குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிறுவனத்தின் 2-வது அடிப்படை வகுப்பினில் பயிற்சி பெறும் பொதுப்பணி மருத்துவ அலுவலர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்
Posted On:
27 NOV 2017 3:19PM by PIB Chennai
இன்று (நவம்பர் 27, 2017), தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை நிறுவனத்தின் 2-வது அடிப்படை வகுப்பில் பயிற்சி பெறும் பொதுப்பணி மருத்துவ அலுவலர்கள், குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
மருத்துவ அலுவலர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், ‘நமது நாட்டில் நோய்களின் சுமை மாறி வருகிறது. நாம் பரவக்கூடிய நோய்களான காசநோய், மலேரியா மற்றும் டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், பரவாத நோய்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையை அரசு வகுத்துள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் புதிய மற்றும் புத்தாக்க வழியில் அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பதுதான் இந்த அரசின் சுகாதாரத் திட்டமாக இருக்கிறது. இந்த தேசிய சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்துவது, உங்களைப் போன்ற மருத்துவ அலுவலர்களின் பொறுப்பு ஆகும். சமூகம், கிராமம் மற்றும் மாவட்ட அளவில் இவற்றை சிறப்புற நிர்வகிக்க வேண்டும். மக்களுக்கு உடல் நலன் ஒரு கவலையாக இல்லாத பட்சத்தில்தான், சமுதாய மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும். தூய்மை இந்தியா, பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் போன்ற திட்டங்கள் மூலம் இந்திய அரசும் இந்த சேவைக்கு ஆதரவளிக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
நோயாளிகளின் பிரச்சினை மற்றும் கவலைகளைக் கேட்பதற்கு மருத்துவர்கள் சில நிமிடங்கள் ஒதுக்கவேண்டும், அதுதான் அவர்களுக்கு நோயில் இருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையைக் கொடுக்கும் என்று மருத்துவர்களுக்கு குடியரசுத் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
(Release ID: 1511211)
Visitor Counter : 116