சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
Posted On:
07 DEC 2017 5:08PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மையத்திற்கான அடிக்கல்லை அவர் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்த மையம் டாக்டர் அம்பேத்கரின் போதனைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான டாக்டர் அம்பேத்கர் மையம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது எனக் குறிப்பிட்ட பிரதமர், சமூகப் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்த மையம் முக்கிய பங்கு அளிக்கும் என்றார். இந்த மையம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் சிந்தனை அமைப்பாக செயல்படும் என்றார்.
சிந்தனைத் தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் வெவ்வேறு தருணங்களில் நமது நாட்டின் எதிர்கால பயண திசையை வடிவமைத்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். தேசத்தை உருவாக்குவதற்கு தனது பங்களிப்பை அளித்த பாபா சாகேப்புக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அவரது சிந்தனைகள் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து அதிக அளவிலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்காகவே டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய முக்கியமான இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வகையில் அவர் தில்லியில் உள்ள அலிப்பூர், மத்திய பிரதேசத்தில் உள்ள மோ, மும்பையில் உள்ள இந்து மில், நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி, மற்றும் லண்டனில் உள்ள இல்லம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். பஞ்சதீர்த் எனப்படும் இந்த இடங்கள் இன்றைய தலைமுறை டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான இடங்கள் என அவர் கூறினார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பீம் செயலி டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார தொலைநோக்கு பார்வைக்கான மத்திய அரசின் அஞ்சலி.
1946 டிசம்பரில் அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையை குறிப்பிட்ட பிரதமர், தாம் எதிர்கொண்ட போராட்டங்களையும் மீறி, இந்த நாடு தனது பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஊக்கம் அளிக்கும் தொலைநோக்கு பார்வையை டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்தார் எனத் தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நாம் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். சமூக பின்னடைவுகளை போக்குவதற்கான திறன் இன்றைய தலைமுறையினருக்கு உள்ள்து என அவர் கூறினார்.
நமது அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். கடந்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளாக சமூக ஜனநாயகம் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஜன் தன் திட்டம், உஜ்வாலா திட்டம், ஸ்வச் பாரத் இயக்கம், காப்பீட்டு திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சவுபாக்கியா திட்டம் போன்ற பல திட்டங்களை அவர் குறிப்பிட்டார். திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார். மண் ஆரோக்கிய அட்டைகள், மிஷன் இந்திரதனுஷ் விநியோகம் பற்றி விரிவாக குறிப்பிட்ட அவர் கிராமப்புறங்களை மின்மயமாக்கும் திட்டங்களும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறினார். சுய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய இந்தியாவுக்கான தனது அழைப்பு, டாக்டர் அம்பேத்கர் கனவு கண்ட, அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் கொண்ட, சாதியின் பெயரால் ஒடுக்கப்படுவது அற்ற, மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் முன்னேற்றம் தரும் இந்தியா தான் என்றார். பாபா சாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அதனை 2022 -ம் ஆண்டில் நாம் அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திரு. தாவர்சந்த் கெலாட் தனது உரையில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதால் அது வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டார்., இதற்காக அவர் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது என அவர் தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் ரூ. 195 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் கட்டி முடிக்க திட்டமிட்டப்பட்ட இந்தத் திட்டம் அதற்கு பல நாட்கள் முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பிரதமரால் நாட்டப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் 3.25 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பகுதியின் அளவு 117830.59 சதுர அடியாகும். டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நிபுணத்துவம் வாய்ந்த மையமாக ஆக்கும் வகையில் இதில் பரந்து விரிந்த நூலகம், மூன்று அதிநவீன வசதிகள் கொண்ட அரங்குகள், மாறுபட்ட எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் மூன்று மாநாட்டு அரங்குகள் மற்றும் கண்காட்சி அரங்குகள் உள்ளன.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் கட்டுமான கலை நவீனம் மற்றும் பாரம்பரியக் கலைகளின் கலவையாக உருவாக்கப்பட்டு இந்த மையத்தின் நுழைவு வாயிலில் புத்தமதத்தின் மீது டாக்டர் அம்பேத்கரின் ஈடுபாட்டை கவனத்தில் கொண்டு, சாஞ்சி ஸ்தூபா தோரண வாயில் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
சைத்ய வளைவு மற்றும் உட்புறங்களில், ரெட் சாண்ட்ஸ்டோன் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திறந்த வெளியில் கல்லில் செதுக்கப்பட்ட எட்டு அடி உயர தியான முத்திரை நிலையில் உள்ள புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சைத்ய வளைவு எதிரில் டாக்டர் அம்பேத்கர் நின்ற நிலையில் இருக்கும் ஒரு சிலையும், பிரதான அறையில் டாக்டர் அம்பேத்கர் அமர்ந்த நிலையில் உள்ள சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கு மூலையில் திறந்த வெளியில் மக்களின் பார்வையில் படும் வகையில் 25 மீட்டர் உயர வெண்கலத்தால் ஆன அசோகர் தூண் அமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டிடத்தை தனித்தன்மையானதாக மாற்றி உள்ளது.
இந்தக் கட்டிடத்தின் மைய மாடம் வெளிப்படையாக தெரியும் பொருட்களைக் கொண்டு தேசிய கொடியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 24 ஆரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் இந்த இயல்பு, நாள் முழுவதும் அறைக்குள் இயற்கை வெளிச்சத்தை அளிக்கும். இதன் மூலம் மின்சார செலவு சேமிக்கப்படும். இங்குள்ள இ-நூலகம் சர்வதேச நூலகங்களுக்கான தோற்றத்தை அளிக்கும். கல்வியாளரகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச நூலகங்களின் இரண்டு லட்சம் புத்தகங்கள் மற்றும் 70,000 பத்திரிகைகளை படிக்க முடியும். பார்வையற்றோருக்கு உதவும் வகையில் இந்த நூலகத்தில் பிரெய்லி பிரிவு ஒன்றும் உள்ளது.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சமூக மற்றும் பொருளாதாரக் கல்விக்கான ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்ததாக திகழும் சமூக-பொருளாதார மாற்றத்திற்கான டாக்டர் அம்பேத்கர் மையம் (டி.ஏ.ஐ.சி.எஸ்.இ.டி.) செயல்படுகிறது. சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான டாக்டர் அம்பேத்கர் மையம் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் கண்ணோட்டம் கொண்டு சமூக பொருளாதார விவகாரங்களில் செயல்பாடு கொண்ட சிந்தனை அமைப்பாகும். இந்த மையத்தில் ஆலோசனை பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு உள்ளன. இந்த மையம் கள பரிமாற்றங்களில் ஈடுபடுவது, ஆலோசனைகள் மேற்கொள்வது, ஆராய்ச்சி அறிக்கைகளை அளிப்பது, கொள்கை விளக்கமளிப்ப்து மற்றும் பயிலரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துவது ஆகிய பணிகளில் ஈடுபடும்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்வு மற்றும் போதனைகளை மையமாக வைத்து, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் அமைப்பு மற்றும் வடிவம் ஆகியவை வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கியதன்மை மற்றும் அடையாளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதன் மூலம் ஜனநாயகத்தின் உணர்வினையும் சமத்துவத்தையும் கட்டிட வடிவமைப்புக் கலை மூலம் அளிக்கிறது. கட்டுமானத்தில் டாக்டர் அம்பேத்கரின் தனிப்பட்ட ஆளுமையை உள்ளடக்குவதில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன மாளிகையின் கல்லால் செதுக்கப்பட்ட முகப்புத் தோற்றம் டாக்டர் அம்பேத்கரின் தனிப்பட்ட ஆளுமையாகப் போற்றப்படும் வலிமை, உறுதி மற்றும் முன்மாதிரியான தீர்மானங்களையும் ஊக்கமளிக்கும் செயல்களையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அம்பேத்கரின் கொள்கைகளில் முக்கிய இடம்பெற்று விளங்கிய புத்தரின் உயர்ந்த தத்துவங்களான இரக்கம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் புத்தமதக் கட்டுமானக் கலையின் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
டாக்டர் அம்பேத்கர் நெடுநோக்கத்தை சகோதரத்துவம் இக்கட்டிட அமைப்பில் தெளிவாகத் தெரியும் வண்ணம் கலைநயமிக்கதாக அமைக்கப்பட்டுள்ளது. சக்திப் பயன்பாட்டில் திறன்மிக்க வடிவமைப்பையும் இது கொண்டது. இந்தக் கட்டிடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உலகத்தரமான அமைப்பாக, டாக்டர் அம்பேத்கர் வாழ்வில் பயின்ற துறைகளில் ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அதன் மூலம் மனித உரிமை, சமத்துவம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை அணுகவும் மேம்படுத்தவும் அர்ப்பணிக்கப்படுகிறது.
*****
(Release ID: 1512321)
Visitor Counter : 917