சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்கள் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய பயிலரங்குக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது

Posted On: 16 NOV 2017 5:38PM by PIB Chennai

இருவார வாசக்டமி நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு நாள் தேசிய பயிலரங்கை இன்று நடத்தியது. இணைச் செயலாளர் திருமதி.வந்தனா கர்னானி, இந்த பயிலரங்கை தொடங்கி வைத்தார். இதில் பெண்களின் கண்ணோட்டங்களுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை போல, ஆண்களின் கண்ணோட்டங்களுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கான உறுதியான திட்டங்களை புரிந்துக்கொண்டு ஒன்றிணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது நீடித்த குடும்ப நல திட்டங்களில், குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்களின் பங்களிப்பை அதிகரிக்க, தேவையான சேவைகளை அளிப்பதோடு, தேவைகளை உருவாக்குதல் மற்றும் விநியோகத்தில் உள்ள இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த பயிலரங்கில், குடும்பக் கட்டுப்பாடு லாஜிஸ்டிக் மேலாண்மை தகவல் முறை (எப்பி – எல்எம்ஐஎஸ்) கையேடும் வெளியிடப்பட்டது. இந்த எப்பி – எல்எம்ஐஎஸ் சாப்ட்வேர் கருத்தடை சாதனங்களை வழங்கும் நடவடிக்கையின் மேலாண்மை மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். சுகாதார மையங்கள் மற்றும் ஆஷா மையங்களுக்கு கருத்தடை சாதனங்களை வழங்குவது மற்றும் தேவைகள் தொடர்பான பெருமளவிலான தகவல்களை இது கொண்டுள்ளது. இதுதவிர விநியோக சங்கிலி தொடர் மேலாண்மையையும் வலுவாக்குகிறது. மேலும், இது கொள்கை வடிவமைப்பாளர்கள், திட்ட மேலாளர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுகிறது. விநியோகத்துறையினருக்கு கருத்தடை சாதனங்களின் விநியோகத்தை கண்காணிக்கவும், ஒரு இடத்தில் கருத்தடை சாதனங்கள் இல்லாமல்  போவதை தடுக்கவும், ஒரே இடத்தில் அவை குவிவதையும் தடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கருத்தடை சாதன பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுகிறது.

தம்பதியரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், ஆண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் நிரந்தமான குடும்ப கட்டுப்பாடு முறைகள்தான் பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெருமளவில் பெண்கள்தான் அதை செய்து கொள்கின்றனர். உலக வாசக்டமி தின நிகழ்ச்சியானது, உலகளவில் வாசக்டமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட தேசிய பயிலரங்கு, விரைவில் மாநிலங்களில் நடத்தப்பட உள்ள இருவார வாசக்டமி குறித்த முன்னோட்ட நிகழ்ச்சியாகும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், 2017 நவம்பர் 21 முதல் 2017 டிசம்பர் 4ம் தேதி வரையில், இருவார வாசக்டமி நிகழ்ச்சி விரிவான விளம்பரங்களுடன் நடத்தப்பட உள்ளது. இதில், தரமான ஆண் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், பொது சுகாதார மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.

இந்த இருவார பிரத்யேக நிகழ்ச்சியின் நோக்கம், ஆண் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை சமூகத்தில் ஒப்புக்கொள்வதை அதிகரிக்கச் செய்வதுதான். வட்டார அளவில் இருவார வாசக்டமி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் குடும்பக் கடடுப்பாடு சேவைகள் அளிக்கப்படுவதுடன், ஐஇஇ மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த பயிலரங்கு மற்றும் ‘இருவார வாசக்டமி 2017’ நிகழ்ச்சியின் உட்கருத்து:

“Zimmedar Purush ki yehi hai Pehchan, Parivar Niyojan mein jo de Yogdaan”

 

இருவார வாசக்டமி 2017 நிகழ்ச்சி இரு விதமாக நடத்தப்பட உள்ளது.

 

1.திரட்டல் பகுதி (நவம்பர் 21 முதல் நவம்பர் 27) – ஆண் கருத்தடையின் பலன்கள் குறித்து  இந்த இருவார நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஐஇசி, குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்களின் பங்கு மற்றும் அதுகுறித்த பல்வேறு மூடநம்பிக்கைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. இந்த வசதி அனைத்து பொது மற்றும் சுகாதார பாதுகாப்பு மையங்களில் கிடைக்கும்.

 

2. சேவை அளித்தல் பகுதி (நவம்பர் 28 முதல் டிசம்பர் 4) -  விழிப்புணர்வு  ஏற்படுத்துவதுடன், அனைத்து மாவட்டங்கள், வட்டங்களில் ஆண் கருத்தடை சேவைகள், இந்த பிரத்யேக இருவார நிகழ்ச்சியில் அளிக்கப்படும்.

 

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்கள் பங்களிப்பை கொண்டு வருவது இன்னமும் மிகப்பெரிய பல்வேறு துணை சவால்களுடன் கூடிய சவாலாகவே உள்ளது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். குறிப்பாக சமூகத்தில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்கள் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல் மிகப்பெரிய வெற்றியாகும். இந்த பயிலரங்கின் உட்கருத்தை, இருவார வாசக்டமி நிகழ்ச்சியின் உட்கருத்துடன் ஒன்றிணைத்து கீழ்கண்ட பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கில் ஆலோசிக்கப்பட்டது.

 

  • குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்கள் ஈடுபாட்டை உயர்த்த தேவையான நடவடிக்கைகள்
  • இனப்பெருக்க முடிவுகளில் இளைஞர்களை ஈடுபடச் செய்தல்
  • பாலின இடைவெளியை குறைத்தல்
  • பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தின் தேவை குறித்து இளம்பருவத்தினரிடம் விளக்குதல்

 

இந்த பயிலரங்கில், இந்தியாவில் உள்ள என்எஸ்வி பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இவர்கள் உலக அரங்கில் இப்போதுள்ள நிலை குறித்தும், ஆண்களின் பங்களிப்பை உயர்த்துவதில் தொழில்நுட்ப அமைப்புகளின் பங்கு குறித்தும் விளக்குகின்றனர். அரசு பிரதிநிதிகள், வாசக்டமி சேவைகளை பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும், அது குறையாமல் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் விளக்குவார்கள்.

*****



(Release ID: 1511345) Visitor Counter : 2750


Read this release in: English