பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய இந்திய விமானப்படையின் ஆன்லைன் தேர்வுக்கான இணையதளத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 11 DEC 2017 11:35AM by PIB Chennai

தில்லியிலுள்ள இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் 11.12.2017 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் ஆன்லைன் தேர்வுக்கான இணையதளத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் பாம்ரே தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய விமானப்படை ஆற்றி வரும் பங்களிப்புக்காக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். சி-டாக் எனப்படும் உயர்கணினி மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஆன்லைன் தேர்வு வசதியை உருவாக்கியதற்காகவும், அதன் மூலம் இந்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘இந்தியாவில் வடிவமைப்போம்’ கொள்கைகளைப் பின்பற்றுவதற்காகவும் இந்திய விமானப்படைக்கு அவர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

 

இந்தியாவின் முப்படைகளில், அதிகாரிகள் மற்றும் வான்படை வீரர்களை தேர்வு செய்வதற்கான தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஆன்லைன் தேர்வு முறையை முதன்முதலில் அறிமுகம் செய்திருப்பது இந்திய விமானப்படைதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய விமானப்படைக்கு அதிகாரிகள் மற்றும் படைவீரர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதியறியும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், இதனை தேர்வு எழுதுவோருக்கு வசதியானதாக மாற்றவும், அதேநேரத்தில் அமைப்புசார் திறனை அதிகரிப்பதற்காகவும் இந்திய அரசு நிறுவனமான உயர்கணினி மேம்பாட்டு மையத்துடன் கடந்த 31.10.2017 அன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரும் ஜனவரி மாதம் அதிகாரிகள் நிலையிலான விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (AFCAT), படைவீரர் நிலையிலான காலமுறை ஆள்தேர்வு (Scheduled test for Airmen Recruitment- STAR) ஆகியவற்றுடன் இந்த ஆன்லைன் தேர்வு முறை தொடங்கும்.

 

இந்த புதிய முறைப்படி நாடு முழுவதும் 760 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அதனால் இந்த தேர்வுகளை எழுதுவதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து பயணம் செய்ய வேண்டிய தொலைவு கணிசமாகக் குறையும். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஏர்மென் எனப்படும் விமானப்படை வீரர் தேர்வில் 4 லட்சம் பேரும், விமானப்படை அதிகாரிகள் தேர்வில் 2 லட்சம் பேரும் பங்கேற்க ஆன்லைன் தேர்வு முறை வகை செய்யும்.



(Release ID: 1512693) Visitor Counter : 122


Read this release in: English