பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

``மகளிர் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பு'' என்ற ஒரு குடையின் கீழான திட்ட நீட்டிப்புக்கும், `பிரதமரின் மகிளா சக்தி கேந்த்ரா' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2017 12:18PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், ``மகளிர் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பு'' என்ற ஒரு குடையின் கீழான திட்டத்துக்கு 2017-18 முதல் 2019-20 வரையில் நீடிப்பு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. ``பிரதமரின் மகிளா சக்தி கேந்த்ரா'' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கவும் இந்தக் குழு ஒப்புதல் அளித்தது. பெண்கள் தங்களுடைய முழுமையான திறன்களை உணரும் வகையிலான சூழல்களை உருவாக்குவதற்கு சமுதாய பங்கேற்பு மூலம் கிராமப்புற மகளிருக்கு அதிகாரம் அளிப்பதாக இந்தத் திட்டம் இருக்கும். `பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' திட்டம் 161 மாவட்டங்களில் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அதை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2017-18 முதல் 2019-20 வரையில் நிதி திட்டச் செலவு ரூ.3,636.85 கோடியாக இருக்கும். இதில் மத்திய அரசின் பங்கு சுமார் ரூ. 3,084 கோடியாக இருக்கும்.

 

திட்டத்தின் பயன்கள் :

ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ள துணைத் திட்டங்கள், சமூக நல திட்டங்களாக, குறிப்பாக பெண்கள் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டிருக்கிறது; பெண் குழந்தைகளின் உயிர் பிழைத்தல் & பாதுகாப்பை உறுதி செய்வது; அந்தக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்வது, தன்னுடைய திறனை எட்டுவதற்கு ஏற்ப அதிகாரம் அளிப்பது ஆகியவையும் இதன் நோக்கங்களாக உள்ளன. தங்களுக்கு உரிய விஷயங்களைப் பெறுவதற்காக அரசை கிராமப்புற பெண்கள் அணுகுவதற்கான இடைமுகத்தை இது அளிக்கும். பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி மூலம் அதிகாரம் அளிக்கவும் இது உதவியாக இருக்கும். தன்னார்வ சமுதாய சேவை மற்றும் பாலின சமத்துவம் என்ற உணர்வை மாணவ தன்னார்வலர்கள் ஊக்குவிப்பார்கள். இந்த மாணவர்கள் ``மாற்றத்துக்கான முகவர்களாக'' இருந்து, தங்கள் சமுதாயங்கள் மற்றும் நாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

ஒரு குடையின் கீழான திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் :

``பிரதமரின் மகிளா சக்தி கேந்த்ரம் (PMMSK)'' என்ற புதிய திட்டம், பல்வேறு நிலைகளில் செயல்படும் வகையில் தொலைநோக்குடன் உருவாக்கப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் (இணையதளம் சார்ந்த அறிவுப்பூர்வ ஆதரவு), மாநில அளவிலும் (மகளிருக்கான மாநில ஆதாரவள மையம்) பெண்கள் தொடர்பான விஷயங்களில் அந்தந்த அரசுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை அளிக்கும் அதேசமயத்தில், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான மையங்கள் PMMSK-வுக்கு ஆதரவு அளிக்கும். படிப்படியாக 640 மாவட்டங்களில் BBBP கால்பதிப்பதற்கு இது உதவிகளைச் செய்யும்.

PMMSK ஒன்றிய அளவிலான முயற்சிகளின் ஓர் அங்கமாக 115 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் மாணவ தன்னார்வலர்கள் சமுதாய பங்கேற்பில் ஈடுபடும் வகையில் உத்தேசிக்கப் பட்டுள்ளது. அரசின் முக்கியமான பல்வேறு திட்டங்கள் / திட்ட நிரல்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய முக்கியமான பங்கை மாணவ தன்னார்வலர்கள் ஆற்றுவார்கள். இந்தச் செயல்முறையில் உள்ளூர் கல்லூரிகளில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். நாட்டு மக்களை பொறுப்பான குடிமக்களாக மாற்றுவதற்கான முயற்சியில் பங்களிப்பு செய்வதற்கு NSS/NCC மாணவர்களை ஈடுபடுத்துவதும் ஒரு விருப்பத் தெரிவாக வைக்கப் பட்டுள்ளது. தங்களுடைய சொந்த சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்கள் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்து, இந்தியாவின் முன்னேற்றத்தில் அவர்களும் சம பங்காளர்களாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மாணவ தன்னார்வலர்கள் பங்கேற்று செயல்படுவதற்கான வாய்ப்பை இது அளிக்கும்.

கிடைக்கக் கூடிய பயன்களின் அடிப்படையிலான மாணவ தன்னார்வலர்களின் செயல்பாடுகள் இணையதளம் சார்ந்த முறைமையின் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். பணி நிறைவு பெற்றதும், சமுதாய சேவைக்கான சான்றிதழ்கள் தேசிய முனையத்தில் காட்சிப்படுத்தப்படும். எதிர்காலத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆதார வளம் / சொத்தாக அதைப் பயன்படுத்தலாம்.

பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (BBBP) திட்டத்தை நாடு தழுவிய  அளவில் 640 மாவட்டங்களில் பயன்களைக் கூறுதல் மற்றும் உடகப் பிரசாரம் மூலம் விரிவாக்கம் செய்து தீவிரப்படுத்தும் முயற்சிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 405 மாவட்டங்களில் பல துறை கவனம் கொண்ட செயல்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. CSR குறைவாக உள்ள அனைத்து மாவட்டங்களும்  BBBP-யின் கீழ் முதலாவது ஆண்டிலேயே, எடுத்துக் கொள்ளப்படும்.பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, கூடுதலாக 190 உழைக்கும் மகளிர் விடுதிகள் தொடங்கப்படும். சுமார் 19,000 பேரை கூடுதலாக தங்க வைக்கும் வகையில் இவை உருவாக்கப்படும். சுமார் 26,000 பயனாளிகளுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் அளிப்பதற்காக கூடுதல் ஸ்வாதார் கிரஹா-க்கள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவு அளிப்பதற்காக ஒற்றை தள மையங்கள் (OSC) 150 கூடுதல் மாவட்டங்களில், இந்தக் காலக்கட்டத்தில் அமைக்கப்படும. இந்த ஒற்றை தள மையங்கள் மகளிர் ஹெல்ப்லைன்களுடன் தொடர்புபடுத்தப்படும். நாட்டில் பொது மற்றும் தனியார் இடங்கலில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவசர கால மற்றும் அவசரம் அல்லாத நேரங்களில் 24 மணி நேர எமர்ஜென்சி சேவை அளிப்பவையாக இவை இருக்கும்.  பொதுமக்கள் - காவல் துறை இடையே தொடர்பை உருவாக்கும் வகையில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தன்னார்வ அடிப்படையில் மாநில காவல் துறை தன்னார்வலர்கள் (MPV-க்கள்) பங்கேற்கும் தனித்துவமான முயற்சி, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 65 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் :

ஒரு குடையின் கீழான இந்த துணைத் திட்டங்கள் அனைத்திலும் திட்டமிடுதல், ஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தலுக்காக தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு பொதுவான பணிக் குழு உருவாக்கப்படும். செயல்பாடுகள் ஒருமுகமாக இருப்பதையும், சிக்கனமாக இருப்பதையும் உறுதி செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டு இது செயல்படும். ஒவ்வொரு திட்டத்திலும் தெளிவான, விதிமுறைகளின்படி கவனத்தை செலுத்தக் கூடிய இலக்குகளைக் கொண்டதாக, SDG-க்களுடன் இயைந்ததாக இருக்கும். NITI Ayog ஆலோசனை கூறியுள்ளவாறு அனைத்து துணைத் திட்டங்களுக்குமான, பயன்  அடிப்படையிலான குறியீடுகளைக் கண்காணிக்கும் நடைமுறை அமல் செய்யப்படும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமலாக்க முகமைகளால் இந்தத் திட்டங்கள் அமல் செய்யப்படும். எல்லா துணைத் திட்டங்கலுமே மத்திய அளவில், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு கட்டமைப்பை உள்ளடக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

 

*****



(Release ID: 1512442) Visitor Counter : 1222


Read this release in: English