சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தில்லி-என்.சி.ஆர். பகுதியில் காற்று மாசு விவகாரத்திற்கு தீர்வு காண டாக்டர் ஹர்ஷ வர்தன் தலைமையில் கூட்டம்

Posted On: 12 DEC 2017 6:03PM by PIB Chennai

காற்று மாசுக்கு தீர்வு காண்பது சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு பொறுப்பு என்றும் அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்றும் வலியுறுத்திய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், இந்த மாசு பிரச்சினை அடுத்த ஆண்டு முழுமையாக தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாசு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற டாக்டர் ஹர்ஷ வர்தன், அனைத்துக் கள நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடைமுறை தொடருவதை உறுதி செய்ய தேசியத் தலைநகர் மற்றும் பிராந்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடைமுறை தொடரும் என உறுதி செய்தார்.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/dec/i2017121210.jpg

 

 

தில்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு காரணமாக உள்ள ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டு காற்று மாசு ஏற்படாமல் த்டுக்கும் வகையில் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்று தில்லி முதல்வர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மாசைத் தடுக்கும் வகையில் அனைத்து முகமைகளுடனும் தில்லி அரசு நெருங்கிச் செயலாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

2016ம் ஆண்டு இருந்த காற்றின் தரத்தை விட 2017ம் ஆண்டு காற்றின் தரம் சிறப்பாக உள்ளது என இந்தக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. நன்றாக, நடுத்தரமாக மற்றும் திருப்திகரமாக இருந்த நாட்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு 151 ஆக உள்ளது; இது 2016ம் ஆண்டில் 109 ஆக மட்டும் இருந்தது. இதே போல் 2017ம் ஆண்டில் 181 நாட்கள் மிக மோசமாக, மோசமாக மற்றும் தீவிரமாக் இருந்தது என்றும் ஆனால் இது 2016ம் ஆண்டில் 214 ஆகவும் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் வருமாறு:-

 

தூசு மாசைக் கட்டுப்படுத்த சில கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் இருந்து வரும் தூசு நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு அவற்றில் மீறல் இருக்கும் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திரம் மூலம் தூய்மைப் பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும். இயந்திரம் மூலம் தூயமைப்படுத்தும் பணிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தில்லி மாநகராட்சிக்கு மத்திய அரசு இயன்ற உதவிகளை அளிக்கும்.

 

நகராட்சி குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீ விரைவாக அணைக்கப்படும். மாசு பிரச்சனைக்குத் தீர்வு காண அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் ஆலோசனை நடத்தி புதுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படும்.

 

பிரதமரின் முதன்மைச் செயலர் தலைமையிலான பணிக் குழு பழம் பொருட்கள் தீப்பிடித்து எரியும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான செயல்திட்டம் அடுத்த மாதம் தயாராகும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

என்.சி.ஆர். மாநிலங்களில் பெட்கோக் மற்றும் ஃபர்னஸ் எண்ணெய் மீதான தடையை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 

தில்லியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிட விவகாரங்களுக்குத் தீர்வு காண தில்லி காவல்துறை கேட்டுக்கொள்ளப்படும்.

 

இதனிடையே பொதுப் போக்குவரத்து வாகன வசதியை அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

 

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்க்ள் உறுதி செய்வார்கள். விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொது மக்களிடமிருந்து ஒத்துழைப்பைக் கோரவும் தகவல்,கல்வி,மக்கள் தொடர்பு நடவடிக்கைகளைப் நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

 

2018 ஜனவரியில் 15 நாட்களுக்கு மாசு எதிர்ப்பு இயக்கம்ஒன்றைச் சிறப்பாக நடத்தி அனைத்து முகமைகளின் மூலமாக மாசுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுப்பது, மற்றும்,

 

காற்று மாசு பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நெருக்கமான கலந்துரையாடல் மேற்கொள்வது.

 

இன்றைய கூட்டத்தில் தில்லி முதலமைச்சர் திரு அர்விந்த் கெஜ்ரிவால், தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. சதேந்திர ஜெயின், உத்தரப் பிரதேச சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. தாரா சிங் சவுஹான், அரியானா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு விபுல் கோயல் மற்றும் ராஜஸ்தான் மாநில சுற்றுச்சூழல் துறை செயலர், பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் தில்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச அதிகாரிகள்  மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் உயரதிகரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

***


 

 

 

 


(Release ID: 1512818) Visitor Counter : 224


Read this release in: English