என்ஜினியர்கள் பொருள்களில் நிபுணர்கள். அவர்கள் தங்கள் கட்டுமானத்தில் தங்கள் அறிவை பயன்படுத்துவார்கள். இருப்பினும் இதே அறிவை அவர்கள் நுண் கருவிகள் தயாரிப்பதில், நம் உடலுக்குத் தேவையான மருத்துவ உட்பொருத்திகளை தயாரிப்பதில் பயன்படுத்த வேண்டும். பெரிய அளவில் விண்வெளியில் குடியிருப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
கலப்பின உற்பத்தித் துறையில் புதிய வாய்ப்புகளை பல்வேறு துறைகளில் ஏற்படும் மேம்பாடுகள் வழங்குகின்றன. உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் போக்குவரத்து பொறியியல் ஆகியவை பொறியாளர்களின் தொடுவானத்தை விரிவடையச் செய்து வருகின்றன. பொறியாளர்கள் சட்டம், புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகியத் துறையிலும் தங்கங் நுட்பத்தை பயன்படுத்தி கால் பதிக்கலாம். இது போல் உணவு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் நிலவும் சாவல்களை சமாளிக்க தீர்வுகளை வழங்க முக்கிய பங்காற்ற முடியும். நகர்புற கட்டமைப்பில் கட்டுமானத்துறையில் செலவினை குறைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை புகுத்த முடியும்.
இந்த துறைகளில் உங்களுக்கு உள்ள பொறுப்புகள் ஏராளம். பொறியாளர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நாட்டின் கட்டுமானத்தில் பங்களிக்க முடியும். மேலும் இது ஒன்றும் முன் உதாரணம் இல்லாத ஒன்று அல்ல. மறைந்த எம். விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் சிறந்த நிர்வாகியாக, நீர்ப்பாசன நிபுணராக இருந்தவர். நகர்புற திட்டமிடலில் நிபுணர்க். அவர் பிறந்த நாள் இன்று பொறியாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் சதீஷ் தவான் இந்தியாவின் விண்வெளித்துறையின் முன்னோடியாக திகழ்ந்தார். நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு காரணமாக திகழ்ந்த “பால் மனிதர்” வெர்கீஸ் குரியன் ஒரு பொறியாளர். மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் .ஈ. ஸ்ரீதரன் கொங்கன் ரெயில்வேயை கட்டமைத்து மிகவும் சிரமமான சூழலில் தில்லி மெட்ரோவை கட்டமைத்தவர். அவரும் பொறியியல் படித்தவர்கள்.
நமது பொறியாளர்களில் நாட்டிற்கு பங்களித்தவர்களில் இவர்கள் ஒரு சில உதாரணம் தான். அவர்கள் கதைகள் நமக்கு பொறியாளர்களால் என்ன செய்ய முடியும் என்பதை உணர்த்துகின்றன. இந்த சாதனைகளில் உள்ள சாகசங்கள் எப்போதும் நிற்காமல் இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய்ஹிந்த்.
(Release ID: 1513990)
Visitor Counter : 448