ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமர் ஊரக வீட்டு வசதித் திட்ட இலக்கை எட்ட அரசு தீவிரம்
ஓராண்டில் சாதனையாக 10 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு
Posted On:
29 NOV 2017 5:24PM by PIB Chennai
மாண்புமிகு.பிரதமர் 2016 நவம்பர் 20-ம் தேதி பிரதம மந்திரி கிராமிய வீட்டுவசதி திட்டத்தை ஆக்ராவில் துவக்கி வைத்தார். 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் ஒரு கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 2018 மார்ச் 31-க்குள் 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன.
இந்த இலக்கை எட்ட 51 லட்சம் பயனாளிகள் 2018 மார்ச்சுக்குள் தங்கள் வீடுகளைக் கட்டி முடிக்க மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் மாநில அரசுகளின் பங்குடன் பல நடவடிக்கைகளை எடுத்தது. வீடுகளை முடிக்க மாதாந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2017 நவம்பருக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் என்ற இலக்கு 2017 நவம்பர் 29-ம் தேதிக்குள் எட்டப்பட்டது. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் இது சாத்தியமாக்கப்பட்டது. டிசம்பர் 31-க்குள் 15 லட்சம் வீடுகளும், 2018 ஜனவரி 31-க்குள் 25 லட்சம் வீடுகளும், பிப்ரவரி 28-க்குள் 35 லட்சம் வீடுகளும், மார்ச் 31-க்குள் 51 லட்சம் வீடுகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2018-க்குள் 51 லட்சம் வீடுகள் என்ற இலக்கை எட்ட ,56.90 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது. 51.39 லட்சம் பயனாளிகள் முதல் தவணைத் தொகையைப் பெற்றுள்ளனர். 16.05 லட்சம் பயனாளிகள் தங்கள் வீடுகளை முடிக்கும் தருவாயில் உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்ட சத்திஷ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேஷ், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷ் ,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயனாளிகள் தங்கள் வீடுகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கும் நிலையில் உள்ளனர்.
நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ,பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் போய்ச்சேருவதால், தரமான வீடுகளை துரிதமாக கட்டமுடிந்துள்ளது.
புதிய வடிவமைப்பு, உள்ளூர் கட்டுமானப் பொருட்கள், ஊரக கட்டுமானப் பணியாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணப் பட்டுவாடா ஆகியவை தடையற்ற தரமான திட்டச் செயலாக்கத்துக்கு வழிவகுத்துள்ளன. பயனாளிகள் தங்கள் வீடுகளைக் குறித்த காலத்துக்குள் கட்டி முடிப்பதற்கு ஏதுவாக அனைத்து மாநிலங்களும், குறைந்த விலையில் கட்டுமானப் பொருட்களை தடையின்றி விநியோகித்ததால் தரமான வீடுகளை விரைவாகக் கட்ட முடிந்தது.
கழிவறை, மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர் இணைப்புகளுடன் கட்டப்படும் பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகள் கிராமங்களை அதிவேகத்துடன் மாற்றி வருகின்றன. சில மாநிலங்களில் நிலமற்ற பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளாகவும், காலனி வீடுகளாகவும் கட்டிக்கொடுக்கப்படுகிறது. வேறு சில இடங்களில் பயனாளிகளின் நிலங்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. தில்லி ஐஐடி மற்றும் மாநிலங்களின் முகமைகள் வீடுகளின் வடிவமைப்பை அளித்துள்ளன. பயனாளிகள் தாங்கள் விரும்பும் வடிவமைப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பல்வேறு வடிவமைப்புகளில் கிராமங்களில் கட்டப்படும் வீடுகள் காண்பவரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
பிரதம மந்திரி கிராமிய வீட்டு வசதி திட்டத்தின் முன்னேற்றம் வெளிப்படையானது. அது பொதுமக்களின் சொத்து. இது பற்றிய முழுவிவரத்தை பற்றி Awaassoft.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
(Release ID: 1511738)
Visitor Counter : 141