சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய-பசிஃபிக் பத்தாண்டுக்காலத்தின் (2013-2022) இடைக்கால பரிசீலனைக் கூட்டம் அரசுகளுக்கு இடையே சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தலில் இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு. தாவார்சந்த் கேலாட் வெளிப்படுத்தினார்

Posted On: 30 NOV 2017 2:14PM by PIB Chennai

2017 நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் ஆசிய-பசிஃபிக் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பத்தாண்டு (2013-2022) இடைக்கால பரிசீலனைக் குறித்த அரசுகளுக்கு இடையேயான உயர்மட்ட கூட்டத்தில்  பங்கேற்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவார்சந்த் கேலாட் தலைமையான குழு சென்றுள்ளது. இத்துறையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிஃபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இந்தக் கூட்டத்தை சீன அரசின் ஒத்துழைப்புட்ன் ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய – பசிஃபிக் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் உண்மையிலேயே நிலவுவதை உறுதிப்படுத்துவதற்கான இன்சியோன் செயல்திட்டம் செயல்படவிருக்கும் பத்தாண்டு காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த இடைக்கால பரிசீலனையை மேற்கொள்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த ஐ. நா.வின் சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இலக்குகளை அடையவே இன்சியோன் செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நீடித்த வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் இன்சியோன் செயல்திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒழுங்கமைவைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகுதியில் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குவதற்கான எதிர்கால கொள்கைசார் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இந்தக் கூட்டத்தின் மற்றொரு நோக்கமாகும்.

இந்த இடைக்கால பரிசீலனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் இந்தியாவின் கருத்தை வெளியிடும்போது பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பது என்ற குறிக்கோளிலும், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலக்கிலும் இந்தியா பற்றுறுதியுடன் உள்ளது எனக் குறிப்பிட்டார். அனைத்துத் தனிநபர்களுக்கும் சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளையும் அவர் மேற்கோள் காட்டினார். மாற்றுத் திறனுடையோரின் உரிமைகள் குறித்த ஐ.நா. சபையின் சிறப்பு மாநாட்டின் விதிகளுக்கு உகந்த வகையில் “2016ஆம் ஆண்டின் மாற்றுத் திறனுடையோரின் உரிமைகளுக்கான சட்டம்” என்ற புதியதொரு சட்டத்தையும் இந்தியா நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சமமாக நடத்துவதற்கான உரிமை, பாரபட்சமற்ற நிலை, இனத்தோடு கூடிய வாழ்வு, வன்முறையிலிருந்தும், மனிதத் தன்மையற்ற வகையில் நடத்தப்படுதலில் இருந்தும் பாதுகாப்பு, நீதி, வீடு, குடும்பம் ஆகியவற்றைப் பெறுவதற்கான வசதி, குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் ஆகிய பல உரிமைகள், வசதிகள் ஆகியவற்றை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் தங்கள் உரிமைகளை சரிசமமாக அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 4 சதவீத ஒதுக்கீடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வீட்டுமனைக்கான ஒதுக்கீடு, சலுகை வட்டியில் வர்த்தகம் செய்வதற்கான நிதியுதவி ஆகியவற்றில் 5 சதவீத ஒதுக்கீடு, போன்றவையும் இச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள சில முக்கியமான சாதகமான நடவடிக்கைகளாகும்.

இந்த மாற்றுத் திறனாளிகளை சிறப்பாகச் சுட்டிக் காட்டும் வகையில் “தெய்வீகத் திறன் பெற்றவர்கள்” என்ற புதியதொரு வார்த்தையை இந்தியப் பிரதமர் உருவாக்கியிருக்கிறார் என்றும் திரு. கேலாட் குறிப்பிட்டார். சமூக அந்தஸ்தில் மேம்படுதல், பாரபட்சமற்ற போக்கை வளர்த்தெடுத்தல், சமூகத்தில் அவர்களது வாழ்க்கை, திறமைகள் ஆகியவை குறித்த சாதகமான அணுகுமுறை ஆகியவற்றை உருவாக்குவதையும் இந்த “தெய்வீகத் திறன் பெற்றவர்கள்” என்ற வார்த்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கென தடைகளற்ற சூழ்நிலையை உருவாக்க முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட, ”எளிதில் அணுகத்தக்க இந்தியா” என்ற பிரச்சார இயக்கம் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகள் நேரடியான கட்டமைப்பை உருவாக்குவதையும் பொதுக் கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்பு, தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை விரிவான அளவில் பெறுவதையும் இந்த இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவிற்குள் இந்த இலக்கை அடைவதற்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களுடன் மாநிலங்களை அணுகி வருகிறது.

மாற்றுத் திறனுடையோர் தங்கள் உரிமைகளை மற்றவர்களுடன் சரிசமமான வகையில் அனுபவிப்பதை உறுதிப்படுத்தவும், தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்த உதவி செய்யும்படியான சூழ்நிலையை உருவாக்குவதிலும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளின் தற்சார்பை, சமூகத்திற்குள் இணைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், சர்வதேச அளவிலான ஒத்துழைப்பிற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை இணைப்பது என்ற இலக்கினை அடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய-பசிஃபிக் பத்தாண்டுக்கான இடைக்கால பரிசீலனை என்ற இந்த வாய்ப்பை உறுப்பினர் நாடுகள் பயன்படுத்திக் கொண்டு நடைமுறைக்கு உகந்த தேசிய, பிரதேச வாரியான செயல்திட்டங்களுடன் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, மாற்றுத் திறனாளிகளின் தனித்திறன், சமூகத்துடன் இணைப்பு ஆகிய நோக்கங்களை அடைவதற்கான சிறப்பான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கவிருக்கும் பெய்ஜிங் பிரகடனம் இறுதிப்படுத்தப்படுவதை தாம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் திரு. கேலாட் தெரிவித்தார்.

 

***********



(Release ID: 1511673) Visitor Counter : 211


Read this release in: English