மத்திய அமைச்சரவை

ஜி.எஸ்.டி. கீழ் இயங்கும் லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 NOV 2017 3:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சரக்கு  மற்றும் சேவை வரி (GST) விதிப்பின் கீழ் லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் (National Anti-profiteering Authority - NAA) அமைக்கவும் அதற்கான தலைவர், தொழில்நுட்ப உறுப்பினர் பதவிகளை உருவாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரிவிதிப்பைப் பெருமளவு நேற்று குறைத்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலனாக நுகர்வோரின் பொருட்கள் மீதான விலை குறைக்கப்படுவதை உறுதி செய்வதைக் கட்டாயமாக்கும் நிறுவனமாக உடனடியாக நிறுவுவதற்கு வழியமைக்கப்படும்.

அமைக்கப்படும் லாபத் தடுப்பு தேசிய ஆணையகத்துக்கு (NAA) மத்திய அரசின் செயலர் நிலையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தலைவராக இருப்பார். மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இதில் இடம்பெறுவர். இது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சரக்குகளின் விலை, சேவைகளின் கட்டணம் ஆகியவற்றின் குறைப்பினால் கிடைக்கும் சலுகை முழு அளவுக்குப் போய்ச் சேருவதை அரசு உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

178 வகையான சரக்குகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக 2017, நவம்பர் 14ம் தேதி நள்ளிரவு குறைக்கப்பட்டது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. அதைப் போல், ஏராளமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் இந்த “லாபத் தடுப்பு” நடவடிக்கைகள் வரிச் சலுகைகள், சரக்குகள் சேவைகளின் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் முழுமையான பலன்கள்  நுகர்வோருக்குப் போய்ச் சேருவதை நிறுவனச் செயல்பாடுகளின் மூலமாக உறுதி செய்கின்றன.

லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் (NAA), ஒரு நிலைக்குழு (Standing Committee), ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பரிசோதனைக் குழுக்கள் (Screening Committees), மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரி வாரியத்தின் (CBEC) பாதுகாப்பு தலைமை இயக்கககம் (Directorate General of Safeguards) ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிறுவன அமைப்பு அமைந்திருக்கும்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர் சரக்கை வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும்போதோ வரிச் சலுகைக்கு ஈடான குறைப்பை பெறவில்லை என்று கருதினால், சம்பந்த்பட்ட மாநிலத்தில் உள்ள பரிசோதனைக் குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும், லாப நோக்கோடு அகில இந்திய அளவில் ஏதாவது நிகழ்ந்தால் அது குறித்து நிலைக்குழுவுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். அப்படி லாப நோக்கோடு யாராவது செயல்பட்டிருப்பதற்கான முகாந்திரம் தெரியவந்தால், அது குறித்து புலன் விசாரணை நடத்த பாதுகாப்பு தலைமை இயக்குநருக்கும்(Director General of Safeguards) மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரி வாரியத்திற்கும் (CBEC) புகாரை அனுப்பலாம். அவை விசாரணை நடத்தி, தனது அறிக்கையை லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் (NAA) அனுப்பும்.

அதையடுத்து, லாபத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆணையகம் உறுதி செய்தால், சம்பந்தப்பட்ட வணிகர், விநியோகஸ்தர் விலையைக் குறைத்து வழங்கவோ அல்லது தேவைக்கு மீறிய லாபத்தை அத்தொகைக்கு உரிய வட்டியோடு நுகர்வோருக்குத் திருப்பிச் செலுத்தவோ உத்தரவிடவேண்டும். அவ்வாறு தேவைக்கு மீறிய லாபத்தை நுகர்வோருக்குச் செலுத்த இயலாவிட்டால், அத்தொகையை நுகர்வோர் நல நிதியில் சேர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, யாராவது வணிகர் தவறிழைத்தால், தேசிய லாபத் தடுப்பு ஆணையகம் அவர் மீது அபராதமும் விதிக்கலாம். ஜி.எஸ்.டி. கீழ் செய்யப்பட்ட பதிவையும் ரத்து செய்யலாம்.

ஜி.எஸ்.டி. கட்டணத்திலும், குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பிலும் அண்மையில் கொண்டுவந்த குறைப்பின் பலனை அனுபவிக்கலாம் என்ற நம்பிக்கையை நுகர்வோருக்கு லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் (NAA) நம்பிக்கையூட்ட வேண்டும்.

 

***



(Release ID: 1509922) Visitor Counter : 147


Read this release in: English