குடியரசுத் தலைவர் செயலகம்

உலக வளைபாத மாநாட்டு துவக்கவிழாவில் குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தின் உரை

Posted On: 01 NOV 2017 1:10PM by PIB Chennai

1. இந்தியாவில் நடைபெறும் முதலாவது உலக வளைபாத மாநாட்டில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இதர நிறுவனங்களுடன் இணைந்து ,கியூர் இண்டர்நேஷனல் இந்தியா டிரஸ்ட் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள 29 மாநிலங்களைச் சேர்ந்த 500 மருத்துவர்களை வரவேற்கிறேன். குறிப்பாக, சுமார் 20 நாடுகளில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் மருத்துவ நிபுணர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  1. பிறவியிலேயே வளைபாதம்  இருப்பது பெரும்பாலும் காணப்படும் குறைபாடாகும். முன்னதாகவே, இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால், அது நிரந்தர குறைபாடாக மாறிவிடும். இது குழந்தைகளின் நடக்கும் திறனையும், நம்பிக்கையையும் பாதிக்கும். கல்வி மற்றும் பள்ளி நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு குழந்தையால் தனது ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் போகும்.
  2. வளைபாத குறைபாடு குணப்படுத்தக்கூடியதுதான். இந்தியாவில், ஆண்டுக்கு 50,000 குழந்தைகள் வளைபாத குறைபாட்டுடன் பிறக்கின்றன. இந்த குறைபாட்டுக்கான சரியான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியாது. இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அண்மைக்காலம் வரை அறுவைச் சிகிச்சையே தீர்வாக இருந்தது. இது பெற்றோருக்கு அதிக செலவை ஏற்படுத்தி விடுவதுடன் குழந்தைகளுக்கும் ,குடும்பத்தினருக்கும் பெரும் இன்னலையும் விளைவிக்கும். கிராமப்புற பகுதிகளில் அறுவைச் சிகிச்சையும் அரிதாகும். இதனால் பலருக்கு இந்தக் குறைபாடு குணமாகாமலேயே போய்விடுகிறது. அவர்கள் ஆயுளுக்கும் குறைபாட்டுடனேயே வாழவேண்டியுள்ளது
  3. இந்தியாவில் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் உடல் ஊனத்தால் வாழ்க்கையை ஒரு சுமையாக நகர்த்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமுதாயத்தில் அவர்களது அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உடல் ஊனங்கள் தடுக்கபடக் கூடியவை அல்லது குணப்படுத்தக்கூடியவை என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். தடுப்பு நடவடிக்கைகளும், சிகிச்சைகளும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன் ஒன்றுக்கு ஒன்று இணையாக நடக்க வேண்டும்.
  4.  போலியோவை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், வளைபாத குறைபாடும், இளம்பிள்ளை வாதமும் ஒன்று என்பது போன்ற குழப்பம் சிறிது காலத்துக்கு முன்பு நிலவியது. போலியோவை ஒழித்து விட்டோம் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை நாம் அடைந்துள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும், பொது சுகாதாரத்தில் இது ஒரு மைல் கல் சாதனையாகும். போலியோ ஒழிப்பு நடவடிக்கை மற்ற குறைபாடுகளையும், நோய்களையும் இல்லாமல் செய்யும் உத்வேகத்தை நமக்கு அளிக்கிறது. இதேபோல வளைபாத குறைபாட்டையும் நம்மால் ஒழிக்கமுடியும் என்று நம்புவோமாக.
  5. அறுவைச் சிகிச்சை இன்றி வளைபாத குறைபாட்டை சரி செய்யும் முறை அதிர்ஷ்டவசமாக நமக்கு கிட்டியுள்ளது. Ponseti என்னும் இந்த முறை தரமான சிகிச்சையாகும். இதனால் அறுவைச் சிகிச்சை தேவையற்றதாகி விட்டது. இதைத்தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதே சமயம் முழுமையான சிகிச்சையை பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகாலம் தொடர் சிகிச்சையை எடுத்துகொள்வதும் அவசியமாகும். போலியோ,தட்டம்மை நோய்களை ஒழித்துக் கட்டியது போல ,இதில் வெற்றி பெறுவதற்கு இதை ஒரு இயக்கமாக நடத்திக்காட்டுவது முக்கியமாகும்.  
  6. கியூர் இண்டர்நேஷனல் இந்தியாவுடன் சேர்ந்து பொது மருத்துவமனைகளும் அதிக குழந்தைகளை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசும், தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் பாரட்டத்தக்கவை ஆகும். இந்த சிகிச்சை முறை இந்தியாவில் 29 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவக்கல்லூரி ஆசிரியர்களும், அரசு மருத்துவர்களும் பங்கேற்றுள்ளனர்.
  7. இந்தத் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 40,000 குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இது உலகிலேயே பெரும் சிகிச்சை இயக்கமாக உருவாகி உள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ,வளைபாத குறைபாட்டுடன் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்ட தேசிய சுகாதார இயக்கம் பாராட்டத்தக்கது. கியூர் இண்டர்நேஷனலுடன் சேர்ந்து இந்தக் குறைபாட்டை போக்குவதை சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படும் மாநில அரசுகளும் பாராட்டுக்குரியவை ஆகும்.
  8. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் ஆகியோரை பாராட்ட வேண்டியது அவசியமாகும். வளைபாத குறைபாட்டுக்கு எதிரான முன்னணி வீரர்கள் அவர்கள்தான்.
  9. இதில் வெற்றி கண்டபோதிலும்,ஆண்டுக்கு 8,000 புதிய வளைபாத குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருவதை புறக்கணித்து விடமுடியாது. வளைபாதக் குறைபாட்டுடன் ஆண்டுக்கு  50,000 குழந்தைகள் பிறந்த காலத்தை ஒப்பிட்டால், குறைவுதான். 2022-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, வளைபாத குறைபாட்டுக்கு உடனுக்குடன் சிகிச்சை கிடைக்கும் நிலையை உறுதி செய்ய வேண்டும்.
  10. பொது சுகாதாரத்தில் சவாலாக உள்ள வளைபாத குறைபாட்டை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு இல்லாத நிலையை நாம் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர் படும் துன்பம் ஆகியவற்றைக் களைய உறுதி எடுக்க வேண்டும். போலியோவை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட பலமுனை நடவடிக்கைகளைப் போன்று இதிலும் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
  11. இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வளைபாத குறைபாட்டின் வரலாற்றை நாம் அறிவோம். 2022-ல் வளைபாத வரலாற்றை நாம் நிகழ்த்துவோம்.

 

இந்த மாநாடு வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நன்றி, ஜெய் ஹிந்த்!

 

***


 



(Release ID: 1510742) Visitor Counter : 155


Read this release in: English