பிரதமர் அலுவலகம்
மணிலாவில் நடைபெற்ற 15-வது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட தொடக்க அறிக்கை (நவம்பர் 14, 2017)
Posted On:
14 NOV 2017 5:07PM by PIB Chennai
மேதகு அதிபர் டுட்டெர்ட்டே அவர்களே,
தலைவர்களே,
திரு. அதிபர் அவர்களே,
ஆசியான் அமைப்பின் வரலாற்றுப்பூர்வமான 50-வது ஆண்டில், மணிலாவுக்கு நான் முதல்முறையாக பயணம் மேற்கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு தொடங்கப்பட்டதன் 25 ஆண்டுகள் நிறைவையும் நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டில், தனது நிபுணத்துவத்துடன் ஆசியானை வழிநடத்திவரும் பிலிப்பைன்சுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள அதிபர் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பு நாடாக தனது பங்களிப்பை வியட்நாம் அளித்ததற்காக பெருமைக்குரிய வியட்நாம் பிரதமருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்களே,
ஆசியான் அமைப்பின் குறிப்பிடத்தகுந்த பயணம், கொண்டாட்டத்துக்கு ஏற்பவே மதிப்பு மிகுந்ததாக உள்ளது.
இந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தில், ஆசியான் அமைப்பு ஒரே கனவு, ஒரே அடையாளம் மற்றும் ஒரே சுதந்திரமான சமூகம் என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, ஆசியானைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை மையப்புள்ளியாக கொண்டிருப்பது புலனாகிறது.
3-வது ஆசியான் – இந்தியா செயல் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள நமது விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்கள், சிறப்பாக முன்னேற்றம் பெற்று வருகின்றன. இது மூன்று முக்கிய தூண்களான அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தலைவர்களே,
இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கடல்சார் இணைப்புகள், கடந்த காலங்களில் நமக்கு வர்த்தக உறவுகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின. இதனை மேலும் வலுப்படுத்த நாம் நெருங்கிப் பணியாற்ற வேண்டும்.
பிராந்திய நலன்கள் மற்றும் அதன் அமைதியான வளர்ச்சிக்கு ஆதாரமாக, விதிகள் அடிப்படையிலான பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை ஆசியான் அமைப்பு உருவாக்குவதற்கு நிலையான ஆதரவை அளிப்போம் என்பதை இந்தியா உறுதிப்படுத்துகிறது.
தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்துக்கு எதிராக, நாங்கள் தனிப்பட்ட முறையில் கடுமையாகப் போராடி வருகிறோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நாம் ஒருங்கிணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.
தலைவர்களே,
நமது 25-ம் ஆண்டு கொண்டாட்டங்களை, அதற்குப் பொருத்தமான கருத்துருவான “ஒரே மாதிரியான மதிப்புகள், பொதுவான எதிர்காலம்” என்பதன் அடிப்படையில், பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் மூலம், கூட்டாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்த நினைவு ஆண்டு, உரிய முறையில் நிறைவடைவதை ஆவலுடன் நான் எதிர்நோக்கியுள்ளேன். மேலும், தில்லியில் 2018 ஜனவரி 25 -ல் நடைபெற உள்ள இந்தியா-ஆசியான் சிறப்பு நினைவு மாநாட்டுக்கு உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தியாவின் 69-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் நமது சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ள ஆசியான் தலைவர்களை வரவேற்க 125 கோடி இந்தியர்களும் ஆவலுடன் உள்ளனர்.
நமது பொதுவான இலக்கை நிறைவேற்றுவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.
நன்றி.
****
(Release ID: 1509549)
Visitor Counter : 154