தேர்தல் ஆணையம்
100% ஒப்புக்கைச்சீட்டுக் கருவிகள் (VVPAT) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நிறுவப்பட்டதன் மூலம் வாக்காளர்களிடம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கடுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாக நெறிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக பின்பற்றுவதால் தேர்தல் முறைகேடுகளுக்கு எந்த சாத்தியக்கூறு இல்லை.
2017, டிசம்பர் 14ம் தேதி குஜராத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் (VVPATs) பயன்படுத்துவதற்கு வலுவான நிர்வாக பாதுகாப்பையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
Posted On:
12 DEC 2017 4:52PM by PIB Chennai
இந்தியத் தேர்தல் ஆணையம் நிர்வாக அமைப்பிலும், பாதுகாப்பு நெறிமுறைகளிலும், நடைமுறை சீர்த்திருத்தங்களிலும் விரிவான கட்டமைப்பை வகுத்திருப்பதன் மூலம், குஜராத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புக்கை சீட்டுக் கருவி பயன்படுத்துவதில் நடைமுறை இடைவெளி ஏற்படுவதையும் அல்லது மின்னணு வாக்கு
இயந்திரங்கள் / ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் முறைகேடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் தடுக்கிறது. முழு வெளிப்படைத்தன்மையுடன், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள், ஒவ்வொரு நிலையிலும் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகளுடன், அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் ஆவணப்படுத்துதல் மற்றும் செயலூக்கத்துடன் செய்யப்படுவதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவி மீதான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. இந்த செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட மற்றும் அதன் கட்டுப்பாட்டிலும், வழிகாட்டுதலிலும், மேற்பார்வையின் கீழும் நியமிக்கப்பட்ட அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் (DEOs), தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (ROS), உதவித் தேர்தல் அதிகாரிகள் (AROs) மற்றும் சம்பந்தப்பட்ட பிற தேர்தல் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.
தேர்தல் நடைமுறை அமைப்பில், இந்தியத் தேர்தல் ஆணையம் வலுவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றியதால், 2017 டிசம்பர் 9ம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் முறைகேட்டிற்கான எந்த சாத்தியகூறும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டுக் கருவிகளில் மிகக்குறைந்த சதவீத தொழில்நுட்ப குறைபாடு (உடைந்திருத்தல்/பட்டன்கள் சிக்கியிருத்தல், திரையில் கோளாறு உள்ளிட்டவை) இருப்பதாக வந்த புகார்களையும், உடனுக்குடன் கவனித்து, வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் சுமுகமாக நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவின் போது, 0.75% வாக்குப் பெட்டிகள் (BUs), 0.75% கட்டுப்பாட்டு அலகுகள் (CUs) மற்றும் 2.8% ஒப்புகை சீட்டுக் கருவிகளில் தொழில்நுட்ப குறைபாடுகள் (உடைந்திருத்தல்/பட்டன்கள் சிக்கியிருத்தல், திரையில் கோளாறு உள்ளிட்டவை) ஏற்பட்டன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 100% ஒப்புகைச்சீட்டுக் கருவிகள் நிறுவப்பட்டதால், வாக்காளர்கள் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் பற்றி நம்பிக்கையுடன் இருந்தனர்.
நிர்வாக நெறிமுறைகள் மற்றும் செயல்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: -
அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் முதல் நிலை சோதனை மேற்கொள்ளுதல், முதல் நிலை பரிசோதனையின் போது, ஒவ்வொரு மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் இயந்திரத்தையும் பயன்படுத்தி மாதிரி தேர்தல் நடத்துதல், வேட்பாளர் பெயர் அமைத்தல், வாக்குப்பதிவு தேதி நிர்ணயித்தல் (உண்மையான தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை 2 நிலைகளில் சீரமைத்தல், தேர்தல் முடிந்த பிறகும், நடக்கும் சமயத்திலும், தேர்தலுக்கு முன்பாகவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை அறைகளில் வைப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டுக் கருவி தொடர்பான செயல்முறைகளை முழுமையான வீடியோப் பதிவு மற்றும் சிசிடிவி கேமிரா பதிவு செய்தல், அவற்றை பாதுகாப்பான அறைகளில் வைத்தல் என, நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு விரிவான கட்டமைப்பு உள்ளடங்கியுள்ளது. மேற்கண்ட அனைத்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் / தேர்தல் முகவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் என்பதே இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டுக் கருவியின் முதல் நிலை சோதனை: குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணுவாக்கு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டுக் கருவிகளும் முதல் நிலை சோதனைக்கு (FLC) உட்படுத்தப்பட்டவை. இந்த முதல் நிலை சோதனையானது, உற்பத்தி நிறுவனத்தின் பொறியாளர்களைக் கொண்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடத்தப்பட்டது. அனைத்து முதல் நிலை சோதனைகளும் மாவட்ட தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் மாவட்ட அளவில், தொடர்ச்சியாக வீடியோ பதிவு / சிசிடிவி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தவறான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு விடும், அவை தேர்தலில் பயன்படுத்தப்படாமாட்டாது.
i. முதல் நிலை பரிசோதனையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அனைத்து பாகங்களும் ஒரிஜினல் தான் என உற்பத்தியாளர்கள் சான்றளிக்கிறார்கள். இதன் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகின் பிளாஸ்டிக் கேபினட் சீலிடப்பட்டு, அதில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கையொப்பம் இடப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். இந்த கட்டத்திற்குப்பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகின் பிளாஸ்டிக் கேபினட் திறக்கப்படாமாட்டாது.
ii. முதல் நிலை சோதனையின்போது, ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் சில ஓட்டுக்களைப் பதிவு செய்து மாதிரித் தேர்தல் நடத்தப்பட்டது. கூடுதலாக, முதல் நிலைச் சோதனையின் போது, 1% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 1200 ஓட்டுகளும், 2%த்தில் 1000 ஓட்டுகளும், மற்ற 2%த்தில் 500 ஓட்டுகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் போடப்பட்டன. இந்த, மாதிரித் தேர்தல் முடிவுகளின் அச்சுப்பிரதிகள், அதோடு மாதிரி தேர்தலின் போது போடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் போதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான அச்சுப்பிரதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிகளிடம் காண்பிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சீரற்ற முறையில் இயந்திரங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய இயந்திரங்களும், மாதிரித் தேர்தலில் போடப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் திருப்தி பெறப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் அவர்களாகவே மாதிரித் தேர்தலை நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர். ஒப்புகைச் சீட்டுக் கருவியில், 16 வேட்பாளர்களின் பட்டன்களிலும், தலா 6 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுச் சரிபார்க்கப்பட்டது.
குஜராத்தில் தேர்தலைத் தொடர்ந்து, அங்கு துணை வாக்குப்பதிவு மையங்களைத் தவிர்த்து, 50,128 வாக்குச்சாவடி மையங்களிலும், 81,860 வாக்குப் பெட்டிகளும் (BUs); 66,358 கட்டுப்பாட்டு அலகுகளும் (CUs) மற்றும் 71,564 ஒப்புகைச் சீட்டுக் கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. இதோடு தேவையான அளவிற்கு போதுமான மாற்று இயந்திரங்களாக 63% BUs, 32% CUs மற்றும் 43% VVPATs ஆகியவை இந்த தேர்தலுக்கு கைவசம் வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு 09.12.2017 அன்று வெற்றிகரமாக நிறைவுற்றது, இதில் 66.75% வாக்காளர்கள் சுதந்திரமாக, நியாயமாக, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு முறையில் தங்கள் உரிமையை பயன்படுத்தினர்.
2ம் கட்ட வாக்குப்பதிவு 14.12.2017 அன்று நடைபெறுகிறது. இதில் 93 சட்டசபை தொகுதிகளில் 25,515 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறும். 25,515 வாக்குச்சாவடி மையங்களளில், 40,027 வாக்கு பெட்டிகளும் (BUs), 32,633 கட்டுப்பாட்டு அலகுகளும் (CUs) மற்றும் 35,061 VVPAT க்களும், அதோடு மாற்று இயந்திரங்களாக 57% BUs, 28% CUs மற்றும் 37% VVPATs தேர்தலில் நிறுவப்பட்டுள்ளன.
தேர்தலை நடத்தி வரும் அதே சமயத்தில், குஜராத் மாநிலத்தில் தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான பணியாளர்களின் விரிவாக்கப்பட்ட பயிற்சி மற்றும் திறனை வளர்த்து வருகிறது. இன்றைய தேதி வரை, 3,350 குழுக்கள் பயிற்சி முடிந்துள்ளன, இதில் வாக்குப்பதிவு ஊழியர்கள், துறை அதிகாரிகள் மற்றும் நோடல் அதிகாரிகள் உட்பட 1,93,962 தேர்தல் ஊழியர்கள் பயிற்சி பெற்றனர். இந்த அனைத்து வாக்குப்பதிவு ஊழியர்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியை சுமூகமாக கையாளவும், தேர்தலை பயனுள்ள வகையில் நடத்திக்காட்டவும் பயிற்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்த விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளது.
முதல் நிலை சோதனைக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்: முதல் நிலை சோதனை முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டுக் கருவிகளும், பாதுகாப்பு அறையில் முழு நேர பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியை சீரற்றமையாக்குதல்: முதல் நிலை சோதனையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் 2 முறை சீரற்றமையாக்கப்பட்டன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் அல்லது வேட்பாளர்கள் முன்பாக முதலில், சட்டப்பரேவை தொகுதிகளுக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டாவதாக வாக்குச்சாவடி மையங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிறகு அவை ஒவ்வொரு வாக்குச்சாவடி மைய பயன்பாட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சீரற்றமையாக்குதலானது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர டிராக்கிங் மென்பொருளை (ETS) கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டது. குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியின் சீரியல் எண் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அது அனைத்து அரசியல் கட்சிகள்/வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டுக் கருவியில் வேட்பாளரின் பெயரை அமைத்தல்: 2ம் கட்ட குஜராத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் வேட்பாளர் பெயரை அமைத்தல் பணியானது போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இந்த நோக்கத்திற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் முறையான ஒப்புதலுடனான முன்கூட்டியே எழுதப்பட்ட தகவல்களின்படி தேர்தல்நடத்தும் அதிகாரிகளால் அழைக்கப்பட்டனர்.
முழுமையான, சுகாதாரமான அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் வேட்பாளர் பெயர் அமைத்தில் பணி மேற்கொள்ளப்பட்டது. அறையின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் பாதுகாப்பு பணியாளர்கள் காவலில் வைக்கப்பட்டு, கதவுகளுக்கு முன்பாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. அறையில் நுழையும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் கண்காணிக்கப்படுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அறையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர் அகரவரிசைப்படி, அதாவது முதலில் தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள், அதைத்தொடர்ந்து பிற மாநில கட்சிகள், பின்னர் சுயேச்சைகள் என அமைக்கப்படுவது கட்டாயமாகும். எனவே, வாக்குப்பெட்டியில் வேட்பாளர்களின் பெயர்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சியின் பெயர்களில் வேட்பாளர்களைக் கொண்டிருக்கும் வரிசை முன்னதாகத் தெரிந்துகொள்ள முடியாது. வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதன் இந்த ஏற்பாடு, வாக்குகளை திறம்பட மோசடி செய்வதற்கான எந்தவொரு முன் தீர்மானிக்கப்பட்ட கையாளுதலுக்கும் சாத்தியம் இல்லாமல் செய்து விடுகிறது. எனவே, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்களின் வரிசை எண் ஒவ்வொரு தொகுதியிலும் மாறுபடும், முன்னரே இதை நிர்ணயிக்க முடியாது என்பதால் முறைகேடுகளுக்கான சாத்தியக்கூறுகளுக்கு இடமில்லை.
வேட்பாளர் பெயர் அமைத்தல் முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குப்பெட்டியும் சீலிடப்பட்டது. எனவே யாராலும் வாக்குப்பெட்டியின் உட்புறத்தை அணுக முடியாது. இந்த சீல், வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்துக்களைக் கொண்டுள்ளன.
சீரியல் எண்கள், வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் ஒதுக்கப்படும் சின்னம் ஆகியவை, பொறியாளர்கள் உதவியுடன் ஒப்புகைச் சீட்டுக் கருவியில் ஏற்றப்படுகிறது. இது ஒரு சோதனை அச்சுப்பிரதியின் மூலம் வாக்குப் பெட்டியின் (BU) வாக்குச்சீட்டை கொண்டு சரிபார்க்கப்படும். பின்னர், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு ஓட்டு வீதம் ஒப்புகைச் சீட்டுக் கருவி மூலம் அச்சுப்பிரதியை துல்லியமாக அச்சிடுவதை சரிபார்க்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியில் வேட்பாளர் பெயர் அமைக்கப்படும் போது, அனைத்து 16 வேட்பாளர்களின் பெயருக்கு எதிரான ஸ்விட்ச்களை அழுத்தி ஓட்டு போடப்படும். இதன் முடிவுகள் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரித் தேர்தல் தரவுகள் சரிபார்க்கப்படும். கூடுதலாக, மாதிரித் தேர்தலுக்கு இயந்திரங்களைத் தயாரிக்கும் போது, 5% இயந்திரங்களில் குறைந்தபட்சம் 1000 வாக்குகள் வாக்களிக்கப்படுகின்றன. மற்ற இயந்திரங்களில், மாதிரித் தேர்தலின் போது போடப்பட்ட வாக்குகள் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகளுக்கு திருப்தி அளிக்கும் அளவுக்கு இருக்கும். மேலும், அவர்கள் தங்களே மாதிரி வாக்கெடுப்புச் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியில் வேட்பாளரின் பெயரை அமைத்தலுக்கான முழு செயல்முறையும், வீடியோ பதிவு செய்யப்படும்.
வாக்கெடுப்பு தினம்: வாக்கெடுப்பு தினத்தன்று, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தேர்தல் ஏஜென்டுகள் முன்னிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் குறைந்தபட்சம் 50 வாக்குகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி மாதிரி வாக்கெடுப்பை நடத்தி பரிசோதிப்பார். மாதிரி வாக்கெடுப்புக்குப் பின்னர், தலைமைத் தேர்தல் அதிகாரி, கட்டுப்பாட்டு அலகின் முடிவை அறிந்து கொள்வார், ஒப்புகைச் சீட்டுக் கருவியின் காகித சிலிப்கள் தேர்தல் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் எண்ணப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சரியான ஓட்டுகள் விழுந்ததா என்ற முடிவு சரிபார்க்கப்படும். பின்னர், கட்டுப்பாட்டு அலகில் உள்ள மாதிரி வாக்குப்பதிவுக்கான தரவுகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியில் உள்ள பேப்பர் சிலிப்கள் ஆகியவற்றை தலைமைத் தேர்தல் அதிகாரி நீக்குவார். இவை தேர்தல் ஏஜென்டுகளால் சரிபார்க்கப்படும். மாதிரி தேர்தலில் ஒப்புகைச் சீட்டு பேப்பர் சிலிப்பின் பின்புறம் ‘மாதிரி தேர்தல் சிலிப்’ என ரப்பர் ஸ்டாம்ப்பால் முத்திரை குத்தப்படும். இதன் பின்னர், மாதிரி வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டுக் கருவியின் பேப்பர் சிலிப்கள் அடர்த்தியான கறுப்புப் பேப்பரில் செய்யப்பட்ட ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரியால் சீலிடப்பட்டு மூடப்படும். மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழ் ஒவ்வொரு தலைமை அதிகாரியிடமிருந்தும் பெறப்படும்.
வாக்கெடுப்புக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவியைப் பாதுகாப்பாக வைத்தல்: வாக்கெடுப்புக்குப் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் அதற்கேற்ற பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு, அவை எண்ணிக்கைக்கு முன்பாக எந்த சேதமும் ஏற்படாமல் சீலிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஏஜென்டுகள் ஆய்வு செய்து அதில் கையெழுத்திட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து அவை பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தை (பாதுகாவலர்களுடன்) வேட்பாளர்களும் / பிரதிநிதிகளும் பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கெடுப்புக்குப் பின்னர் பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை வைத்தல்:
i. பாதுகாப்பு அறையானது இரட்டை பூட்டு அமைப்பை கொண்டிருக்க வேண்டும். பூட்டின் ஒரு சாவியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றொரு சாவியை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலரும் வைத்திருக்க வைக்கப்படும்.
ii. வாக்குகள் எண்ணப்படுவதற்காக, ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஓப்புகைச் சீட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உடனே அறையை ஒட்டிய உட்புற சுற்றுப்பகுதியில் மத்திய போலீஸ் படையும், அறைக்கு வெளியில் மாநில ஆயுதப் போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
iii வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்குமாறு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள், அந்த இடத்தின் உட்புற சுற்றளவுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அங்கிருந்தபடி அறையின் நுழைவாயில் பகுதியை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியும். முடிந்தவரை, சரியான நிழல், குடிநீர், போன்ற வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும். அறையின் நுழைவாயிலை நேரடியாகக் காண முடியாத தடை இருக்கும் பட்சத்தில், அதுபோன்ற இடங்களில் சிசிடிவி ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலமாக அறையின் நுழைவாயில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடலாம். இதுபோன்ற சம்பவங்களில், அவர்கள் உட்புற சுற்றுப்பகுதியின் பாதுகாப்பின் ஒரு பகுதியையும் பார்த்து, அதனைச் சரிபார்த்து, அறையின் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளில் திருப்தி அடைய ஆவண செய்யப்படும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பெரிய திரையில் சி.சி.டி.வி காட்சி காட்சிப்படுத்தப்படும். இதனால் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை அவர்களால் தொடர்ந்து கண்காணித்து வர முடியும்.
iv வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு நேரமும் அது செயப்படும்.
v வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை முழு நேரமும் கண்காணிக்க ஒரு மூத்த காவல்துறை அதிகாரியுடன் ஒரு அரசிதழ் பதவு பெற்ற அதிகாரி நியமிக்கப்படுவார்.
vi பின்வரும் நெறிமுறைகள் பின்பற்றாமல் உள் சுற்றளவுப் பகுதிக்குள் யாரும் நுழைய முடியாது:-
a) மத்திய போலீஸ் படையால் பதிவுப் புத்தகம் ஒன்று நிர்வகிக்கப்படும். அதில், இரண்டாவது பாதுகாப்பு வளையத்தை, அதாவது நடு சுற்றளவு பகுதியைக் கடந்து ஒரு நபர் வரும் போது அவரது பெயர், நேரம், காலம், கால அளவு ஆகியவை குறிக்கப்படும். தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் எஸ்.பி.க்கள் அல்லது வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் அல்லது வேறு எந்த நபர்கள் வந்தாலும் அவர்களின் வருகை இதில் பதிவு செய்யப்படும்.
b) அத்தகைய பார்வையாளர்களால் செய்யப்பட்ட அனைத்து வருகைகளையும் பதிவு செய்வதற்காக மத்திய போலீஸ் படையினருக்கு வீடியோ கேமிராக்கள் வழங்கப்படும்.
vii வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளின் அனைத்து நுழைவாயில்களும் (கதவுகள் உள்ளிட்டவை) வலை-கேமராக்கள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியான வீடியோகிராபியின் கீழ் கொண்டு வரப்படும். அறையில் மற்ற கதவுகள் இருந்தால், அவைகளும் வலை கேமராக்கள் / ஒளிப்பதிவுகளால் கண்காணிக்கப்படும். மடிக்கணினி பதிவுகளைப் பெற வரும் நபர்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும், அவர்களின் பெயர் மத்திய போலீஸ் படை பிரிவிடம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களின் வருகை, மத்திய போலீஸ் படைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட வீடியோ கேமரா மூலம் முழுவதுமாக வீடியோபடப் பதிவுகள் எடுக்கப்படும்..
viii வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு (உள் சுற்றளவு பகுதி வரை மட்டுமே) தேர்தல் அதிகாரிகள் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து, பதிவு புத்தகம் மற்றும் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, தினசரி நிலை அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தர வேண்டும். ஒருவேளை மாவட்ட தலைமையகத்தில் வாக்கு இயந்திர அறை அமைக்கப்பட்டிருந்தால், இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியே செய்ய வேண்டும். மாவட்ட தலைமையகத்திற்கு வெளியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகள் அமைந்திருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரி, குறைந்தபட்சம் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை அல்லது முடிந்தவரை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும்.
ix அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் பிரமுகர்களின் வாகனங்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. வாகனங்களுக்கான நிறுத்துமிடம், வெளிப்புற பாதுகாப்பு சுற்றளவுக்கு அப்பால் தெளிவாக குறிக்கப்பட வேண்டும், அது ஒரு நடைபாதை மண்டலமாக மட்டுமே இருக்க வேண்டும்.
x வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அந்தந்த மாவட்ட மற்றும் வட்டங்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறையின் திட்டவட்டமான செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறையில் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பொறுப்பாவார்.
வாக்கு எண்ணிக்கை: வாக்குகள் எண்ணப்படும் நாளன்று, பாதுகாப்பு அறையானது வேட்பாளர்கள்/அவர்களின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவின் கீழ் திறக்கப்படும்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில், தேர்தல் நடைமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த ஒரு பரிசோதனை முயற்சியின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குச் சாவடியின் ஒப்புகைச் சீட்டுக் கருவி பேப்பர் சிலீப்களை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குஜராத்தில் 182 வாக்குப்பதிவு மையங்களிலும் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 68 வாக்குப்பதிவு மையங்களிலும் சரிபார்ப்பு முறையை கட்டாயப்படுத்துவதோடு, இந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒப்புகைச் சீட்டு இயந்திர பேப்பர் சிலீப்கள் மறுகணக்கீடு செய்யப்பட வேண்டும்.
வாக்குகள் எண்ணி முடிந்த பிறகு, கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் மீண்டும் சீல் செய்யப்பட்டு, பாதுகாப்பான அறைகளுக்கு மாற்றப்படும்.
தேர்தலுக்கு பிறகும், நடக்கும் சமயத்திலும், அதற்கு முன்பாகவும் அங்கீகாரமற்ற எந்த நபரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், ஒப்புகைச் சீட்டுக் கருவிகளையும் அணுக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளது. அதே சமயம், கணக்கில்வராத போலியான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் போன்றவை எந்த நிலையிலும் நுழைய முடியாது, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் / ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் செயல்முறைகள் அனைத்தும் பங்குதாரர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு, அவை ETS மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
நம் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் மக்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தேர்தலின் நம்பகத்தன்மை, ஒருமைப்பாடு, தூய்மையைக் கட்டிக்காப்பதிலும் இடையூருகள் இருக்க சிறு துரும்பைக் கூட ஆணையம் அனுமதிக்காது என்பதை நாட்டு மக்களிடம் மீண்டும் உத்தரவாதம் அளிக்க ஆணையம் விரும்புகிறது.
(Release ID: 1512772)
Visitor Counter : 967