இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் குருதேவ் சிங் கில்லுக்கு கர்னல் ராஜ்யவர்தன் ரதோர் பாராட்டு

Posted On: 12 DEC 2017 5:40PM by PIB Chennai

இந்திய கால்பந்துக்கு சிறப்பான முறையில் பணியாற்றியதற்காக இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் குருதேவ் சிங் கில் இன்று பாராட்டப்பட்டார். இதற்காக நடைபெற்ற விழாவில் மத்திய இளைஞர் நலன மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரதோர் அவருக்கு சால்வை, நினைவுப்பரிசு மற்றும் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இந்திய கால்பந்து அணியின் அனைத்து முன்னாள் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்த போது திரு. குருதேவ் சிங் கில் கனடா சென்றிருந்ததால் அவருக்கான பாராட்டு விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை போட்டிகளின்போது இந்திய அணித்தலைவர்களை பிரதமர் கவுரவிக்கும் விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் பேசிய திரு. குருதேவ் சிங் கில், ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை போட்டி நாடு முழுவதும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்தைக் கவர்ந்தது என்றும் நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தப்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். முன்னாள் கால்பந்து வீரர்களை கவுரவித்ததற்காக அவர் அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அர்ஜுனா விருது வென்ற 67 வயதாகும் குருதேவ் சிங் கில் கடந்த 1978ம் ஆண்டு நடைபெற்ற பாங்காக் ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

 

 

 



(Release ID: 1512805) Visitor Counter : 132


Read this release in: English