ஆயுஷ்

ஆயுஷ் மற்றும் நல்வாழ்வு மீதான , “சர்வதேச ஆரோக்கியா 2017” மாநாடு நிறைவு

Posted On: 08 DEC 2017 4:16PM by PIB Chennai

ஆயுஷ் மற்றும் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச ஆரோக்கியா 2017 மாநாடு, மற்றும் கண்காட்சி புதுடெல்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி), வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகங்கள் இணைந்து மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இந்திய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. மாநாட்டில் 70 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாடு டிசம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற்றது.  2017-ம் ஆண்டின் தேசியச் சுகாதார கொள்கையைப் பின்னணியாகக் கொண்டு உலக அளவில் ஆயுஷை பிரதானப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. அது மட்டும் அல்லாமல் ஆயுஷுக்கான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான முழுமையான கருத்தரங்களும் மாநாட்டில் இடம் பெற்றன.

 

 

நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), திரு. ஸ்ரீபாத் யேசா நாய்க் கடந்த சில நாள்களாக ஆயுஷின் முக்கியத்துவம் தொடர்பாக ஒன்று கூடி விவாதித்து வருவதாக குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் ஆயுஷின் மகத்தான ஆற்றல் மனித குலத்துக்கு நல்லதொரு பயனை அளிக்கும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டார். பராம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்காக 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருப்பதன் மூலம் அது கண்கூடாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஆயுஷ் மருத்துவம் அறிவியல் ரீதியாக மட்டும் அல்ல வியாபார ரீதியாகவும் கணிசமான பலனை அளிக்கும் என்று மேலும் விவரித்தார். பாரம்பரிய மருந்துகளைத் தயாரிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் மிகுந்த ஆர்வமுடன் பங்கு கொண்டுள்ளனர். வருங்கலாத்தில் இந்த மருந்துகளுக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டு பொருளாதார ரீதியாக நல்லதொரு தொழிலாக இது மாறும் என்பதற்கான அறிகுறியாகும் இது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 


(Release ID: 1512295) Visitor Counter : 158


Read this release in: English