நீர்வளத் துறை அமைச்சகம்
காவிரி நடுவர் மன்றத்திற்கு ஆறு மாதங்கள் காலநீடிப்பு
Posted On:
04 NOV 2017 7:06PM by PIB Chennai
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை நடுவர் மன்றத்திற்கான பதவிக் காலத்தை மத்திய நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைத்தல் திட்ட அமைச்சகம் மே 02, 2018 வரை ஆறு மாதங்களுக்க நீடித்துள்ளது.
கர்நாடகாவில் உற்பத்தியாகி வங்கக் கடலில் கலப்பதற்கு முன் தமிழ்நாடு புதுச்சேரி வழியாகப் பாய்ந்து ஓடும் காவிரி மாநிலங்களுக்கு இடையேயான பாயும் நீர் நிலையாகும். காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே கடுமையான மோதலை உருவாக்குவதாக உள்ளது. முந்தைய காலத்தின் சென்னை ராஜதானிக்கும் மைசூர் ராஜ்யத்திற்கும் இடையே 1892, 1924 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் இந்த மோதலின் ஆரம்பம் இருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிப்பள்ளத்தாக்கு ஆகியவற்றின் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனை நடுவர் மன்றத்தை மத்திய அரசு, ஜுன் 2, 1990 ல் மத்திய அரசு அமைத்தது.
2005, ஆகஸ்ட் 05 க்குள் அறிக்கையை அளிக்குமாறு நடுவர்மன்றம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் முதலில் ஓராண்டுக்கு 2006, ஆகஸ்ட் 06 வரையும் மீண்டும் 2007 பிப்ரவரி 05, வரை ஆறு மாதங்களுக்கும் நீடிக்கப்பட்டது.
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனை நடுவர் மன்றம் அதன் அறிக்கையையும் தீர்ப்பையும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம், 1956, பிரிவு 5(2) ன் படி 2007, பிப்ரவரி 05 அன்று அளித்தது. மேற்படி சட்டம் பிரிவு 5(3)ன் கீழ் விளக்கமும்/ கூடுதல் வழிகாட்டுதலும் கோரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் மத்திய அரசும் ஏப்ரல் 27, 2007, ஏப்ரல் 30, 2007, மே 03, 2007 ஆகிய தேதிகளில் மனுதாக்கல் செய்தன. 2007, மே 03 லிருந்து ஓராண்டு காலத்திற்குள் கூடுதல் அறிக்கையை நடுவர்மன்றம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. நடுவர மன்ற வேண்டுகோள் காரணமாக கூடுதல் அறிக்கை அளிப்பதற்கு கால அவகாசத்தை நவம்பர் 02, 2017 வரை அவ்வப்போது மத்திய அரசு நீடித்தது. தற்போது நடுவர் மன்றம் மீண்டும் கால நீடிப்பு கோரியது. இதனால் மே 02, 2018 வரை அரசு கால நீடிப்பு செய்துள்ளது.
இதற்கிடையே நடுவர் மன்றத்தின் மேற்குறிப்பிட்ட அறிக்கை மற்றும் தீர்ப்புக்கு எதிராக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுக்களையும் தாக்கல் செய்திருந்தன. இந்த விஷயத்தில் சிறப்பு அனுமதி மனுவை உச்சநீதிமன்றம் மே 05, 2007ல் ஏற்றுக் கொண்டது.
பிப்ரவரி 5, 2007 தேதியிட்ட இறுதித் தீர்ப்பை அமல் செய்வதற்கு இடைக்கால மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 19, 2013 தேதியிட்ட அறிவிக்கையைக் காண்க. மேற்பார்வைக்குழு, மத்திய நீர்வள அமைச்சக செயலாளரைத் தலைவராகவும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தலைமைச் செயலாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்டிருந்தது. ஜுன் 01, 2013, ஜுன் 12, 2013, ஜுலை 15, 2013, நவம்பர் 08, 2013, செப்டம்பர் 28, 2015, செப்டம்பர் 12, 2016, செப்டம்பர் 19, 2016, பிப்ரவிர 17, 2017 என இந்தக் குழுவின் கூட்டம் இதுவரை எட்டு முறை புது தில்லியில் நடந்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சனை நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீடுகளைச் செய்துள்ளன. இந்த சிவில் மேல்முறையீடுகள் ஏற்கத்தக்கவை என்று டிசம்பர் 09, 2016 தேதியிட்ட உத்தரவில் தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த விஷயம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தது.
(Release ID: 1510739)
Visitor Counter : 209