கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சர்வதேசக் கடல்சார் கவுன்சிலில் இந்தியா மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு (2018-19) உறுப்பினராகத் தேர்வு

Posted On: 02 DEC 2017 2:21PM by PIB Chennai

சர்வதேசக் கடல்சார் கவுன்சிலில் இந்தியா மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு (2018-19) உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் 01 டிசம்பர் 2017ல் நடந்த சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (ஐஎம்ஓ) 30வது கூட்டத்தில், ‘பி’ பிரிவின் கீழ் இந்தியா மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐஎம்ஓ கவுன்சிலில் 40 நாடுகள் உறுப்பினராக இடம்பெற்றுள்ளன. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் தலா 10 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த உறுப்பு நாடுகள் ஐஎம்ஓ வருடாந்திரக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர். சர்வதேச கப்பல் துறை உட்பட ஐஎம்ஓ அதிகாரத்துக்கு உட்பட்ட, பல்வேறு முக்கிய விஷயங்களை தீர்மானிப்பதில் ஐஎம்ஓ கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றில் திட்டங்களைச் செயலாக்குவது தொடர்பான உத்திகள் மற்றும் பட்ஜெட்டும் அடங்கும்.

முன்பு எதிர்ப்பு இன்றி ஐஎம்ஓ.வுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல் அல்லாமல், இம்முறை இந்தியா, ‘பி’ பிரிவின் 10 இடங்களுக்கான தேர்தலைச் சந்தித்தது. இதற்கு காரணம், தற்போது ஐஎம்ஓ கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐஎம்ஓ கவுன்சிலின் ‘சி’ பிரிவில் தற்போது உறுப்பினராக இருக்கும் ஆஸ்திரேலியா ஆகியவை வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால், கட்டாயம் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்தியா, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது.

ஐஎம்ஓ.வின் தலைமையகம் அமைந்துள்ள லண்டனில், 27 நவம்பர் 2017 முதல் 06 டிசம்பர் 2017 வரையில் ஐஎம்ஓ.வின் 30வது வருடாந்திரக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துணர்வு துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி தலைமையில் இந்தியாவின் உயர்நிலைக் குழுவினர் கலந்து கொண்டனர். அவருடன், கப்பல் துறைச் செயலாளர் திரு.கோபால் கிருஷ்ணா, கப்பல் துறைக் கூடுதல் பொது இயக்குநர் திரு.அமிதாப் குமார், கப்பல் துறை பொது இயக்குநரகத்தின் கடல்வழிகள் பிரிவு கூடுதல் ஆலோசகர் கேப்டன் ஜெயக்குமார், கப்பல் துறையின் இந்தியப் பதிவுப் பிரிவுப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் 1,359 கப்பல்களுடன் கூடிய மிகப்பெரிய வர்த்தக கப்பல் தொகுதி செயல்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும், கடலோரப் பகுதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுகின்றன. சராசரியாக ஆண்டுக்கு 12.2 மில்லியன் டன் சரக்கு இவற்றால் கையாளப்படுகிறது. இந்தியாவின் 90 சதவீத வெளிநாட்டு வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மூலமாகவே நடைபெறுகிறது. இதில் 92 சதவீதப் பொருட்கள், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கடற்கரையில் இருந்து பொருட்களைக் கொண்டு செல்லவும், கொண்டு வரவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பதிவு பெற்ற கப்பல்களுக்கு விரிவான வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் 1,45,000 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாலுமிகள் மற்றும் கப்பற்பணியாளர்கள் உள்ளனர். இவர்களை சிறப்பு வசதிகள் கொண்ட கப்பல்களில் பணியமர்த்த இவர்களே அதிகம் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

ஐஎம்ஓ.வின் ஆரம்பக்காலத்தில் இருந்து இந்தியா அதில் உறுப்பினராக இருந்து வருகிறது. 1959ம் ஆண்டின் IMO ஒப்பந்தத்தை ஏற்று கொண்ட இந்தியா அதன் உறுப்பு நாடாக இந்தியா இணைந்தது. 1983-84 ஆகிய இரண்டு ஆண்டுகளைத் தவிர, சேர்ந்த நாளில் இருந்து, இதுவரையில் இந்தியா ஐஎம்ஓ கவுன்சிலுக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் பெருமையை பெற்றதுடன், அதனுடன் இணைந்து சேவையாற்றியும் வருகிறது.

ஐஎம்ஓ –வின் ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறையில் இந்தியா பங்கு எடுத்துள்ளது. மேலும், தற்போது கப்பல்களை நிலைநிறுத்தும் தண்ணீர் எடை குறித்த ஒப்பந்தம் மற்றும் பங்கர் ஒப்பந்தம் போன்ற முன்னேறிய நிலையில் உள்ள ஒப்பந்தகங்களுக்கும் இந்தியா ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ளது. ஏற்கனவே இந்தியா, மாலுமிகள் அடையாள ஆவணங்களை உறுப்படுத்தும் திருத்த ஒப்பந்தம் 2003, மற்றும் கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் ஆகியவற்றை ஏற்றுக கொண்டதர்கான ஆவணங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பில் தாக்கல் செய்துள்ளது.

ஐஎம்ஓ.வுக்கு எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தொடர்ந்து இந்தியா தன்னுடைய நிபுணத்துவ மனிதசக்தி சேவையை வழங்கும். ஐஎம்ஓ.வின் தணிக்கையாளர்கள் அடங்கிய குழுவான, தன்னார்வ ஐஎம்ஓ உறுப்பு நாடுகள் கணக்கு தணிக்கை திட்டம் (விஐஎம்எஸ்ஏஎஸ்) மற்றும் இலக்கு அடிப்படையிலான தரநிலை (ஜிபிஎஸ்) ஆகியவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான தணிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், ஐஎம்ஓ கமிட்டிகளால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு செயல் குழுக்களில் ஏராளமான இந்திய நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐஎம்ஓ.வில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், சர்வதேச கடல்சார் சமுதாயத்தின் வருங்கால கடல்சார் நலன்கள் மற்றும் அதன் குடிமக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக இந்தியா தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.



(Release ID: 1511824) Visitor Counter : 305


Read this release in: English