பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பணிபுரியும் பெண்கள் புகார் அளிப்பதற்காக எஸ்ஹெச்இ-பாக்ஸ் ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பைத் தொடங்கிவைத்தார் திருமதி மேனகா சஞ்சய் காந்தி

Posted On: 07 NOV 2017 6:59PM by PIB Chennai

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதற்காக, ஒருங்கிணைந்த எஸ்ஹெச்இ-பாக்ஸ் ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பை (SHe-Box online complaint Management System) மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி இன்று தொடங்கிவைத்தார். பணியிடங்களில் பெண்கள் பாலியல் கொடுமை (தடுப்பு, விலக்கு மற்றும் தீர்வு) சட்டம் (எஸ்ஹெச் சட்டம்), 2013-ஐ சிறப்பான முறையில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக எஸ்ஹெச்இ-பாக்ஸ், புதுதில்லியில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட நாட்டில் உள்ள அனைத்து பெண் ஊழியர்களும், பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை புதிய எஸ்ஹெச்இ-பாக்ஸ் வலைதளம் அளிக்கிறது. பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உள்முக புகார் குழு (Internal Complaint Committee) அல்லது உள் புகார் குழு (Local Complaint Committee)-வில், ஏற்கனவே எழுத்து மூலம் புகார் அளித்தவர்களும், இந்த வலைதளத்தின் மூலம் தங்களது புகாரை பதிவுசெய்யலாம்.

இந்த ஆன்லைன் வசதியைத் தொடங்கிவைத்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி, இது வரலாற்றுப்பூர்வமான நடவடிக்கை என்றார். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆன்லைன் வலைதளம் மூலம் புகாரைப் பெறும் முறையை எந்தவொரு அரசும் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த சூழலை அளிப்பதில் அரசு முற்றிலும் உறுதிபூண்டுள்ளது. இதன் காரணமாகவே, அனைத்துப் பணியிடங்களிலும் உள்முக புகார் குழுக்களை அமைப்பதற்கான முயற்சிகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். இதுதொடர்பான கையேட்டை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளதாகவும், உள்முக புகார் குழுக்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது புகார்களை நேரடியாக அளித்து, அவர்களது குறைகளைப் போக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக எஸ்ஹெச்இ-பாக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கண்காணிக்கும் என்று திருமதி.மேனகா காந்தி உறுதியளித்தார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுவரும் பெண்களுக்கு விரைந்து தீர்வு அளிக்கும் முயற்சியே எஸ்ஹெச்இ-பாக்ஸ் வலைதளம். இந்த வலைதளத்தில் புகார் அளித்தவுடன், இது நேரடியாக நிறுவனத்தின் உள்முக புகார் குழு/உள் புகார் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த வலைதளம் மூலம், புகார் மீது உள்முக புகார் குழு/உள் புகார் குழு நடத்திவரும் விசாரணையின் முன்னேற்றங்களை மகளிர் மேம்பாட்டு அமைச்சகமும், புகார்தாரரும் கண்காணிக்க முடியும். பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமைகள் குறித்த அனுபவங்களை பெண்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் #மீடூ (#MeToo) என்ற உலக அளவிலான சமூக வலைதள பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம், வலைதளத்துக்குள் செல்ல முடியும்.

எஸ்ஹெச்இ-பாக்ஸ் வலைதளத்துக்குள் செல்வதற்கான இணைப்பு: http://shebox.nic.in/

எஸ்ஹெச்இ-பாக்ஸ் வலைதளத்தைப் பயன்படுத்துவோருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளும் வலைதளத்திலேயே உள்ளன. இதில், குறிப்பிட்ட காலத்துக்குள் பதிலளிக்கப்படும் என்ற உறுதியளிக்கப்படுகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த  பயிற்சி/பணிமனை நடத்துவதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேர்வுசெய்துள்ள 112 அமைப்புகள் குறித்த தகவல்களும் இந்த வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளில் பயிற்சி அளிக்க தங்களது பங்களிப்பை செய்ய விரும்பும் திறன்பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை அளிப்பதற்கான வழிவகைகளும் இந்த வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்கள்/அமைப்புகள், தங்களது திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான அடித்தளத்தை எஸ்ஹெச்இ-பாக்ஸ் வழங்குகிறது. மேலும், நாடு முழுவதும் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்/அமைப்புகளின் செயல்பாடுகளை அமைச்சகத்தால் கண்காணிக்க முடியும்.

பாலியல் துன்புறுத்தல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள வழிமுறைகளை எளிதில்  பயன்படுத்தச் செய்ய, சட்டத்தில் உள்ள தகவல்களுடன் கையேடுகள் மற்றும் பயிற்சி வழிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தங்களது பணி விதிகள் மற்றும் ஒழுங்கு வழிமுறைகளின் அடிப்படையில், பயிற்சி முறையை பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றன.

எந்தவொரு டிஜிட்டல் சமூகத்துக்கும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை உறுதிப்படுத்துவது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டியது கட்டாயம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்குகளை நனவாக்கும் வகையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு இலக்கை எட்டுவதற்காக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து தீர்வுகாண்பதற்காக டிஜிட்டல் வழிமுறையை பயன்படுத்துவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.

****


(Release ID: 1509429) Visitor Counter : 372


Read this release in: English