சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நாட்டின் போக்குவரத்து மற்றும் சரக்குகள் அனுப்புகைக்கான கட்டமைப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் உலகத்தரத்திற்கு உயர்த்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளனர்.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, சூரத், குவஹாத்தி ஆகிய இடங்களில் சரக்குகள் அனுப்புகை பூங்காக்கள் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.

Posted On: 04 NOV 2017 7:20PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சி செயல்பாட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து மற்றும் சரக்கு அமைப்புகளுக்கு கட்டமைப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் உலகத்தரத்திற்கு உயர்த்த அரசு உறுதி பூண்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற உலக உணவு இந்தியா 2017 கருத்தரங்கின் ”அடிப்படைக் கட்டமைப்பு, சரக்குகள் அனுப்புகைத் தொழில்நுட்பம், கருவிகள்” என்பது பற்றிய அமர்வில் அவர் உரையாற்றினார்.

     தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு வீதம் கணிசமான வேகத்தில் முன்னேறி வருவதாக திரு கட்கரி தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் நாட்டில் 96,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளே இருந்தன. ஆனால் இப்போது இது சுமார் 1.7 லட்சம் கி.மீ ஆக அதிகரித்துள்ளது. விரைவில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை எட்டும். தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை இவை  தரும்.

     பாரதமாலா எனும் அரசின் சிறப்புறு திட்டத்தின் கீழ் 44 பொருளாதார வழித்தடங்களுக்கும் 24 பலவகை சரக்குகள் அனுப்புகை பூங்காக்களுக்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடங்களில் சரக்குப் போக்குவரத்துத் திறனுடன் நடைபெற சக்கரக் குடம் மற்றும் ஆரங்கள் மாதிரியில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. குளிர்சாதனக் கூடம் அனைத்து வசதிகளுடன் சரக்குகள் குவியும் மையங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பூங்காக்கள் நகரங்களுக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலைகள் அருகே அமைக்கப்படும். எனவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மாசுப்பாட்டினைக் குறைக்கவும் இவை உதவும். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, சூரத், குவஹாத்தி ஆகிய இடங்களில் சரக்குகள் அனுப்புகை பூங்காக்கள் அமைப்பதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். பொருளாதார வழித்தடங்கள் மற்றும் பலவகை சரக்குகள் அனுப்புகை பூங்காக்கள் விவசாய விளை பொருள்களை உணவுப் பதன மையங்களுக்கும் சந்தைகளுக்கும் விரைந்து அனுப்ப உதவும். இது விவசாயிகளின் வருவாயை உயர்த்தும்; உணவு பதனத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும்; பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

     கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டமும் நாட்டின் உணவுப்பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்து வருவதாக திரு கட்கரி கூறினார். இந்த திட்டத்தின் கீழ் 14 கடலோரப் பொருளாதார மண்டலங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 140 கோடி ரூபாய் செலவில் காக்கிநாடா, சதாரா ஆகிய இடங்களில் இரண்டு மிகப் பெரிய உணவு பதனப் பூங்காக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. மீனவர்களின் திறன்களை மேம்படுத்தவும் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இந்த திட்டம் ஆதரவு அளிக்கிறது. மீன்களைப் பதப்படுத்துதல், தரம்பிரித்தல், பெட்டிகளில் அடைத்தல் ஆகிய வசதிகள் பாரதீப் துறைமுகத்தில் செய்யப்பட்டுள்ளன. இதற்கும் கூடுதலாக 111 நீர்வழிப் பாதைகள் தேசிய நீர்வழிப்பாதைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. கங்கை நதி, பிரம்மபுத்திரா, பராக் ஆகியவை ஏற்கனவே மேம்படுத்தப்படுகின்றன. நீர்வழிப்போக்குவரத்து சரக்குகள் அனுப்புகை செலவைக்குறைக்கும். இதனை அடுத்து உணவு பதனத் தொழில்துறைக்கு லாபம் கிடைக்கும். கங்கை நதியிலும் பிரம்மபுத்ராவிலும் போக்குவரத்து மேம்படுத்தப்படும் போது நமது உற்பத்திப் பொருள்கள் பங்களாதேஷ்க்குக் கொண்டு செல்வது எளிதாக இருக்கும். மேலும், 12 பெரிய துறைமுகங்களின் திறன் மேலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் இவை தொடர்ந்து லாபம் ஈட்டி வருகின்றன. ஜல்னா, விதர்பா, நாசிக் ஆகிய இடங்களில் சரக்குகள் ஏற்றும் துறைமுகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துறைமுகங்கள் இருப்பது சரக்குகள் போக்குவரத்திற்கு ஊக்கமளிக்கும்.

     சாலை மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதோடு நாட்டில் தண்ணீர்ப்பற்றாக் குறையுள்ள பகுதிகளில் நுண்நீர் அல்லது சொட்டு நீர்பாசனத்தை மேம்படுத்தவும் அரசு முன்னுரிமை அளிப்பதாக திரு கட்கரி தெரிவித்தார். 13 நதிகள் இணைப்புத் திட்டப் பணிகள் கூட விரைவாக நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில மூன்று மாதங்களுக்குள் முடிந்துவிடும். இந்த திட்டங்கள் அனைத்தும் தண்ணீர் கிடைப்பதையும் பயன்பாட்டையும் அதிகரித்து வேளாண் உற்பத்தித் திறனையும் உயர்த்தும்.

*****


(Release ID: 1510406) Visitor Counter : 99


Read this release in: English