குடியரசுத் தலைவர் செயலகம்
வட - கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டைத் துவக்கி வைத்து குடியரசுத் தலைவர் உரை – வட - கிழக்கு பிராந்திய வளர்ச்சியே இந்தியா-தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் கூட்டுப் பங்களிப்பின் அளவுகோலாகும் என பேச்சு
Posted On:
21 NOV 2017 6:50PM by PIB Chennai
மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் வட கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், வியக்கத்தகு சமூக, கலாச்சார சுற்றுச் சூழலைக் கொண்ட பகுதியாக வட - கிழக்கு பிராந்தியம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். உலகத்தில் சில பிராந்தியங்களின் சில சிறிய பகுதிகள் கலாச்சார, இன, மொழி ரீதியாக பன்முகத் தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது என்றும் தெரிவித்தார். இது போன்று பன்முகத் தன்மை கொண்டு விளங்குவது நமக்கு உத்வேகம் அளிக்கிறது. வட -கிழக்கு பிராந்தியமானது உலகத்தில் உள்ள சில ஆதி பூர்வ குடிமக்களின் தாயகமாகத் திகழ்கிறது. காமக்யாவில் உள்ள தேவியின் பராம்பரிய மரபுகளும் தவாங் அல்லது வேறு எங்கும் உள்ள புத்தசமய கோட்பாடுகளும் தென் கிழக்கு ஆசியா- இந்தியா இடையே புனிதப் பிணைப்பை உருவாக்குகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளும் இந்தப் பகுதியில் கல்விக்காக பங்களிப்பாற்றியுள்ளன. மணிப்பூர், மிஜோரம் பகுதியில் யூத சமூகத்தினரும் உள்ளனர்.
வட - கிழக்கு பிராந்தியத்தின் பூகோள அமைப்பு இந்தியாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தப் பகுதி இந்தியா- இன்றைய தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகள் இடையே பெரிய அளவில் பொருளாதார இணைப்பை ஏற்படுத்தும் இடமாகவும் உள்ளது.
வட - கிழக்கு பிராந்தியத்தின் விரிவான, உடனடியான, வேகமான வளர்ச்சிக்கான அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியானது நிலம், தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கிய பல் முனைத் திட்டமாகும். இந்த வளர்ச்சியானது இந்தியாவின் மற்ற பகுதிகள் மற்றும் கிழக்கு, தென் கிழக்கு ஆசியா நாடுகளுடன் தொடர்பை உண்டாக்கும்.
வட - கிழக்கு பிராந்திய வளர்ச்சியானது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இந்தியா- தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான வாய்ப்பு நம்மிடம் உள்ளது அதை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் மணிப்பூர் சங்காய் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழாவை துவக்கி வைப்பதில் தமக்கு மட்டற்ற மகழ்ச்சியாக உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மணிப்பூர் மாநிலத்தின் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த விழா அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் உணவு, கலாச்சாரம், சாகச விளையாட்டுகள், கைத்தறி, கைவினைப் பொருள்கள், உலகத்தோர் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மணிப்பூர் மாநில நடனம் ஆகியவை ஈடு இணையற்றவை. மேலும், கலாச்சார பாராம்பரியங்கள், வீர வரலாறுகள், எதிர்த்துப் போரிடும் ஆற்றல் ஆகியவை அனைவரையும் ஈர்க்கும் விதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்களிடமிருந்து மணிப்பூரைக் காப்பாற்ற 1891-ம் ஆண்டு போர் புரிந்து உயிர் நீத்த தியாகிகளுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர், நம்முடைய சுதந்திரத்துக்காகவும் தனி மனித உரிமைக்காகவும் போராடிய அவர்கள் என்றென்றும் நினைவு கூரத்தக்கவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான குத்துச் சண்டை வீராங்கனை மேரி கேம் எனக்கு உள்பட நாட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்றபோது, தனது டுவிட்டர் இணைய தளத்தில் தங்களது ஒவ்வொரு குத்தின் போதும் இந்தியாவின் கௌரவம் உயர்ந்தது என்று குறிப்பிட்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.
இந்திய கால்பந்தில் மணிப்பூர் வீரர்கள் நடுநாயகமாக திகழ்கிறார்கள் என்ற குடியரசுத் தலைவர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்துப் போட்டியில் இடம் பெற்றிருந்த 21 பேரில் 8 பேர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இந்த 8 பேரில் அணியின் கேப்டன் அமர்ஜித் சிங், கோல் கீப்பர் தீரஜ் சிங் மோய்ரங்தெம் ஆகியோரும் அடங்குவர்.
(Release ID: 1511336)
Visitor Counter : 164