உள்துறை அமைச்சகம்
ஓக்கி புயல் தொடர்பான தேசிய நெருக்கடி மேலாண்மை குழுக் கூட்டம்
தயார்நிலை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சரவை செயலர் ஆய்வு
Posted On:
04 DEC 2017 2:09PM by PIB Chennai
அமைச்சரவை செயலர் திரு. பி. கே சின்ஹா தலைமையில் இன்று தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்படக் கூடிய மகாராஸ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தப் புயல் டிசம்பர் 5 நள்ளிரவு குஜராத்தின் தெற்குப் பகுதியிலும் வட மஹாராஷ்டிரா சூரத் அருகேயும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தெற்கு அந்தமான் கடலை ஒட்டி வங்கக் கடலின் தென்கிழக்கில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இதனை அடுத்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வெளியிடப்பட்டன. அந்தந்தப் பகுதிகளில் நேரக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்குமாறு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான்- நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலர்கள் மற்றும் மூத்த அலுவலர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்த அமைச்சரவைச் செயலர் தற்போதுள்ள நிலைமை குறித்து விவாதித்தார். மத்திய உள்துறை அமைச்சகம், தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியம், மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடற் படை, விமானப் படை, கடலோரக் காவல்படை புவி அறிவியல் அமைச்சகம், இந்திய வானிலை ஆய்வுத் துறை எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய, மாநில அரசின் துறைகள் சூறாவளி புயலை கண்காணித்தது தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடலோரக் காவல் படை, விமானக் படை, கடற்படை, தேசியப் பேரிடர் நிவாரணப் படை மற்றும் உள்ளூர் அரசுத் துறைகள் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 243 மீனவர்களும், கேரளாவை சேர்ந்த 250 மீனவர்களும் லக்ஷடீப்பைச் சேர்ந்த 1047 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அரசு முகமைகள் ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவிப் பொருட்களும் அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை தமிழ் நாடு, கேரள மற்றும் லக்ஷதீப் மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு கடலோரக் காவல் படையின் 10 கப்பல்கள், 3 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் கடற்படையின் 10 கப்பல்கள், 2 விமானம், 2 ஹெலிகாப்டர்கள் விமான படையின் ஒரு விமானம், 3 ஹெலிகாப்டர்கள் ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1511820)
Visitor Counter : 204