குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மருத்துவ பட்டதாரிகள் மருத்துவ பயிற்சியை, நெறிமுறை சார்ந்த பயிற்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும்: சுவாமி ராமா
ஹிமாலயன் பல்கலைக்கழகத்தில் நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணை தலைவர் உரை.
Posted On:
05 DEC 2017 6:16PM by PIB Chennai
சுவாமி ராமா ஹிமாலயன் பல்கலைக்கழகத்தில் நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு உரையாற்றுகையில், நோயாளிகளின் நலன் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு மருத்துவ பட்டதாரிகள், மருத்துவ பயிற்சியை, நெறிமுறை சார்ந்த ஒரு பயிற்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள சுவாமி ராமா ஹிமாலயன் பல்கலைக்கழகத்தில் நடந்த இன்று நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். உத்தரகாண்ட் ஆளுனர் திரு.கிரிஷன்காந்த் பால், உத்தரகாண்ட் முதல்வர் திரு.திரிவேந்தர் சிங் ராவத், உத்தரகாண்ட் மாநில உயர்க்கல்வித்துறை அமைச்சர் டாக்டர். தன்சிங் ராவத், சுவாமி ராமா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் விஜய் தாஸ்மனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சுவாமி ராமா, ‘‘நான் உன்னில் இருந்து கடவுளுக்கு சேவை செய்ய முடியாது என்றால், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு செல்வதால் என்ன பலன்’’ என்பார் என்று திரு. நாயுடு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ‘‘சுவாமி ராமாவின் அன்பு, சேவை, நினைவில் கொள்ளுதல் என்ற தீர்மானங்களைத்தான் பல்கலைக்கழகம் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள் தன்னலமின்றியும், அன்புடனும் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் பேசுகையில், ஹிமாலயன் மருத்துவ அறிவியல் மையம் (எச்ஐஎம்எஸ்), மருத்துவ சேவையில் ஒருங்கிணைந்த மற்றும் குறைந்த செலவிலான அணுகுமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றார். மேலும், அவர் கூறுகையில், எச்ஐஎம்எஸ் உத்தரகாண்டின் கிராமப்புற மக்களுக்கும், அண்டை மாநில மக்களுக்கும் பல்முனை சிறப்பு சேவைகளையும், மூன்றாம் பாதுகாப்பு சேவைகளையும் வழங்கி வருகிறது. ‘ஸ்மைல் டிரைன்’ திட்டத்தின் கீழ், 9000 குழந்தைகளுக்கு கோணலான உதடு மற்றும் அன்னம் ஆகியவை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது என்பது நெஞ்சை தொடும் விஷயம் என்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில், இந்த பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு தொடர்பான அனைத்து சி்கிச்சைகளையும் அளிக்கிறது. மேலும், இப்பிராந்தியத்தில் இது முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக இருப்பதுடன், பல்வேறு இடங்களில் இருந்து புற்றுநோய் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கும் மையமாகவும் உள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், நோயாளிகளைக் கவனிப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் செவிலியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அதுபோன்ற நிலையில், ஹிமாலயன் செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்பு டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பட்டதாரிகள் சுயதிறன்களான, சீரிய தகவல் தொடர்பு, சுயமேலாண்மை, புதுமையடைதல், உணர்ப்பூர்வமான நுண்ணறிவு, சுய விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் சரியான நங்கூரமிட்டு நிற்பதற்கான அதிகாரத்தை பெற முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் அறிவுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவைப் போட்டிக்கு தகுதியானதாகவும், உயர் வளர்ச்சி கொண்டதாகவும், உயர் உற்பத்தி நடுத்தர வருவாய் நாடாகவும் மாற்ற, விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தி சார்ந்ததாகவும், சேவை அடிப்படையிலான பொருளாதாரதாகவும் மாற்ற மத்திய அரசு பிரத்யேக திட்டங்களை கொண்டுள்ளது. வேலைவாய்ப்புகளை எதிர்நோக்குபவர்களாக மட்டும் இல்லாமல், அதை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும். அதனால் படைப்பு, புதுமை, மரபுசாரா தன்மையுடன் இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
*****
(Release ID: 1512826)