ஜவுளித்துறை அமைச்சகம்

2017-2018 முதல் 2019-2020 வரை ஜவுளித்துறையில் திறன்மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 DEC 2017 6:14PM by PIB Chennai

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜவுளித்துறையில், நூற்பு மற்றும் நெசவு தவிர்த்த மீதமுள்ள அனைத்துப் பிரிவுகளுக்கான புதிய திறன்மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், 2017-18 முதல் 2019-20 வரை மொத்தம் 1,300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். தேசிய திறன் தகுதி கட்டமைப்பால் வரையறுக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கான விதிகளின்படி இந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பொது விதிகளின்படி செய்யப்படும்.

அமைப்பு சார்ந்த ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அத்துறையின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், தேவைக்கு ஏற்ற வகையில் பணியமர்த்தல் சார்ந்த திறன் மேம்பாட்டை வழங்குவது; பாரம்பரியமாக ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருவோருக்கு அவை சார்ந்த ஜவுளித்துறை அமைச்சகத்தின் பிரிவுகள் மற்றும் அமைப்புகள் மூலமாக திறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு வழங்குவது; நாடு முழுவதும் உள்ள சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்வாதாரம் வழங்குவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திறன் மேம்பாடு வழங்குவதற்கான திட்டங்கள் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுத்தப்படும்:

அ.   ஜவுளி ஆலைகளின் ஆள்தேவையை நிறைவேற்றும் வகையில் ஜவுளி ஆலைகள் / பிரிவுகள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

ஆ.  ஜவுளி ஆலைகள் / பிரிவுகளுக்கு பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஜவுளித்துறை சார்ந்த புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.

இ.   ஜவுளி ஆலைகள் / பிரிவுகளுக்கு பணியாளர்களை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஜவுளித்துறை சார்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் / மாநில அரசுக்குச் சொந்தமான பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.

திறன் மேம்பாட்டுத் திட்டம் கீழ்க்கண்ட உத்திகளை பரவலாக கடைபிடிக்கும்:

அ.   ஜவுளித்துறையின் பல்வேறு நிலைகளில், அதாவது தொடக்கநிலை பயிற்சி வகுப்புகள், திறன் அதிகரிப்பு / மறுதிறன் பயிற்சிகள் (மேற்பார்வையாளர், மேலாளர் பணிக்கான பயிற்சி, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நவீன பயிற்சி வகுப்புகள்), ஏற்கெனவே பெற்ற பயிற்சியை நினைவுகூர்ந்து அங்கீகரித்தல், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள திறன் இடைவெளியை அடையாளம் கண்டு, ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவுபேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படும்.

ஆ.  ஜவுளித்துறையில் ஒவ்வொரு பிரிவு / பணி வாரியாக எவ்வளவு திறன் மேம்பாடு தேவைப்படுகிறது என்பது  ஜவுளி தொழில்துறையினருடன் கலந்தாய்வு நடத்தி தீர்மானிக்கப்படும்.

இ.   திறன்மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் வழி நடத்துவதற்காக இணையம் சார்ந்த கண்காணிப்புமுறை கடைபிடிக்கப்படும்.

ஈ.   கைத்தறி, கைவினைப் பொருட்கள், சணல் பொருட்கள், பட்டு சேலை உற்பத்தி போன்ற பாரம்பரிய ஜவுளித் துறைகளுக்கான திறன் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கான பயிற்சி சிறப்புத்திட்டங்களாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பிரிவுகள் மற்றும் அமைப்புகளின் மூலமாக செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுடன் நின்றுவிடாமல், அவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆதரவும் முத்ரா கடன் மூலம் வழங்கப்படும்.

உ.   திறன்மேம்பாட்டின் பயன்களை அளவிடும் வகையில் வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களின் திறன்கள் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு முகமை மூலம் மதிப்பிடப்பட்டு சான்றளிக்கப்படும்.

ஊ.  சான்றளிக்கப்பட்ட பயிற்சி மாணவர்களில் குறைந்தபட்சம் 70% பேர் ஊதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட வேண்டும். பணிநியமனத்திற்கு பிந்தைய கண்காணிப்பும் இத்திட்டத்தின்படி கட்டாயமாகும்.

எ.   திறன்மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு ஜவுளித்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களும் 2013ஆம் ஆண்டின் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்த்தல்) சட்டத்தின்படி, புகார்களைத் தெரிவிப்பதற்கான குழு அமைப்பது குறித்த அனைத்து விதிகளையும் பின்பற்றி நடக்கவேண்டும். அப்போதுதான் இத்திட்டத்தின்படி நிதியுதவி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரகப் பகுதி மக்கள், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், வடகிழக்கு மாநில மக்கள், ஜம்மு-காஷ்மீர் மக்கள் என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் நலனுக்காக அவர்களுக்கு அடையாளம் காணப்பட்ட பணிகளுக்கான பயிற்சி வழங்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் பிற நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஜவுளித்துறை அமைச்சகத்தால் முன்பு செயல்படுத்தப்பட்ட திறன்மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகளில் முதன்மையானதான  ஆயத்த ஆடைத் துறையில் பெண்கள்தான் சுமார் 70 விழுக்காடு அளவுக்கு பணியாற்றினர் என்பதால், புதிய திட்டத்திலும் அதிக அளவில் பெண்களே பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய திறன்மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஜவுளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் 10 லட்சம் பேர் திறன் மேம்பாடு பயிற்சி பெற்று சான்றிதழ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் ஒரு லட்சம் பேர் பாரம்பரிய ஜவுளித்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்னணித் தகவல்கள்:

 

ஒருங்கிணைந்த திறன்மேம்பாட்டுத் திட்டம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கடைசி 2 ஆண்டுகளில் சோதனை அடிப்படையிலான திட்டமாக ஜவுளித்துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காலத்தில் இத்திட்டத்திற்காக ரூ.272 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.229 கோடி அரசின் பங்களிப்பாகும். 2.56  லட்சம் பேருக்கு இத்திட்டத்தின்படி பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில், இத்திட்டம் முதன்மைத் திட்டமாக மேம்படுத்தப்பட்டது. அத்திட்டப்படி 15 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜவுளித்துறையில் நிலவும் பயிற்சி பெற்ற மனித சக்தி குறைபாட்டை ஜவுளித்துறை சார்ந்த பயிற்சித் திட்டங்களின் மூலம் ஒருங்கிணைந்த திறன்மேம்பாட்டுத் திட்டம் போக்குகிறது. இத்திட்டம் 3 பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் பொதுத்துறை, தனியார்துறை கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிக்கும் சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்குடன் ஜவுளி தொழில் துறையினருடன் கூட்டாண்மை ஏற்படுத்திக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 10.84 லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 10.12 லட்சம் பேரின் பயிற்சி மதிப்பீடு செய்யப்பட்டு 8.05 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பொது விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.



(Release ID: 1513737) Visitor Counter : 271


Read this release in: English