மத்திய அமைச்சரவை

கீழமை நீதிமன்றங்களுக்கான இரண்டாவது நீதித்துறை தேசிய ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

Posted On: 10 NOV 2017 6:01PM by PIB Chennai

நாட்டில் கீழமை நீதிமன்றங்களுக்கு இரண்டாவது நீதித்துறை ஊதியக் குழுவை (SNJPC) அமைப்பதற்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. பி. வெங்கடராம ரெட்டி தலைமையில் இந்த ஊதியக் குழு அமைக்கப்படும்.  கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. ஆர். பசந்த் அதன் உறுப்பினராக இருப்பார்.

 

இந்த ஊதியக் குழு மாநில அரசுகளுக்கு 18 மாதங்களில் தனது பரிந்துரைகளை அளிக்கும்.

 

மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள நீதிபதிகளின் தற்போதைய ஊதிய விகித முறை, பணி குறித்த நிலைகள் ஆகியவற்றை இந்தக் குழு ஆராயும்.

 

நாட்டி்ல் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதிய விகித முறை, இதர படிகளை நிர்ணயிப்பதற்கான சில கோட்பாடுகளை வகுக்க இந்த ஊதியக் குழு உத்தேசித்துள்ளது. மேலும், நீதிபதிகளின் பணி நடைமுறை, பணி நிலைமை, பணிச்சூழல் மற்றும் ஊதியத்துடன் நீதிபதிகளுக்குக் கிடைக்கும் பல்வேறு படிகள்,  பலன்கள் ஆகியவற்றையும் ஆராயும். அவற்றைச் சீராக்குவது, எளிமைப்படுத்துவது குறித்தும் யோசனைகள் தெரிவிக்கும்.

 

ஊதியக் குழுவின் பணிகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடத்தை விதிகள், நடைமுறைகள்  ஆகியவற்றையும் ஊதியக் குழுவே வகுக்கும். நாடு முழுவதும் நீதிபதிகளுக்கு ஒரே சீரான ஊதிய விகிதம், பணி நிலமைகளை அமைப்பதற்கு ஊதியக் குழு திட்டமிட்டுள்ளது.

 

நீதித்துறை நிர்வாகத்தில் திறமைமையை மேம்படுத்துவது, நீதித்துறையின் பலத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பெரிதும் துணைபுரியும். அத்துடன், முந்தைய ஊதியக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தியதில் நேர்ந்த குறைபாடுகளை நீக்கவும் இந்தப் பரிந்துரைகள் உதவும்.

 

******

 

 

 

 


(Release ID: 1509208) Visitor Counter : 141
Read this release in: English