உள்துறை அமைச்சகம்

மத்திய உள் துறை அமைச்சர் தலைமையில், சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த உயர் மட்டக்குழு ஆய்வுக் கூட்டம்.

சத்தீஸ்கர் அரசுக்குத் தேவையான உதவிகள் வழங்க திரு.ராஜ்நாத் சிங் உறுதி.

Posted On: 03 NOV 2017 4:32PM by PIB Chennai

இன்று மத்திய உள் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் சத்தீஸ்கரில் இடது சாரி தீவிரவாதம் (LWE) குறித்த உயர் மட்டக் குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் டாக்டர் ராமன் சிங், மத்திய உள் துறை இணை அமைச்சர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், மத்திய உள் துறை செயலாளர் திரு.ராஜீவ் ஹெளபா, சத்தீஸ்கர் மாநில தலைமை செயலாளர், மத்திய ரிசர்வ் காவல் படை டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், சத்தீஸ்கர் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் இடது சாரி தீவிரவாதம் குறைந்து வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் வன்முறையும் ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளன, குறிப்பாக 21% வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பதாக கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. மக்கள் ஆதரவு மற்றும் புவியியல் பரவல் ரீதியிலும் இடதுசாரி தீவிரவாதிகள் தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்து வருவதால், அவர்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு ஆதரவளிக்கும் என்று உள் துறை அமைச்சர் முதல் அமைச்சரிடம் உறுதி அளித்தார்.

தற்போது மாநில அரசு பாதுகாப்புக்குத் தேவையான மத்திய ஆயுத காவல் படை பட்டாலியன் (CAPF Bns), ஹெலிகாப்டர், துரோன்ஸ் எனப்படும் வேவு பார்க்கும் கருவிகள், கட்டிடக்கலை நுட்ப வல்லுநர் பட்டய பள்ளிகள் போன்றவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவை தவிர, 11 இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் 2 சிறப்பு இந்திய ரிசர்வ் பட்டாலியனும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இவை தவிர காவல் நிலையங்களை வலுவூட்டுவதற்கும், சிறப்பு படைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுமானத் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி தீவிரவாதம் குறித்து ஆலோசிக்கும் அதே நேரத்தில், இந்த தீவிரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள் போன்று முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான மாற்றுத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மத்திய அரசு சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி ரூபாய் ஒதுக்கி மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சாலைத் தேவை திட்டம் பகுதி -1 மூலம் 1,988 கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, இவற்றில் 1,531 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டுவிட்டன.  தற்போது சாலைத் தேவை திட்டம் பகுதி -2 மூலம் சத்தீஸ்கரில் 891 கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்காக 519 தொலைத்தொடர்பு கோபுரங்கள் முதல் கட்டமாக நிறுவப்பட்டுள்ளன.  இரண்டாவது கட்டமாக 1,028 கோபுரங்கள் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாடுகளின் ஒரு திட்டமாக திறன் மேம்பாட்டுக்காக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 .டி.. நிறுவனங்களும் 14 திறன் மேம்பாட்டு மையங்களும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விக் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு பீஜ்பூர் மற்றும் சுக்மாவில் 2 கேந்திரியா வித்யாலயா கல்வி நிலையங்களும், பீஜ்பூர், நாராயன்பூர் மற்றும் கோன்டகோன் ஆகிய 3 இடங்களில் ஜவஹர் நவோதயா வித்யாலயா அமைப்பதற்கும், ஜக்தல்பூரில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் (PMSSY)  மூலம் கல்வியை உயர் தரத்துக்கு கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய இணைப்புத் திட்டத்தில் ஜக்தல்பூர் விமானநிலையம் சேர்க்கப்பட்டு, செயல்படும் இறுதிக்கட்ட நிலையை நெருங்கியுள்ளது. மேலும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 707 தபால் நிலையங்கள், 108 ஏடிஎம் மையங்கள் மற்றும் 81 வங்கிக் கிளைகள் திறப்பதற்குத் தேவையான நிதி உதவியும் செய்யப்பட்டுள்ளன.



(Release ID: 1510016) Visitor Counter : 174


Read this release in: English