சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம், பிரகதி மைதானத்தில் 14 - 27 நவம்பரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Posted On: 15 NOV 2017 4:46PM by PIB Chennai

புதுடெல்லி, 15 நவம்பர் 2017: பிரகதி மைதானத்தில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் வண்ணமயமான ‘கைவினைப் பொருட்கள்’ கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் திஹார் சிறைக் கைதிகள் மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாஸ்டர் கலைஞர்களின் அழகிய கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

2017 நவம்பர் 14 முதல் 27 வரை நடக்கும் ‘ஹூனார் ஹாத்’ கண்காட்சியை தொடங்கி வைத்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையியல், ‘பிரகதி மைதானத்தில் நடக்கும் ஹூனார் ஹாத்தில் குறிப்பிடத்தக்க வகையில், திஹார் முதல் திரிபுரா வரையிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கர்நாடகா முதல் கொல்கத்தா வரையிலுமான மாஸ்டர் கலைஞர்கள் மற்றும் கைவினையாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்’ என்றார்.

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம், ‘உஸ்தாத்’ திட்டத்தின் கீழ் ‘ஹூனார் ஹாத்’தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. மேலும், ‘ஹூனார் ஹாத்’ வேலைவாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் வெற்றிகரமான ஒரு இயக்கமாக மாறியுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மாஸ்டர் கலைஞர்கள் மற்றும் கைவினையாளர்கள் மற்றும் உணவு நிபுணர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையை ஏற்படுத்தி தருவதாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், ‘‘‘ஹூனார் ஹாத்’  மாஸ்டர் கலைஞர்கள் மற்றும் கைவினையாளர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தையும் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாக  அமைந்துள்ளதுடன், இந்த கண்காட்சி அவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகவும் அமைந்துள்ளது’’ என்றார்.

இம்முறை ‘ஹூனார் ஹாத்’, பிரகதி மைதானத்தில் அறை எண் – 7ஜி மற்றும் 7எச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 30 பெண் கலைஞர்கள் உட்பட 130 கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திரு. நக்வி கூறுகையில், ‘‘இந்த முறை ‘ஹூனார் ஹாத்’ கண்காட்சி, முந்தைய ‘ஹூனார் ஹாத்’ கண்காட்சியில் இருந்து மாறுபட்டு சிறப்புடன் அமைந்துள்ளது. இப்போது முதல் முறையாக திஹார் சிறைக் கைதிகளின் தயாரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதில் மரச்சாமான்கள், கைத்தறி தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள், பேக்கரி பொருட்கள், ஆர்கானிக் எண்ணெய், நறுமணப் பொருட்கள் மற்றும் தானியங்கள் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.

திரு. நக்வி மேலும் கூறுகையில், ‘‘இந்த கலைஞர்கள் தங்களுடன் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, பிரம்பு மற்றும் மூங்கிலால் ஆன பொருட்கள், அசாம்; துஷார், ஜீஜா சணல் தயாரிப்புகள், பாகல்பூரின் மத்கா சில்க், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவின் பாரம்பரிய ஆபரணங்கள், லேக் வளையல்கள், நகைகள், மேற்குவங்கத்தின் கந்தா தயாரிப்புகள், வாரணாசியின் பட்டு, உ.பி.யில் இருந்து லக்னவி சிகான் வேலைப்பாட்டு பொருட்கள், ஜரி ஜர்தோசி பொருட்கள், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து குர்ஜா செராமிக் தயாரிப்புகள், மண்பாண்டங்கள், பிளாக்ஸ்டோன் பாண்டங்கள், உலர் மலர்கள், அஜ்ராக் பிரின்ட்,  முத்வா, கட்ச் எம்பிராய்டரிகளும், காஷ்மீரில் இருந்து ஷால்கள், தரைவிரிப்புகள், காகிதக்கூழ் பொருட்களும், குஜராத்தில் இருந்து அஜ்ராக்  பிரி்ன்ட், முத்வா, கட்ச் எம்பிராய்டரி மற்றும் பந்தேஜ்களும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாடிக்/பாக்/மஹேஸ்வரி, பார்மரின் அப்லிக் மற்றும் அஜ்ராக்கும், மொராதாபாத்தில் இருந்து தோல் பொருட்கள், பித்தளையால் ஆன பொருட்களும், தெலுங்கானாவில் இருந்து கலம்காரி எனும் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி தயாரிப்புகளை கொண்டு வந்துள்ளனர். மேலும், புதுச்சேரி மற்றும் உ.பி.யில் இருந்து இயற்கை புற்களால் தயாரிக்கப்பட்ட கூடைகள், ராஜஸ்தானில் இருந்து கோட்டா  பட்டி வேலைப்பாடுகள், குஜராத்தில் இருந்து முரல் ஓவியங்கள் மற்றும் பந்தேஜ்கள் என்று சில புதிய பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

திரு. நக்வி கூறுகையில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம், இதற்கு முன்பு ‘ஹூனார் ஹாத்’தை புதுச்சேரியிலும், இந்த ஆண்டில் தில்லி பாபா கதக் சிங் மார்க்சிலும், கடந்த ஆண்டில் பிரகதி மைதானத்திலும் நடத்தி உள்ளது. வரும் நாட்களில் ‘ஹூனார் ஹாத்’ மும்பை, கொல்கத்தா, லக்னோ, போபால் மற்றும் பிற பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. இதுதவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் ‘ஹூனார் ஹாத்’தை நடத்தும் அதேநேரத்தில், கலைஞர்களுக்கு இப்போதைய தேவையின் அடிப்படையில் பயிற்சிகளும்  அளிக்கிறோம்’’ என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து 2, அசாம் 2, பீகார் 4, டெல்லி 24, குஜராத் 11, ஜம்மு காஷ்மீர் 9, ஜார்க்கண்ட் 1, கர்நாடகா 4, மத்தியப் பிரதேசம் 5, மணிப்பூர் 1, மிஜோரம் 1, நாகலாந்து 4, புதுச்சேரி 3, பஞ்சாப் 2, ராஜஸ்தான் 12, தமிழ்நாடு 1, தெலங்கானா 2, உத்தரப்  பிரதேசம் 37, உத்தரகாண்ட் 1 மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து 4 கலைஞர்கள் மற்றும் கைவினையாளர்கள்  இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு.டாக்டர் வீரேந்திர குமார், சிறுபான்மையினர் விவகாரத்துறை செயலாளர் திரு.அமேசிங் லுகாம், என்எம்டிஎப்சி தலைவர் திரு.ஷபாஸ் அலி, திஹார் சிறை டைரக்டர் ஜெனரல் திரு.அஜய் காஷ்யப் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


(Release ID: 1510721) Visitor Counter : 78


Read this release in: English