குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியா மற்றும் மாலி நாட்டிற்குப் பயங்கரவாதமும் தீவிரமயமாதலும் பொதுச் சவால்களாக இருந்து வருகிறது : குடியரசுத் துணைத் தலைவர்
மாலி உயர் நீதிமன்றத் தலைவர் திரு. திரு. அப்திராமனே நியாங் தலைமையிலான குழுவுடன் உரையாடினார்
Posted On:
21 DEC 2017 6:10PM by PIB Chennai
இந்தியா மற்றும் மாலி நாட்டிற்கும், மொத்த உலகத்திற்குமே பயங்கரவாதமும் தீவிரமயமாதலும் பொதுச் சவால்களாக இருந்து வருகின்றன என்று குடியரசுத் துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மாலி உயர் நீதிமன்றத் தலைவர் திரு. திரு. அப்திராமனே நியாங் தலைமையில் மாலி நாட்டின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. மாலி நாட்டுக் குழுவுடன் உரையாடிய போது குடியரசுத் துணைத் தலைவர் இதனைத் தெரிவித்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் டாக்டர். பி. ஜே. குரியன், மாநிலங்களவை தலைமை செயலர் திரு. தேஷ் தீபக் வர்மா உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாலி நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் கடன் வரம்புகளை நீட்டிக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறிய குடியரசுத் துணை தலைவர் வரியில்லாக் கட்டண முன்னுரிமை திட்டத்தை மாலி நாட்டிற்கு இந்தியா அளித்துள்ளது என்றும் இதனால் இந்திய இறக்குமதியாளர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாலி நாட்டுடனான வளர்ச்சி ஒத்துழைப்பு உறவினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
புகழ்பெற்ற இஸ்லாமிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் களஞ்சியமாக உள்ள திம்புக்டுவின் உலகப் பாரம்பரியத் தளம் முழு உலகிற்கும் தனித்துவமான கலாச்சாரச் சொத்து என்று குறிப்பிட்ட திரு. வெங்கையா நாயுடு “தாஜ் மஹால் திம்புக்டுவின் சந்திப்பு” என்ற கண்காட்சியை இந்தியாவில் அமைக்க இந்தியா அரசு முனைப்புடன் செயல் பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மாலி நாட்டிற்கும் மொத்தக் கண்டத்திற்கும் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சி மற்றும் வளமை அளிக்கவல்ல ஜி-5 சாஹேல் கூட்டுப் படையை நிறுவியதற்காகக் குடியரசுத் துணை தலைவர் மாலி அரசிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
***
(Release ID: 1513733)
Visitor Counter : 150