நீர்வளத் துறை அமைச்சகம்

திரு.நிதின் கட்கரி வேண்டுகோளுக்கு இணங்க, நமாமிகங்கா திட்டத்திற்கு வியாபாரத் துறைத தலைவர்கள் ரூ.500 கோடி வரை வழங்குவதற்கு ஒப்புதல்

Posted On: 07 DEC 2017 5:32PM by PIB Chennai

நமாமி கங்கா எனப்படும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு இந்தியாவின் வியாபார மற்றும் தொழில் துறை தலைவர்கள் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் கங்கைக் கரையில் நுழைவு வாயில்கள், பூங்காக்கள், தகன மேடைகள் போன்ற வசதிகள் செய்யப்படும். நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை உயிர்ப்பித்தல், கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் அமைச்சர் திரு.நிதின் கட்கரி  இன்று மும்பையில் வியாபாரத் துறைத் தலைவர்களைச் சந்தித்து உரையாடியபோது, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்தச் சந்திப்பு, தேசிய கங்கைத் தூய்மை இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் திரு.கட்கரி, கங்கையைத் தூய்மைப்படுத்துதல் ஓரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். உலகம் முழுவதும் ஏராளமான தனி நபர்கள், கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாராளமாக நன்கொடை வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். நதி மாசுபடுவதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லண்டன் மாநகரில் கடந்த வாரம் தேசிய கங்கை தூய்மை இயக்கத்தினர் (NMCG.) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய நிறுவனத்தினர் நமாமிகங்கா திட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தது போலவே, மும்பையில் வியாபார துறையினரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

நதிக்கரையில் நுழைவு வாயில், மயானம், நீர்நிலைகள், பூங்கா மற்றும் சுகாதார வசதிகள் செய்யும் 2,500 கோடி ரூபாய் மேம்பாட்டுத் திட்டத்திற்கு தனியாரிடம் நிதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கான பட்டியல் தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் இணையத்திலும், மின்னணு புத்தகமாகவும் கிடைக்கிறது. இந்த நமாமி கங்கா திட்டத்தின் கீழ் ஏதேனும் பணியை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கி, கங்கையைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் இணையுமாறு வியாபார துறையினரை அரசு கேட்டுக்கொள்கிறது.

வியாபார தலைவர்களிடம் மும்பையில் பேசிய திரு.கட்கரி, கங்கை மற்றும் அதன் கிளை நதிகளையும் புத்துயிர் பெறவைக்கும் நமாமி கங்கா திட்டம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். குறுகிய கால நடவடிக்கையாக, நதியின் மீது காணப்படும் அசுத்தங்களை நீக்கி, நுழைவு வாயில்கள் மற்றும் மயானங்கள் நவீனப்படுத்தப்படும். இடைக்காலத் திட்டமாக 5 ஆண்டுகளில் நகராட்சிகளுடன் இணைந்து கழிவுநீர் மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு, கழிவு நீர் மேலாண்மை, நீரின் தரம் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற தூய்மை போன்றவை பேணப்படும். அடுத்து நீண்டகாலத் திட்டமாக 10 ஆண்டுகளில், போதுமான  நீர் ஓட்டத்தை நிலைப்படுத்துதல், நதிக் கரைகளில் பயிர் வளர்ப்பு மற்றும் தண்ணீரை முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

மனிதவள மேம்பாடு, நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை இணை அமைச்சர் டாக்டர் சத்ய பால் சிங் பேசுகையில், கங்கை என்பது ஒரு நதி மட்டுமல்ல, அது நாகரிக மாற்றங்களின் அடையாளம். இந்தியர்களைப் பொறுத்தவரை கங்கை புனிதமான ஆறு, அதனால்தான் அதன் கரைகளில், நிறைய மத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் ஒரு தத்துவ அடையாளம். உருவாக்குவது, அழிப்பது, உயிர்ப்பிப்பது, தூய்மைப்படுத்துவது போன்ற பல்வேறு இந்திய கலாச்சாரங்களை தண்ணீர் உள்ளடக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

நீர் வளத் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. யு.பி.சிங் பேசுகையில், கங்கை புத்துயிர்த் திட்டத்தில், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நதியின் நீரோட்டம் முழுமையாகவும், தொடர்ந்தும் கண்காணிக்கப்படும். 113 நுழைவு வாயில்களும் 52 மயானங்களும் பல்வேறு கட்டங்களில் அமைக்கப்படுவதற்காக 626.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரனாசியில் உள்ள 84 பாதைகளைத் தூய்மைப்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கங்கை நதிக்கரையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பது தடுக்கப்பட்டுள்ளது. கங்கை நதியின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு டிராஸ் ஸ்கிம்மர்ஸ் இயந்திரம் 11 நகரங்களில் செயல்படுகிறது.

2014-ம் ஆண்டு இந்திய அரசு, நமாமி கங்கா திட்டத்தை அறிமுகப்படுத்தி, நதியை முழுமையாக தூய்மைப்படுத்தி புத்துயிர் ஊட்டுவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேசிய கங்கை தூய்மை இயக்கமானது 17 ஆயிரம் கோடி ரூபாயில் கழிவு நீர் மேலாண்மை, தொழில்துறைக் கழிவுகளை நிர்வகித்தல், பல்லுயிர்ப் பெருக்கம், பயிர் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, காடு வளர்ப்பு, கிராமப்புறத் தூய்மை, ஆறுகளின் முகப்பு மேலாண்மை, பாதை மற்றும் மயானங்களை மேம்படுத்துவது மற்றும் திருத்தி அமைப்பது போன்ற அனைத்தையும் மக்கள் இயக்கமாக மாற்றி கங்கையை தூய்மைப்படுத்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

கங்கை நதியை புத்துயிர் பெற வைப்பதில் பல்வேறு மத நம்பிக்கைகள், கலாச்சாரம், வரலாறு போன்றவை முக்கிய இடம் பிடித்திருக்கிறது. மேலும் நாட்டு மக்கள் தொகையில் 43% பேர் ஏதேனும் வகையில் கங்கையுடன் தொடர்பு உள்ளவர்களாக இருப்பதால், இந்தத் திட்டத்தை அரசினால் மட்டும் மேற்கொள்வது இயலாத காரியம். அனைத்து மக்களின் முழுமையான அர்ப்பணிப்கையும், ஆதரவையும் அரசு எதிர்பார்க்கிறது. கங்கை ஒரு நதி மட்டுமல்ல, முடிவே இல்லாத வளங்கள், காலங்களைக் கடந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமும் கொண்டது அது.



(Release ID: 1512334) Visitor Counter : 236


Read this release in: English