தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவா, சர்வதேச இந்திய திரைப்பட விழா 2017-ல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான, ‘அணுகுமுறை திரைப்படங்கள்’ பிரிவில் சீக்ரட் சூப்பர்ஸ்டார் மற்றும் ஹிந்தி மீடியம் படங்கள் திரையிடப்படுகின்றன
கோவா, 48-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘’அணுகுமுறை திரைப்படங்கள்’’ பிரிவில், சீக்ரட் சூப்பர்ஸ்டார் மற்றும் ஹிந்தி மீடியம் போன்ற படங்கள் திரையிடப்பட்டன. தில்லியைச் சேர்ந்த சாக்ஷாம் நிறுவனம், இந்தத் திரைப்படங்களில் காட்சிக்கான ஒலி விளக்கக் குறிப்பு மற்றும் எழுத்துக் குறிப்புகளை அனைவரும், குறிப்பாக பார்வைக் குறைபாடு மற்றும் கேட்புக் குறைபாடு உள்ளவர்கள் ரசிக்கும் வகையில் இணைத்துள்ளது.
சாக்ஷாம் குழுவினர் இன்று பத்திரிகையாளர்களுடன் உரையாற்றினார்கள். சாக்ஷாம் குழுவின் அறக்கட்டளை நிறுவன நிர்வாகி திருமதி ரும்மி கே.சேத், சாக்ஷாம் அறக்கட்டளை நிறுவனர் திரு திபேந்திரா மனோசா, ஒலி விளக்கக் குறிப்பு, வசனகர்த்தா திரு.நரேந்திர ஜோஷி மற்றும் கோவா, சஞ்சய் சிறப்புப் பள்ளி மையத்தின் உறுப்பினர் செயலாளர் திரு.தாஹா ஹாசிக் ஆகியோர், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இரண்டு படங்களின் அணுகுமுறை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள். இவர்கள் அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ரும்மி சேத் பேசுகையில், ‘’இதுவரை நீங்கள் கலந்துகொண்ட மாநாடுகளில் இருந்து இது சிறப்பானது மற்றும் மாறுபட்டது. இந்த சுவாரஸ்யமான திட்டம் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ஒரு திரைப்படத்தை ரசிக்கும்போது, வசனங்களைத் தவிர வேறு எதுவும் இருக்காது. கடந்த ஆண்டு, ‘’பாக் மில்க்கா பாக்’’ படம் திரையிட்டபோது, நிறைய காட்சிகளில் வசனங்களே இல்லை, கண் தெரியாத ஒருவருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாது. அதனால் தேவைப்படும் இடங்களில் எல்லாம் வசனங்களை சேர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் வசனகர்த்தா திரு.நரேந்திராவுடன் இணைந்து, மெளன இடைவெளிகளை நிரப்பியுள்ளோம்…’’ என்று கூறினார்.
அடுத்துப் பேசிய திபேந்திரா மனோசா, ‘’அணுகுமுறை திரைப்படங்களில் எல்லாமே நிரம்பியிருக்கும். மற்றவர்களைப் போன்று எனக்கும் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா என்று பார்வை அற்றவர் கேட்கலாம். அவருக்கு உரிமை இருக்கிறது என்றால், நம்மிடம் இருக்கும் அனைத்து வசதிகளையும் அதற்காகப் பயன்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நடப்பதில், உட்காருவதில், பேசுவதில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். இப்படிப்பட்ட மக்களுக்கு, சமுதாயத்துடன் இணைந்து செயலாற்றும் வகையில் உதவுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இந்த அணுகுமுறை திரைப்படங்கள் அதனை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய அடி எடுத்து வைத்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

இந்தக் கருத்து நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்களைப் பேசினார் நரேந்திர ஜோஷி. ‘’திரைப்படம் பார்க்கும் நபர்களுக்காக, வசன இடைவெளிகளில் வசனங்களை உணர்வுபூர்வமாக இணைப்பது சவாலான பணியாக இருந்தது. ஒரு படத்தை முழுமையாக பார்க்கும் அனுபவம் பெற வேண்டும் என்றால் 300 முதல் 400 மெளன இடங்களை நிரப்ப வேண்டும். 3 முதல் 5 விநாடிகளுக்குள் திரையில் நிகழும் முக்கியமான மாற்றங்களை, பார்வை அற்றவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்க வேண்டும். முழுமையான வேலைகள் முடிந்த பிறகும், வசனங்களை நாங்கள் முழுமையாக மீண்டும் மாற்றி அமைக்கவேண்டி இருந்தது. நாங்கள் இந்த முயற்சியை, திரு.அமிதாப்பச்சன் நடித்த ‘’பிளாக்’’ திரைப்படத்தில் தொடங்கி, மாபெரும் வெற்றியை ருசித்தோம்..’’ என்றார்.
திரையில் என்ன காட்சி நடக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் ஒலி விளக்கம் அளிக்கப்படுகிறது. வசனங்களுக்கு இடையிலான மெளன இடைவெளிகளில் எல்லாம் இந்த ஒலி விளக்கக் குறிப்புகள் நிரப்புவதன் மூலம், பார்வை அற்றோரும், குறைந்த பார்வைத் திறன் உடையோரும் திரைப்படத்தை முழுமையாக ரசிக்க முடியும்.
கடற்கரை மாநிலமான கோவாவில், 48வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20, 2017 அன்று தொடங்கி 28-ம் தேதி முடிவடைகிறது. இது ஆசியாவின் மிகப்பழையான திரைப்பட விழா என்பதுடன். இந்தியாவின் பிரமாண்டமான விழாவாகவும் உள்ளது., உலக அளவில் மிகவும் மதிப்புவாய்ந்ததாகவும், இந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா விளங்குகிறது.
(Release ID: 1511330)
Visitor Counter : 326