குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய விமானப்படையின் 223 போர்விமானப் படைப்பிரிவு, 117 ஹெலிகாப்டர் அலகு ஆகியவற்றுக்கு குடியரசுத்தலைவர் தரநிலைகளை வழங்கினார்

Posted On: 16 NOV 2017 12:42PM by PIB Chennai

குடியரசுத்தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் இன்று ( நவம்பர் 16, 2017 ) பஞ்சாப், ஆதம்பூர், விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையின் 223 போர்விமானப் படைப்பிரிவு, 117 ஹெலிகாப்டர் அலகு ஆகியவற்றுக்குத் தரநிலைகளை வழங்கினார். இந்தியக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற பிறகு பஞ்சாப் மாநிலத்திற்கு அவர்  வருகை புரிந்திருப்பது இது  முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பேசுகையில், பஞ்சாப் மாநிலம் நமது ஆயுதப் படையினருக்கும், நமது தேசத்திற்கும் அளித்துவரும் பங்களிப்பு மகத்தானது என்றார். எனவேதான், மூப்படைகளின் தலைமை தளபதி என்கிற முறையில் பஞ்சாபுக்கு வருகை புரிந்து  இந்திய விமானப்படையின் 223 போர்விமானப் படைப்பிரிவு,           117 ஹெலிகாப்டர் அலகு ஆகியவற்குத் தரநிலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். இந்த இரு அலகுகளும் தொழில்முறையிலான நிபுணத்துவத்திற்குப் பெயர்பெற்றவை. நமது தேசம் ஆழ்ந்த நன்றியறிதலுடன் அவர்களைக் கௌரவிக்கிறது. நெருக்கடி மிகுந்த நேரங்களில் அவர்கள் மேற்கொண்ட துணிவையும் அர்ப்பணிப்பையும் பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

சர்வதேச அமைப்புமுறையில் இந்தியாவின் எழுச்சியானது பல்வேறு பரிமாணங்களை அதற்கு அளித்துள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். நமது நாடு பெரிதும் நமது ஆயுதப்படைகளிலிருந்து திறன்களையும் வீரத்தையும் ஈர்த்துக்கொள்கிறது. நாம் அமைதியில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தும்கூட, நமது தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக நமது அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்த தீர்மானிக்கிறோம். நாம் அவ்வாறு செய்ய நேர்ந்த ஒவ்வொரு முறையும் சீருடையிலுள்ள தீரம் மிகுந்த நமது ஆண்களும் பெண்களும் அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப எழுச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் அவர்களைப் பாதுகாக்க ஆயுதப்படை இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால் நிம்மதியாகத் தூங்குகிறார்கள்.

படைவீரர்கள், படைத்தளபதிகள், இந்திய விமானப்படையின் 223 போர்விமானப் படைப்பிரிவு, 117 ஹெலிகாப்டர் அலகு ஆகியவற்றைச் சேர்ந்த  அவர்களின் குடும்பத்தினர், மற்றும் ஆதம்பூர், விமானப்படை நிலையத்தினர் ஆகியோர் தேசத்தின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்புக்காக அவர்களுக்குக் குடியரசுத்தலைவர் பாராட்டு தெரிவித்தார். அவர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.



(Release ID: 1510952) Visitor Counter : 127


Read this release in: English