மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

நீடித்த வளர்ச்சிக்கு அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பும் உறுதிப்பாடும் கொண்ட இணையவெளி. ஐசிசிஎஸ் 2017 தொடக்க அமர்வில் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு. ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார்

Posted On: 23 NOV 2017 5:35PM by PIB Chennai

வளர்ச்சிக்கான இணையவெளி மாநாட்டின் “அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் முதன்மைத் தொழில் நுட்பத்திற்கு அரசுகள் – ஒழுங்காற்றுனரிலிருந்து சாத்தியமாக்குவோர் வரை மாற்றத்திற்கான பங்கு“ என்ற தொடக்க அமர்வில் திரு ரவி சங்கர் பிரசாத் உரையாற்றினார். விம்பிள்டனின் தாரிக் அன்வர் பிரபு, ஜி.சி.எஸ்.சி தலைவர் திருமதி மரினா கல்ஜீராண்ட ஐ.சி.ஏ.என்.என் ஆலோசகர் திரு. தாரிக்கமல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

     திரு. ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “இணையவெளி என்பதன் உண்மையான ஆற்றல், டிஜிட்டல் உள்ளடக்கம் கொண்ட பொருளாதார, சமூகப் பயன்பாடுகளில் இருக்கிறது. சாமானிய குடிமகன் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தலில் இருக்கிறது. சந்தைகளுக்குத் தாராளமான தொடர்பையும் முக்கியமான பொது நல நோக்கங்களின் நிலை நாட்டலையும் உறுதி செய்ய இது ஒன்றே வழியாகும்“ என்றார்.

     “வணிக மாதிரிகள் வெறுமனே திருத்தப்பட்டதாக இருக்கக்கூடாது முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அதுவும் அனைத்துத் துறைகளிலும். தனிநபர்களுக்கிடையிலும் தொழில்முறை நிபுணர்களுக்கிடையிலும் தகவல் தொடர்பு என்பது நேரம், இடம் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும். அரசுகள் மற்றும் அதன் முகமைகளின் இயல்பும் கட்டமைப்பும் எதிர் வினையிலிருந்து மாறி உயிர்ப்பானதாக இருக்க வேண்டும். தற்காலத்தில் தொழில்நுட்பம் என்பது நாம் யார், நம்முடன் பணியாற்றுவோருக்கும் மற்ற சகாக்களுக்கும் நாம் எவ்வாறு எடுத்துச் சொல்கிறோம் நாம் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கும் வேறுபட்ட விளக்கத்தை அளிக்கிறது“ என்று அவர் மேலும் கூறினார்.

     ”இந்தியாவில் நாம், நீடித்த வளர்ச்சிக்காக அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பும் உறுதிப்பாடும் கொண்ட இணையவெளியை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் மாறுபட்ட ஆற்றல் வளரும் நாடுகளுக்குத் தவளைப் பாய்ச்சல் வளர்ச்சியை அளிக்கவும் கூடுதலான தீவிரத் தன்மையோடும் பங்கேற்போடும் உள்ள ஜனநாயகங்களை உருவாக்கவும் உதவும் என்பதை நாம் ஏற்கிறோம். நமது நீண்டகால உத்தி என்பது சமூகத்தில் நலிந்தோரும் ஏழைகளும், கிராமப்புறத் தினரும், புறக்கணிக்கப்பட்ட பிரிவினரும் பயன்பெறும் நோக்கம் கொண்டதாகும். வெறும் டிஜிட்டல் மயத்திற்கும் அப்பாற்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பதற்கான வழியாகக் கருதி முக்கியத்துவம் தரப்படுகின்றன.

“கடந்த மூன்று ஆண்டுகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ற சிறப்புறு முன் முயற்சியின் மூலம் டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் நாம் மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். டிஜிட்டல் இந்தியா திட்டம்

  1. ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன்படும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்பு
  2. கேட்கும் நேரத்தில் சேவைகளும் நிர்வாகமும்
  3. இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்றச் சமூகமாகவும் அறிவு சார்பொருளாதார நாடாகவும் மாற்றுவதற்கு குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் எனும் திட்டம்.

ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது.” என்று அமைச்சர் கூறினார்.

*****



(Release ID: 1511215) Visitor Counter : 107


Read this release in: English