பிரதமர் அலுவலகம்

மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் பிரதமர் அகில இந்திய வானொலியில் 26.11.2017 அன்று ஆற்றிய உரை (38வது அத்தியாயம்)

Posted On: 26 NOV 2017 6:23PM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.  டைம்ஸ் குழுவினரின் ‘விஜய் கர்நாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ் வெளியிட்டது, இதில் அவர்கள், தேசத்தின் பிரதமருக்குக் கடிதம் எழுதுமாறு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.  அந்த இதழில் அவர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களை பிரசுரித்தார்கள்.  அந்தக் கடிதங்களை நான் படித்த பொழுது, எனக்கு அவை நன்றாக இருந்தன.  இந்தச் சின்னஞ்சிறுவர்கள், தேசத்தின் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள், தேசத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்.  பல விஷயங்கள் குறித்து இவர்கள் எழுதியிருந்தார்கள்.  வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தி ஹெக்டே, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் பாராட்டிய அதே நேரத்தில், நமது கல்விமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவையைப் பற்றியும், இன்றைய காலகட்டத்தில் வகுப்பறைப் படிப்பு மீது குழந்தைகளுக்கு நாட்டமில்லை என்றும், அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.  குழந்தைகளுக்கு நாம் இயற்கைப் பற்றிய தகவல்களை அளித்தோமேயானால், எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பில் அவர்கள் பேருதவியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

          லக்ஷ்மேஸ்வராவிலிருந்து ரீடா நதாஃப் என்ற குழந்தை, தான் ஒரு இராணுவ வீரரின் மகள் என்றும், இது தனக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் எழுதியிருக்கிறாள்.  எந்த இந்தியனுக்குத்தான் இராணுவ வீரன் மீது பெருமிதம் இருக்காது?  நீங்கள் இராணுவ வீரரின் மகளாக இருக்கையில், உங்களிடத்தில் பெருமிதம் ஏற்படுவது என்பதில் எந்த வியப்பும் இல்லை.  கல்புர்கியிலிருந்து இர்ஃபானா பேகம் என்ன எழுதியிருக்கிறார் என்றால், அவரது பள்ளி, அவரது கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், இதனால் தன் வீட்டிலிருந்து சீக்கிரமாகக் கிளம்பவேண்டியிருப்பதாகவும், பள்ளியிலிருந்து வீடுதிரும்ப இரவு ஆகிவிடுவதாகவும், இதனால் தன்னால் தன் நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை என்றும் எழுதியிருக்கிறார்.  அருகில் ஏதாவது ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.  நாட்டு மக்களே, ஒரு செய்தித்தாள் இப்படிப்பட்ட முனைப்பை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, இந்தக் கடிதங்கள் என்னை வந்து அடைந்திருக்கின்றன, அவற்றைப் படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருக்கிறது.  என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு இதமான அனுபவமாக இருந்தது.

          எனதருமை  நாட்டுமக்களே, இன்று 26/11.  நவம்பர் மாதம் 26ஆம் தேதிதான் நமது அரசியலமைப்புச் சட்ட நாள்.  1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான், அரசியலமைப்புச்சட்ட சபையில் பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டம் அமலுக்கு வந்தது; ஆகையால் தான் நாம் அதை குடியரசுத் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.  பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம், நமது ஜனநாயகத்தின் ஆன்மாவாகும்.  இன்றைய நாளன்றுதான், அரசியலமைப்புச் சட்டசபையின் உறுப்பினர்களை நாம் நினைவு கூரத்தக்க நாளாகும்.  அவர்கள் பாரத நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிக்க 3 ஆண்டுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  அந்த விவாதங்களைப் படிப்பவர்களுக்கு, அந்த விவாதங்களில் தேசத்தின் பொருட்டு தொனிக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது நன்கு விளங்கும்.  பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திற்கென ஒரு அரசியலமைப்புச்சட்டத்தை இயற்ற, அவர்கள் எத்தனை கடுமையாக உழைத்திருப்பார்கள் என்று தெரியுமா?  புரிந்துணர்வோடும், தொலைநோக்குப் பார்வையோடும், தேசம் அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் இதைச் செய்தார்கள். இந்த அரசியலமைப்புச்சட்டம் காட்டும் ஒளியின் துணைகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தவர்களின் தெளிவான சிந்தனைகளை மனதில் தாங்கிப் புதிய பாரதம் அமைப்பது நம் அனைவரின் கடமையாகும்.  நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் விசாலமானது.  அதில் காணப்படாத வாழ்க்கையின் அம்சம் இல்லை, இயற்கை பற்றிய விஷயம் இல்லை எனும் அளவுக்கு இருக்கிறது.  அனைவருக்கும் சமத்துவம், அனைவரிடத்திலும் புரிந்துணர்வு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளம்.  இதில் ஒவ்வொரு குடிமகன், ஏழையாகட்டும் தாழ்த்தப்பட்டவராகட்டும், பிற்படுத்தப்பட்டவராகட்டும், மறுக்கப்பட்டவராகட்டும், பழங்குடியினராகட்டும், பெண்களாகட்டும் – அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக் கூட விடாமல் பின்பற்ற வேண்டியது நம்மனைவரின் கடமையாகும்.  குடிமக்களாகட்டும், ஆட்சியாளர்களாகட்டும், அரசியலமைப்புச்சட்டத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்.  யாருக்கும் எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்.  இன்று அரசியலமைப்புச் சட்ட நாளன்று, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம்.  இந்த அரசியலமைப்புச் சபையின் மகத்துவம் நிறைந்த விஷயங்கள் தொடர்பாக, 17 பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.  இவற்றில் மிகவும் மகத்துவம் வாய்ந்த குழுக்களில் ஒன்று தான் வரைவுக்குழு.  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுவின் தலைவராக இருந்தார்.  அவர் ஒரு மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை நல்கிக் கொண்டிருந்தார்.  இன்று நாம் பாரதத்தின் அரசியலமைப்புச்சட்டம் அளிக்கும் பெருமிதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இதை அமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் செயல்திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நலன்கள் ஏற்படுவதை அவர் உறுதி செய்து கொண்டார்.  டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று அவர் மறைந்த நாளன்று, நாம் எப்பொழுதும் போலவே, அவரை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துவோம்.  தேசத்தை தன்னிறைவாகவும், வல்லமைபடைத்ததாகவும் ஆக்குவதில் பாபாசாகேபின் பங்குபணி என்றும் நினைவுகொள்ளத்தக்கது.  டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் அமரரான தினம்..  விவசாயியின் மகன் என்ற நிலையிலிருந்து இரும்பு மனிதன் என்ற மாற்றத்தை எய்திய சர்தார் படேல் அவர்கள், தேசத்தை ஒரே இழையில் இழைக்கும் அசாதாரணமான செயலைப் புரிந்தார்.  சர்தார் அவர்களும் அரசியலமைப்புச் சட்டசபையின் அங்கத்தினராகத் திகழ்ந்தார்.  அவர் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடியினமக்களின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.

          26/11 நமது அரசியலமைப்புச்சட்ட தினம் என்றாலும், 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 26/11ஐ இந்த தேசத்தால் எப்படி மறக்க முடியும்? அன்று தான் தீவிரவாதிகள் மும்பை மீது கொடும்தாக்குதல் நடத்தினார்கள். வீரம்நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் என, உயிர்துறந்த அனைவரையும் தேசம் நினைவுகூர்கிறது, அஞ்சலி செலுத்துகிறது.  இந்த தேசம் அவர்களின் தியாகத்தை என்றென்றும் மறக்காது.  தீவிரவாதம் என்பது இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒன்று, தினந்தினம் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அதிபயங்கரமான வடிவத்தில் அது நடைபெறுகிறது.  நாம் கடந்த 40 ஆண்டுகளாகவே தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.  நமது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் துறந்திருக்கிறார்கள்.  ஆனால் சில ஆண்டுகள் முன்பாக, உலக அரங்கில் பாரதம் தீவிரவாதம் பற்றிப் பேசிய பொழுது, தீவிரவாதத்தின் பயங்கரங்களை எடுத்துரைத்த பொழுது, இதை உலகில் பலர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று தீவிரவாதம் அவர்கள் நாட்டுக்கதவுகளைத் தட்டும் வேளையில், உலக அரசுகள், தீவிரவாதத்தை மிகப்பெரியதொரு சவாலாகக் காண்கிறார்கள்.  தீவிரவாதம் உலகின் மனிதத்துவத்துக்கு சவால் விடுகிறது.  இது மனிதநேய சக்திகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறது.  ஆகையால் பாரதம் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து மனிதநேயசக்திகளும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்.  பகவான் புத்தர், பகவான் மகாவீரர், குரு நானக், காந்தியடிகள் ஆகியோர் பிறந்த மண் இது, இந்த மண் அஹிம்சை, அன்பு ஆகியவற்றை உலகிற்கு அளித்திருக்கிறது.  தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது சமுதாய அமைப்பைப் பலவீனப்படுத்தி, அதை சின்னாபின்னமாக்கும் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  ஆகையால் மனிதநேய சக்திகள் மிக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. 

     என் பிரியமான நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நாமனைவரும் கடற்படை நாளைக் கொண்டாடவிருக்கிறோம்.  இந்தியக் கடற்படை, நமது கடலோரங்களைக் காத்துப் பாதுகாப்பளிக்கிறது.  நான் கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நமது கலாச்சாரம் நதிக்கரைகளில் தான் தோன்றியது என்பதை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள்.  சிந்து நதியாகட்டும், கங்கையாகட்டும், யமுனையாகட்டும், சரஸ்வதியாகட்டும் – நமது நதிகளும், கடலும், பொருளாதாரம், போர்த்திறம் என இருவகைகளிலும் மகத்துவம் வாய்ந்தவை. ஒட்டுமொத்த உலகிற்கும் இதுவே நமது நுழைவாயில்.  இந்த தேசத்திற்கும், பூமியின் பெருங்கடல்களுக்குமிடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது.  நாம் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமேயானால், சுமார் 800-900 ஆண்டுகள் முன்பாக சோழர்களின் கடற்படை, மிகச்சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.  சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தில், அதைப் பொருளாதார பெருஞ்சக்தியாக ஆக்குவதில் அவர்களின் கடற்படையின் பெரும்பங்கு இருந்தது.  சோழர்களின் கடற்படைப் படையெடுப்புக்கள், ஆய்வுப் பயணங்களின் பல எடுத்துக்காட்டுகள், சங்க இலக்கியங்களில் இன்றும் காணப்படுகின்றன.  உலகின் பெரும்பாலான கடற்படைகள் பலகாலம் கழித்துத்தான் போர்ப்பணிகளில் பெண்களை அனுமதித்திருந்தன.  ஆனால் சோழர்களின் கடற்படையில், சுமார் 800-900 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் முக்கியமான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள்.  பெண்கள் போரிலும்கூட ஈடுபட்டார்கள்.  சோழ ஆட்சியாளரிடத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான நுணுக்கமான தொழில்நுட்பம் இருந்தது.  நாம் கடற்படை பற்றிப் பேசும் வேளையில், சத்திரபதி சிவாஜி மகராஜ், அவரது கடற்படையின் திறம் பற்றிப் பேசாது இருக்க முடியுமா?  கடலாதிக்கம் நிறைந்த கொங்கன் கரையோரங்கள், சிவாஜி மகராஜ் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன.  சிவாஜி மகராஜின் சாம்ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய பல கோட்டைகள், சிந்து துர்க்கம், முருட் ஜஞ்ஜீரா, ஸ்வர்ண துர்க்கம் போன்றவை, சமுத்திரக்கரைகளில் அமைந்திருந்தன அல்லது சமுத்திரத்தால் சூழப்பட்டிருந்தன.  இந்தக் கோட்டைகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பு மராட்டிய சேனையுடையது.  மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் ஆகியன கலந்திருந்தன.  அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரிமீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறன் படைத்தவர்களாக இருந்தனர்.  மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன?  இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர், பல இடங்களில் மராட்டிய கடற்படைத் தளங்களை அமைத்தவர்.  கோவா விடுவிப்புப் போராகட்டும், 1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் யுத்தமாகட்டும், சுதந்திரம் அடைந்த பிறகு, நமது பாரதத்தின் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள்.  கடற்படை என்றாலே, வெறும் யுத்தம் மட்டுமே நம் கருத்துகளில் இடம் பிடிக்கிறது, ஆனால் பாரதத்தின் கடற்படை, மனிதநேய செயல்களிலும் கூட பெரிய அளவில் உதவியிருக்கிறது.  இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் வங்காளதேசம் மற்றும் மியான்மரில் மோரா சூறாவளி பேரிடர் ஏற்பட்ட போது, நமது கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, பல மீனவர்களை, மூழ்கி இறக்காமல் காப்பாற்றி, வங்காளதேசத்திடம் ஒப்படைத்தது.  இந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, நமது கப்பற்படையின் 3 கப்பல்கள், உடனடியாக அங்கே சென்றடைந்து, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் பேருதவி புரிந்தன.  வங்காளதேசத்தில் செப்டம்பர் மாதத்தில் ரோஹிங்க்யாக்கள் விஷயத்தில் நமது கப்பற்படைக் கப்பல்கள், ஐ.என்.எஸ். கரியால் மனிதநேய செயல்களில் ஈடுபட்டன.  ஜூன் மாதம் பப்புவா நியூ கினியா அரசு நம்மிடம் அவசர உதவி கோரித் தகவல் அனுப்பிய போது, அவர்களின் மீன்பிடிப் படகுகளில் இருந்த மீனவர்களைக் காப்பதில் நமது கடற்படையினர் உதவி புரிந்தனர்.  நவம்பர் மாதம் 21ஆம் தேதி மேற்கு விரிகுடாவில் ஒரு வாணிபக் கப்பல் கடற்கொள்ளையர்களால் பாதிப்படைந்த வேளையில், நமது கடற்படையினரின் ஐ.என்.எஸ். திரிகந்த் உதவிக்கு அங்கே விரைந்தது.  ஃபிஜி நாட்டுக்கு மருத்துவ உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், உடனடி நிவாரணமாகட்டும், அண்டை நாடுகளுக்கு சங்கடம் ஏற்படும் வேளைகளில் மனிதநேய உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், நமது கடற்படை, என்றுமே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது.  நமது பாதுகாப்புப் படையினர் மீது பாரதவாசிகளான நாம் என்றுமே மதிப்பும் மரியாதையும், பெருமிதமும் கொண்டு வந்திருக்கிறோம். தரைப்படையாகட்டும், நமது கடற்படையாகட்டும் விமானப்படையாகட்டும், நமது வீரர்களின் தைரியம், வீரம், சாகசம், பராக்கிரமம், தியாகம் ஆகியன ஒவ்வொரு குடிமகனின் வணக்கத்துக்கும் உரியனவாக அவை இருக்கின்றன.  125 கோடி நாட்டுமக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வது, தங்கள் இளமையை நாட்டுக்காகத் தியாகம் செய்யும் படைவீரர்கள் காரணமாகத் தான்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் இராணுவப்படையினர் கொடிநாளைக் கடைபிடிக்கிறோம்.  நமது தேசம் இராணுவத்தினர் மீது கொண்டுள்ள பெருமிதத்தையும், பெருமதிப்பையும் வெளிப்படுத்தும் நாள் தான் இந்த நாள்.  இந்த முறை பாதுகாப்பு அமைச்சகம் டிசம்பர் 1 முதல் 7 வரையிலான காலகட்டத்தில் ஒரு இயக்கத்தை முடுக்கி விட முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  தேசத்தின் குடிமக்களை அணுகி, இராணுவத்தினர் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை மகிழ்ச்சி தருகின்றன.  இந்த வாரம் முழுக்கவும், சிறியவர்-பெரியவர் என அனைவர்மீதும் கொடியைப் பொருத்துவார்கள்.  தேசத்தில் படையினர் மீது மதிப்பேற்படுத்துவது என்ற இயக்கம் முன்னிறுத்தப்படும்.  இந்த சந்தர்ப்பத்தில் நமது இராணுவப்படையினரின் கொடிகளை நாம் விநியோகம் செய்யலாம்.  நமது அண்டைப்புறத்தில், இராணுவப்படையினரோடு தொடர்புடைய நமக்குத் தெரிந்தவர்களிடத்தில் அவர்களின் அனுபவங்களை, அவர்களின் சாகசச் செயல்களை, அவற்றோடு தொடர்புடைய காணொளிகளை, படங்களை, #armedforcesflagdayயில் தரவேற்றம் செய்யுங்கள்.  பள்ளிகளில், கல்லூரிகளில், இராணுவத்தினரை அழைத்து, அவர்களிடத்தில் இராணுவம் பற்றிய தகவல்களைப் பெறலாம்.  நமது புதிய தலைமுறையினர், நமது இராணுவத்தின் அனைத்து வீரர்களின் நலனுக்காகவும் நிதிசேர்ப்பில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை கொடிநாள் வாரம் நமக்கு அளிக்கிறது.  இந்த நிதி, படைவீரர்களின் நலவாரியம் வாயிலாக போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவரின் நலனுக்காகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் செலவு செய்யப்படுகிறது.  பொருளாதார பங்களிப்பு நல்க பலவகையான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ksb.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.  இதன் பொருட்டு ரொக்கமில்லாப் பரிவர்த்தனையிலும் நீங்கள் ஈடுபடலாம்.  வாருங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நமது படைவீரர்களின் மனோபலத்தைப் பெருக்கும் பணிகளில் ஈடுபடுவோம்.  நாமும் அவர்கள் நலனில் நமது பங்களிப்பை அளிப்போம்.

          எனதருமை நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலக மண்வள நாள்.  நமது விவசாய சகோதர சகோதரிகளிடம் சில விஷயங்களைக் கூற நான் விரும்புகிறேன்.  நாம் உண்ணும் உணவு அனைத்தும் இந்த மண்ணோடு தொடர்புடையது.  ஒருவகையில் ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியும், மண்ணோடு தொடர்புடையது.  சற்றே கற்பனை செய்து பாருங்கள், உற்பத்தி செய்யத் தேவையான இந்த வளமான மண் இந்த உலகில் இல்லாது இருந்தால் என்னவாகும் யோசியுங்கள்.  மரம் செடி கொடிகள் முளைக்காது, மனித வாழ்வு எப்படி சாத்தியமாகும்? நுண்ணுயிர்கள் எப்படி உருவாகும்? நமது கலாச்சாரம் இதைப் பற்றி முன்னமேயே சிந்தித்திருக்கிறது; இதனால் தான் மண்ணின் மகத்துவம் குறித்து பண்டைய காலத்தில் விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார்கள்.  நமது பாரம்பரியத்தில் ஒருபுறத்தில் விவசாயம் குறித்தும், மண் குறித்தும், பக்தி மற்றும் நன்றியறிதல் உணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த மண்ணைப் பராமரிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.  மண் மீது பக்தி, கூடவே விஞ்ஞான பூர்வமாக அதைப் போற்றிப் பராமரித்தல் எனும் இரண்டு விஷயங்களுக்கு இந்த தேசத்தின் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்கள்.

நம் தேசத்து விவசாயிகள், பாரம்பரியத்தோடு இணைந்தவர்களாக இருக்கும் அதே வேளையில், நவீன விஞ்ஞானத்தின் மீதும் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள், மனவுறுதிப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது.  நான் இமாசலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோஹூ கிராமத்தின் போரஞ்ஜ் பகுதிக்குச் சென்ற போது, அங்கே இருக்கும் விவசாயிகள் பற்றிக் கேள்விப்பட்டேன்.  இங்கே விவசாயிகள் முன்பெல்லாம் அளவேயில்லாமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், இதனால் மண்வளம் பாதிப்படைந்தது.  மகசூல் குறைந்து கொண்டே வந்து, வருமானமும் குறைந்தது, மெல்ல மெல்ல மண்ணின் உற்பத்தித் திறனும் மங்கிக் கொண்டே வந்தது.  கிராமத்தின் சில விழிப்புணர்வுமிக்க விவசாயிகள், இந்தச் சூழ்நிலையை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு, பின்னர் சரியான சமயத்தில் தங்கள் நிலத்தின் மண்வளத்தைப் பரிசோதனை செய்தார்கள்; உரம், நுண்ணூட்டம், இயற்கை உரங்கள் ஆகியவற்றைப் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பன சொல்லிக் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கடைபிடித்தார்கள்.

மண்வளப்பரிசோதனை வாயிலாக விவசாயிகளுக்குக் கிடைத்த தகவல், அவர்களின் வழியைத் துலக்கியது, இதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? 2016-17இல் குளிர்காலம் பயிர்களின் விளைச்சல் ஒவ்வொரு ஏக்கரிலும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது, ஒவ்வொரு ஏக்கரிலிருந்து வருமானம் 4 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இதுமட்டுமில்லாமல், மண்ணின் தரத்திலும் மேம்பாடு காணப்பட்டது.  உரத்தின் பயன்பாடு குறைந்த காரணத்தால், பொருளாதார ரீதியாக சேமிப்பும் ஏற்பட்டது.  இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எனது விவசாய சகோதரர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மண்வள அட்டையில் காணப்படும் ஆலோசனைகளை அமல் செய்ய முன்வந்திருக்கிறார்கள், வெளிவரும் முடிவுகளைப் பார்க்கும் போது, அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது.  மகசூலைப் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் பூமித்தாய் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், பூமித்தாயை நாம் கவனித்துக் கொண்டால், இந்த பூமித்தாய், நம்மனைவரையும் கவனித்துக் கொள்வாள் என்பது விவசாய சகோதரர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.

நாடு முழுவதிலும் நமது விவசாயிகள் வசம் 10 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் இருக்கின்றன, இதன் வாயிலாக அவர்கள் தங்கள் நிலத்தை நல்லமுறையில் அறிந்து கொள்ள முடிகிறது, அதன்படி, விதைப்பை மேற்கொள்ள முடிகிறது.  நாம் பூமித்தாயை வணங்குகிறோம், ஆனால் அவள் மீது யூரியா போன்ற உரங்களைப் போடுவதால், அவளுக்கு எத்தனை பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா? பூமித்தாயின் மீது அளவுக்கு அதிகமாக யூரியாவைப் போடும் போது கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்பது அனைத்துவகையான அறிவியல் முறைகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  விவசாயி பூமித்தாயின் மைந்தன் எனும் போது, பூமித்தாய் நோய்வாய்ப்பட்டால் சகித்துக் கொண்டு சும்மா இருக்க அவனால் எப்படி முடியும்? இந்த தாய்-மகன் உறவை மீண்டும் ஒருமுறை விழிப்படையச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.  நமது விவசாயிகள், நமது பூமித்தாயின் புதல்வர்கள், நமது மண்ணின் மைந்தர்கள், 2022இல் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், அவர்கள் பயன்படுத்தும் யூரியாவை பாதியளவாகக் குறைப்போம் என்று உறுதியேற்க முடியுமா?  நமது பூமித்தாயின் புதல்வர்கள், எனது விவசாய சகோதரர்கள், இந்த உறுதிப்பாட்டை ஒருமுறை மேற்கொண்டு விட்டார்களேயானால், பூமித்தாயின் உடல்நலத்தில் மேம்பாடு காணப்படும், உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.

உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் ஆகியவற்றை நாமனைவரும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம்.  தீபாவளிக்கு முன்பாக குளிர் கவியத் தொடங்கி விடும் காலம் ஒன்று இருந்தது.  இப்பொழுது டிசம்பர் மாதம் தான் குளிர் மெல்ல மெல்ல நுழைகிறது.  ஆனால் குளிர்காலம் தொடங்கியவுடனேயே, போர்த்தியிருக்கும் போர்வையிலிருந்து மீண்டு எழ சங்கடமாக இருப்பதை நாம் உணர்கிறோம் என்பது நம்மனைவரின் அனுபவமாக இருக்கிறது.  ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட சதா சர்வகாலமும் விழிப்போடு இருப்போர் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் உத்வேகம் அளிக்கின்றன.  மத்திய பிரதேசத்தின் மாற்றுத்திறன் படைத்த ஒரு 8 வயதேயான சிறுவன் துஷார், தனது கிராமத்தவர்கள் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுவிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளான். இத்தனை பரந்துபட்ட அளவில் ஒரு செயலைச் செய்வது, இத்தனை சிறிய வயதிலான பாலகனா? ஆச்சரியம்!  ஆனால் அவன் வயதை விடப் பல மடங்கு அவனது மனோதிடமும், ஆர்வமும், ஆழமானவை, அதிகமானவை.  8 வயது நிரம்பிய இந்தச் சிறுவனால் பேச முடியாது, ஆனால் விசிலடிப்பதைத் தன் ஆயுதமாகக் கொண்டான்; காலை 5 மணிக்கு எழுந்து, தனது கிராமத்தின் வீடுதோறும் சென்று, சீட்டியடித்து அவர்களை எழுப்பி, திறந்தவெளியில் மலஜலம் கழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை சைகைகள் வாயிலாகவே ஏற்படுத்தினான்.  ஒவ்வொரு நாளும் 30-40 வீடுகள் சென்று தூய்மை பற்றிய கல்வியை அளித்த இந்தச் சிறுவன் காரணமாக கும்ஹாரி கிராமம், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டது.

தூய்மையை முன்னிறுத்தும் வகையில் இந்த சின்னஞ்சிறுவன் துஷார் உத்வேகம் அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.  தூய்மைப்பணிக்கு என எந்த வயதும் இல்லை, எந்த வரம்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.  சிறியவரோ பெரியவரோ, பெண்களோ ஆடவரோ, தூய்மை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று, தூய்மையைப் பேண அனைவரும் ஏதாவது ஒரு பங்களிப்பை ஆற்ற வேண்டியது அவசியம்.  நமது மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் மனவுறுதி படைத்தவர்கள், திறம் மிக்கவர்கள், சாகசமும், மனோதிடமும் உடையவர்கள்.  ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது.  இன்று இவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள்.  விளையாட்டுத் துறையாகட்டும், வேறு ஏதாவது போட்டியாகட்டும், ஏதாவது சமுதாய நிகழ்ச்சியாகட்டும், நமது மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர்.  நமது மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் ரியோ ஒலிம்பிக் பந்தயத்தில் மிகச்சிறப்பாக விளையாடி 4 பதக்கங்கள் வென்று வந்தார்கள் என்பதும், பார்வையற்றோருக்கான டி-20  உலகக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகவும் ஆனார்கள் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நாடு முழுவதிலும் பலவகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நாட்களில் உதய்பூரில் 17ஆவது தேசிய பாராநீச்சல் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருந்த நமது இளைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள், இதில் பங்கு கொண்டு, தங்களின் திறன்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவன் தான் குஜராத்தைச் சேர்ந்த 19 வயதுமிக்க ஜிகர் டக்கர், இவனது உடலின் 80 சதவீதத்தில் தசைகளே கிடையாது என்றாலும், இவனது சாகசம், மனோதிடம், உழைப்பு ஆகியவற்றைப் பாருங்கள்.  தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் 19 வயதான ஜிகர் டக்கர் 11 பதக்கங்களை வென்றிருக்கிறான்.  70ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் அவன் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறான்.  அவனது இந்த திறனின் பலனாக பாரதத்தின் இந்திய விளையாட்டு ஆணையம் வாயிலாக, 20-20 பாராலிம்பிக்ஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பாரா நீச்சல்வீரர்களில் ஒருவன் என்ற நிலையில், தற்போது குஜராத்தின் காந்திநகரில் centre of excellences அமைப்பில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.  நான் இளைஞன் ஜிகர் டக்கருக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.  இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்தன்மை, வாய்ப்பு ஆகியன மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  தேசத்தின் ஒவ்வொரு நபரும் அதிகாரப்பங்களிப்பு உடையவராக ஆக வேண்டும் என்பதே நமது முயற்சியாக இருக்கிறது.  அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நாம் படைக்க வேண்டும்.  சமநோக்கு, எனது மக்கள் என்ற உணர்வு வாயிலாக சமூகத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கட்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டும்.

சில நாட்கள் கழித்து ஈத்-ஏ-மிலாத்-உன்-நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது.  இந்நாளில் தான் இறைத்தூதர் ஹஸ்ரத் முகமது சாஹிப் அவர்கள் பிறந்தார். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்; இந்த வேளையில், சமூகத்தில் அமைதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் வகையில் ஈத்பெருநாள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும், புதிய சக்தியை வழங்கட்டும், புதிய மனவுறுதிக்கான திறனை அளிக்கட்டும்.

(தொலைபேசி அழைப்பு)

வணக்கம் பிரதமர் அவர்களே, நான் கான்பூரிலிருந்து நீரஜா சிங் பேசுகிறேன்.  நான் உங்களிடம் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த ஆண்டு முழுவதிலும் நீங்கள் மனதின் குரலில் கூறியவற்றிலிருந்து பத்து மிக நல்ல விஷயங்களை நீங்கள் எங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்களேன். இதன் வாயிலாக எங்களால் அந்த விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க முடியும், அவற்றிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும். நன்றி.

நீங்கள் கூறுவது சரிதான்; 2017ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கிறது, 2018 வாயிற்கதவுகளுக்கு அருகே வந்து விட்டது.  நல்ல ஆலோசனை தான், இதோடுகூட, வேறு ஒன்றையும் இணைத்துப் பார்க்க என் மனம் விரும்புகிறது.  நம் கிராமங்களில் மூத்தோர் இருப்பார்களில்லையா, அவர்கள் எப்போதும், துக்கத்தை மறந்து விடு, சுகத்தை மறக்காதே என்பார்கள். இந்தக் கருத்தை நாம் நன்கு பரப்ப வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.  நாம் 2018ஆம் ஆண்டில் மங்கலத்தை நினைவில் இருத்தி, மங்கலம் ஏற்பட வேண்டும் என்ற உறுதியேற்று புத்தாண்டை வரவேற்போம்.  கடந்து போனவற்றை ஆண்டுநிறைவில் கணக்குப் பார்க்கிறோம், கருத்துகளின் அலசல்களில் ஈடுபடுகிறோம்; இவற்றின் முடிவுகளை அடியொற்றி அடுத்த ஆண்டுக்கான திட்டங்களைத் தீட்டுகிறோம். ஊடகத்தில் கடந்த ஆண்டின் சுவாரசியமான சம்பவங்களை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறோம். இதில் ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமும் அடங்கியிருக்கிறது, எதிர்மறையான விஷயமும் அடங்கியிருக்கிறது.  ஆனால் 2018ஆம் ஆண்டில் நாம் காலெடுத்து வைக்கும் வேளையில் நல்லனவற்றை மட்டும் நினைவிலேற்றிச் செய்யலாமில்லையா, நல்லனவற்றில் ஈடுபட, அவற்றை நினைவில் கொள்ளலாமில்லையா?  நான் உங்களனைவருக்கும் ஒரு யோசனை கூறுகிறேன் – நீங்கள் கேள்விப்பட்ட, பார்த்த, அனுபவித்த 5-10 ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டால், நல்லதொரு உணர்வு ஏற்படுமில்லையா. இதில் நீங்கள் பங்களிப்பு நல்க முடியுமா?   நாம் இந்த முறை நமது வாழ்க்கையில் 5 ஆக்கப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா?  அது புகைப்படமாக இருக்கலாம், சிறுகதையாக இருக்கலாம், சின்னஞ்சிறு காணொளியாகவும் இருக்கலாம் – இவற்றின் மூலம் நாம் 2018ஆம் ஆண்டை சுபமான சூழலில் வரவேற்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நல்ல நினைவுகளோடு வரவேற்போம். ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு ஈடுபடுவோம். ஆக்கப்பூர்வமான நினைவுகளை மனதில் கொள்வோம்.

     வாருங்கள், NarendraModiAppஇல், MyGovஇல் அல்லது சமூக வலைத்தளத்தில் #PositiveIndiaவில் ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை நாம் நினைவுபடுத்துவோம்.  நல்ல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்து நல்லதொரு சூழலை உருவாக்குவோம். நல்ல விஷயங்கள், நல்லனவற்றைச் செய்யத் தேவையான சக்தியை அளிக்கின்றன.  சுபமான உணர்வு, சுபமான மனவுறுதிக்கு வழிகோலுகிறது.  சுபமான மனவுறுதி, சுபமான பலன்களை அள்ளிக்கொடுத்து, முன்னேற வழிவகுக்கிறது.

    வாருங்கள், இந்த முறை நாம் #PositiveIndiaவில் ஈடுபட்டு முயற்சி செய்து பார்ப்போமே! இதன் மூலமாக நாம் மிகப் பலமானதொரு ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி, வரவிருக்கும் ஆண்டை வரவேற்போம்.  இந்தக் கூட்டு உந்துசக்தியின் வலிமையையும் அதன் தாக்கத்தையும் நாமனைவருமாக இணைந்தே ஏற்படுத்துவோம்.  எனது அடுத்த மனதின் குரலில் நான் உங்களின் இந்த #PositiveIndiaவில் வந்திருக்கும் விஷயங்களை நாட்டுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, அடுத்த மாதம், அடுத்த மனதின் குரலில், நான் மீண்டும் உங்களிடையே வருவேன். பல விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். மிக்க நன்றி.


(Release ID: 1510931) Visitor Counter : 596


Read this release in: English , Gujarati , Kannada