ஆயுஷ்
“ஆயுஷ்” மற்றும் ஆரோக்கியம் குறித்த முதல் பன்னாட்டு மாநாடு மற்றும் கருத்தரங்கு தில்லியில் இன்று தொடங்கியது
“ஆரோக்கியா 2017” என்ற இம்மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து 1500 பேராளர்கள், 250 மாற்று மருந்து உற்பத்தியாளர்கள் பங்கேற்பு
Posted On:
04 DEC 2017 11:40AM by PIB Chennai
“ஆயுஷ்” மற்றும் ஆரோக்கியம் குறித்த முதல் பன்னாட்டு மாநாடான “ஆரோக்கியா 2017” தில்லியில் இன்று தொடங்கியது. மாநாட்டை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தொடங்கிவைத்தனர். மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி, விஞ்ஞான் பவனில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 7 - ஆம் தேதி வரையில் கண்காட்சி நடைபெறுகிறது. ஆயுஷ் அமைச்சகமும் தொழில் – வர்த்தக அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆரோக்கியா 2017 மாநாட்டில் ஃபார்ம்எக்சில் (Pharmexcil), இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஆகியவை பங்கேற்றுள்ளன.
மாநாட்டில் பங்கேற்ற பேராளர்களிடம் உரையாற்றிய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, “இந்தியாவில் நடத்தப்படும் “ஆரோக்கியா 2017” மாநாடு உலக அளவில் முதன் முதலாக நடத்தப்படும் மாநாடாகும். இந்த மாநாட்டில் மூலம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவை உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்திற்குப் பயன்படுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்“ என்றார்.
“பாரம்பரிய மருத்துவ அறிவு இந்தியாவில் மட்டுமே இருப்பதாகச் சொல்ல முடியாது. இந்த மாநாட்டின் மூலமாக உலகில் உள்ள இதர நாடுகளின் பங்கேற்பாளர்களிடமும் நாம் கற்றுக் கொள்வோம் என எதிர்பார்க்கிறோம். இந்தத் துறையில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் இந்திய அரசு மகிழ்ச்சியடைகிறது என்றும் அவர் கூறினார்.
ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் பேசுகையில், மக்கள் நல்வாழ்வுச் சேவைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஆயுஷ் அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது என்றார்.
“இந்த அமைச்சகத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவத்தில் தேசிய அளவில் அபிவிருத்திச் செயல்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி, மண்டல அளவிலும் உலக அளவிலும் இருதரப்பு, பல தரப்பு கூட்டுச் செயல்பாட்டையும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் எதிர்பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளதன் மூலம் உலக அளவில் யோகா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. யோகா குறித்த தகவல்களையும், நிபுணத்துவம் வாய்ந்த தகுதியான சான்றுபெற்ற யோகா பயிற்றுநர்களையும் பகிர்ந்து கொள்வதற்கும் ஏராளமான ஒத்துழைப்பு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதைப் போல், உறுப்பு நாடுகள் பலனடையும் வகையில், உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) நாம் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் மூலமாக ஆயுஷ் துறை மூலம் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை உருவாக்க உத்தேசித்துள்ளோம்” என்றும் அமைச்சர் கூறினார்.
“உலகத்துக்கான ஆயுஷ்” என்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை ஆயுஷ் விதிமுறைகளுக்கும், ஆசியான் (ASEAN) மற்றும் வங்கக் கடலை ஒட்டிய நாடுகளின் பல பிரிவு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன் முயற்சி அமைப்பு (BIMSTEC) ஆகியவற்றுடன் பதிவு செய்வதற்கும் என, திட்டத்தை அளிப்பதற்கான நிகழ்ச்சியில் ஃப்ராஸ்ட் அண்ட் சல்லிவன் (Frost & Sullivan) வெளியிட்டது.
உலக நாடுகளுக்கு ஆயுர்வேதம் மற்றும் மாற்று மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், இதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தியாவின் மூலிகைச் சந்தையின் மதிப்பு தற்போது ரூ.5,000 கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 14 சதவீதம் வளர்ச்சி வீதத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
*****
(Release ID: 1512432)
Visitor Counter : 118