குடியரசுத் தலைவர் செயலகம்

தில்லி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்உரை

டெல்லி பல்கலைக் கழகத்தின் 94-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.

Posted On: 18 NOV 2017 11:38AM by PIB Chennai

விழாவில் பேசிய அவர், தில்லி பல்கலைக் கழகம் பல வழிகளில் இந்தியப் பல்கலைக்கழகமாக திகழ்கிறது என்றார். நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும், மாநிலமும் இங்கு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் தில்லிக்கு வந்து தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் பயில விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல இளம் மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் கல்வி நிலையமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. அவர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்கும், தில்லி மாநகருக்கும் செழுமையையும், எழுச்சியையும் உருவாக்குகின்றனர்.

நமது சமுதாயத்தின் செயல்பாடுகளை மட்டுமல்லாமல் சிந்தனைகளையும் மாற்றக்கூடிய செயற்கையான புத்திக்கூர்மையைக் கொண்ட உலகத்தில் நாம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அறிவாற்றல் கொண்ட எந்திரங்களின் சமுதாயத்தின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம். அதனால், நமக்கு முன்பாக இருக்கும் சவால்களும், வாய்ப்புகளும் அபரிமிதமாக உள்ளன.

எனவே அதற்கு ஏற்ற செயல்பாடுகளை தில்லி பல்கலைக் கழகம் போன்ற நமது முக்கிய கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் எற்பட்டுள்ளது. அதேசமயம், பாடத்திட்டங்கள் மற்றும் கற்பிக்கும் முறையில் புதுமையைப் புகுத்த வேண்டியதும் அவசியமாகிறது. ஒரு காலத்தில் புனிதமாகக் கருதப்பட்ட பழமையான பாரம்பரிய தடைகள் உடைபட்டு வருகின்றன. புதுமையான கால ஓட்டத்தைச் சமாளிக்கும் வகையில், அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் நமது கல்வி முறையும், பாடத்திட்டங்களும் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, பல்நோக்கு ஒழுங்குமுறை அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

வகுப்பறைகளில் வருகைப் பதிவு ஓரளவே உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். கல்வி மற்றும் உதவித்தொகை பெறுவதில் தொழில்நுட்பத்தை எப்படி கையாளுவது என்ற அணுகுமுறை மிகவும் அவசியம். உலகில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களைப் போல தில்லி பல்கலைக்கழகமும் திறந்தநிலை ஆன்லைன் பாடத்திட்டங்களைத் தொடங்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நம் நாட்டில் அகன்ற அலைவரிசை திறன் அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் பாடத்திட்டங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். அறிவுத்திறனை ஜனநாயகமாக்கும் ஆதாரம் இதற்கு உள்ளது.

உயர்கல்வி பல நோக்கங்களை உள்ளடக்கி உள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால், மாணவர்களை வேலை சந்தைக்கு தயார்படுத்தும் ஒரே நோக்கமே தற்போது உள்ளது. கல்வி கற்பதில் விவேகத்தையும், அறிவு பெறுவதில் விருப்பத்தையும் மாணவர்கள் கொண்டிருந்தால் மட்டுமே பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கம் அர்த்தமுள்ளதாக நிறைவேறும்.


நமது பல்கலைக் கழகங்கள் மீதான பல்வேறு கோரிக்கைகளில் சரியான சமன்பாட்டைக் கண்டறிவது மிகவும் கடினமாகும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். குறுகியகால இலக்குகளை அடைவதில் காட்டப்படும் வேகம் சிலசமயங்களில் கைகொடுக்கின்றன. ஆனால், அறிவுத்திறன் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்கு இலக்கை பல்கலைக்கழகங்கள் இழந்துவிடலாகாது.


கல்லூரி முதல்வர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்கள் பணியிடங்களில் சில காலியிடங்கள் உள்ளதாக தம்மிடம் கூறப்பட்டதை குடியரசுத்தலைவர் நினைவு கூர்ந்தார். இந்தக் காலிப் பணியிடங்களை வெகுவிரைவில் நிரப்ப பல்கலைக்கழக அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகங்களும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



(Release ID: 1512696) Visitor Counter : 145


Read this release in: English