குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விவசாயத்துறையை மேம்படுத்த, விவசாய தொழில்நுட்பத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்.

Posted On: 15 NOV 2017 2:48PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச விவசாய தொழில்நுட்ப மாநாடு 2017 துவக்க விழா

 

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்த, விவசாய தொழில்நுட்பத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்’’ என்றார். ஆந்திரப் பிரதேச விசாகப்பட்டினத்தில் இன்று ஆந்திரப் பிரதேச விவசாய தொழில்நுட்ப மாநாடு 2017ஐ தொடங்கி வைத்து, அவர் இவ்வாறு பேசினார். ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச விவசாயம், தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு.சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கந்தா ஸ்ரீனிவாச ராவ், ஆந்திரப் பிரதேச அறக்கட்டளைகள் துறை அமைச்சர் திரு.பிடிகொண்டாலா மாணிக்யாலா ராவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில்,  ‘‘இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. விவசாயம் மற்றும் அதனுடன் மீன்பிடிப்பு,  வனம் ஆகியவை 2016 – 2017ல் நிகர மதிப்பு கூட்டில் (ஜிவிஏ) 2011 -12 விலைப்புள்ளி அடிப்படையில் சுமார் 17 சதவீத பங்கை கொண்டிருந்தது’’ என்றார்.

 

குடியரசுத் துணைத் தலைவர் பேசுகையில், நம் முன்னால் உள்ள பல்வேறு சவால்களை எதிர்க்கொள்ளும் வல்லமை நம்மிடம் உள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், பல்வேறு துறைகளின் வளர்ச்சியை 33 சதவீதமாக உயர்த்த வேண்டியது அவசியம் என்றார்.

 

குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில், இதற்கு வழக்கமான நடவடிக்கைகள் பலன் தராது. நாம் விவசாயிகளிடம் இணைந்து  அறிவாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளை கையாள வேண்டும். உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிப்பதால் கிடைக்கும் பொருளாதார பலன்கள் அனைத்து விவசாயகளையும் சென்றடையும் வகையில் தொழில்நுட்பத்தை நாம்  அவசியம் பயன்படுத்த வேண்டும் என்றார்.

 

மேலும் கூறுகையில், நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில், உள்நாட்டிலேயே உணவு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஏற்படுத்த வேண்டியது அவசிய தேவை என்றார். அவர் மேலும் கூறுகையில், உற்பத்தி பெருக்கம் மற்றும் சீரிய உணவு தானிய விநியோக முறை ஆகியவை நம்முடைய நாட்டை முன்னோக்கி நடைபோட வைக்கும். அது பூஜ்ய அளவிலான பட்டினி மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்து என்ற இலக்கை அடைய உதவும். ஆந்திரப் பிரதேச விவசாய தொழில்நுட்ப மாநாடு – 2017 உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் விவசாயத்துறையில் புதுமையான நடவடிக்கைகளை  புகுத்துவது பற்றி ஆலோசிக்க மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு என்றார்.

 

குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில், தொழில்நுட்பம் பல்வேறு வழிகளில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது. மண்வளம் பற்றி அறியவும், நிலத்தில் என்ன பயிரை விளைவிக்கலாம் என்பது பற்றி அறிந்து அதை தேர்ந்தெடுக்கவும், முன்கூட்டியே பருவநிலைகள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அறிந்து கொள்ளவும், விவசாய துறையில் உள்ள தீவிரத்தன்மை மற்றும் மாற்றுத்தன்மை ஆகியவற்றை அறிந்து உற்பத்தியை பெருக்கவும் பால் பண்ணை போன்ற உபதொழில்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை  பெருக்கவும், வனங்கள், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தடுப்பு அணைகள் கட்டுதல், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசன முறை, கிராமப்புற சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகள், தரமான  மின்சாரம், கிடங்குகள், குளிர்பதன கிடங்கு வசதி, குளிர்பதன வேன்கள், சந்தை பகுதிகள், உணவு பதப்படுத்துதல், உரிய நேரத்தில் நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதி, விவசாயிகளுக்கு தோதான காப்பீடு கொள்கைகள் மற்றும் சந்தை ஆகியவற்றுக்கு தொழில்நுட்பம் உதவுகிறது. நமது விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், இயற்கையின் அபரிமிதமான வளத்தை பயன்படுத்தவும், நாம் ஒன்றிணைந்தும், தொழில்நுட்பரீதியாகவும் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

 

*****



(Release ID: 1510735) Visitor Counter : 158


Read this release in: English