நிதி அமைச்சகம்

`பனாமா வெளியீடுகள்' குறித்த வழக்குகள் : முழுவீச்சில் புலனாய்வு

Posted On: 06 NOV 2017 8:35PM by PIB Chennai

வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் (ICIJ) ஏப்ரல் 2016-ல் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வரி இல்லாத / குறைந்த வரி உள்ள வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இந்தியர்கள் சிலருக்கு தொடர்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்து, அரசு 2016 ஏப்ரல் 4 ஆம் தேதி பல முகமை குழு (MAG) ஒன்றை அமைத்தது. ஒருங்கிணைந்த மற்றும் துரிதமான புலனாய்வுக்கு உதவும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT), அமலாக்கப் பிரிவு (ED), நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு இதுவரையில் அரசுக்கு 7 அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளது.

தொடக்க நிலையில், 426 இந்தியர்கள் அல்லது இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர்களைப் பற்றிய சுருக்கமான விவரங்கள் பனாமா வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்து 426 நேர்வுகளிலும் வருமான வரித் துறை விசாரணைகள் நடத்தியுள்ளது. 28 வெளிநாட்டு அமைப்புகளுடன் 395 மேற்கோள் தகவல்கள் மூலம் விசாரிக்கப் பட்டுள்ளது. பெறப்பட்ட தகவல்கள் மற்றும் நடத்தப்பட்ட புலனாய்வின் அடிப்படையில், நடவடிக்கைக்கு உரிய 147 வழக்குகளும், நடவடிக்கை எடுக்க முடியாத 279 வழக்குகளும் (இந்தியாவில் வசிக்காதவர்கள் / முறைகேடுகள் இல்லாதவை போன்றவை) இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

நடவடிக்கை எடுக்கக் கூடிய 147 வழக்குகளில் :

  • அறிவிக்கப்படாத வகையில் ரூ.792 கோடி அளவுக்கான கிரெடிட்கள் இதுவரை புலனாய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன;
  • 35 வழக்குகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் 11 வழக்குகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது;
  • மற்ற வழக்குகளில், விசாரணகளின் போது அந்த நபர்களிடம் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன;
  • 5 வழக்குகளில் கிரிமினல் வழக்கு புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன;
  • 7 வழக்குகளில் கருப்புப் பணம் (தெரிவிக்கப்படாத வெளிநாட்டு வருமானம் & சொத்துகள்) மற்றும் வரி அமலாக்க சட்டம் 2015, பிரிவு 10-ன் கீழ் நோட்டீஸ்கள் அனுப்பப் பட்டுள்ளன.
  • மேலே உள்ள அனைத்து வழக்குகளிலும் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

*****


(Release ID: 1509594) Visitor Counter : 112


Read this release in: English