சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

ஒட்டுமொத்த நலனுக்கு பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளதாக இந்தியா கருதுகிறது. அதைக் கட்டுப்படுத்துவதில்

ஆக்கபூர்வமான பங்காற்ற விரும்புகிறது'': COP-23 -ல் இந்திய அரங்க திறப்பு நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

Posted On: 06 NOV 2017 9:00PM by PIB Chennai

ஜெர்மனியில் பான் நகரில் நடைபெறும் அரங்காவலரின் மாநாட்டில் (COP-23) இந்திய அரங்கை இன்று தொடங்கி வைத்த இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், ஒட்டுமொத்த நலனுக்கு பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றத்தை இந்தியா கருதுகிறது என்று கூறினார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் ஆக்கபூர்வமான பங்காற்ற வேண்டும் என இந்தியா விரும்புவதாக அவர் தெரிவித்தார். தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலக அளவில் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை பருவநிலை மாற்றம் சுமத்தும் என்று கூறினார். பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தாமதித்தால் ஏற்படும் பாதிப்புகளையும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். ``சுத்தமான காற்று, தண்ணீர், வாழ்வதற்கேற்ற பருவநிலை ஆகியவை மனித உரிமைகளில் பிரிக்க முடியாத அங்கங்களாக உள்ளன. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பது அரசியல் ரீதியிலான கேள்வியாக மட்டுமில்லை, அது நம்முடைய தார்மிகக் கடமையாகவும் இருக்கிறது'' என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

தனிநபர்  கரியமில வாயு உற்பத்தியில்  உலக சராசரியில் இந்தியாவின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், கரியமில வாயு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 %-க்கும் குறைவாகவே உள்ளது என்றும் கூறினார். இருந்தபோதிலும் கூட, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தடம் பதிக்கும் முயற்சிகளை அமல் செய்வதில் இந்தியா முன்முயற்சிகள் எடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாரம்பரியத்தைக் காட்டும் சாளரமாகவும், எங்கள்  மரபு, உள்நாட்டுத் தொழில்நுட்பம்,  உயர் லட்சியம் மற்றும் சாதனைகளைக் காட்டும் வகையிலும் இந்திய காட்சி அரங்கம் அமைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பருவநிலை மாற்றத்தில் தொடர்புடைய வெவ்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வரவேற்பதாகக் கூறிய அவர், யாரும் பின்தங்கிவிட விட்டுவிடாமல் உலகம் முழுக்க அனைவரும் பங்கேற்கும் வகையிலான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது  உலகளாவிய முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது என்று கூறினார்.  நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய மிகவும் அடிப்படையான உயர்லட்சியங்களில் ஒன்றாக வறுமை ஒழிப்பு இருக்கிறது என்று அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். பருவநிலை மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் குடிமக்களின் பங்களிப்பு, நீடித்த பயன்தரும் வாழ்க்கை முறைகள், பருவநிலையை கையாள்வதில் சமன்பாடு ஆகியவை மாற்று வழிகளைத் தருபவையாக உள்ளன என்று கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், அவற்றை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய மற்றும் மாநில அளவிலான ஏராளமான முக்கிய முயற்சிகளை அவர்  சுட்டிக் காட்டினார்.

பான் நகரில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆற்றிய உரை :

``COP 23-ல் இந்தியாவின் அரங்கிற்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். ஒட்டுமொத்த நலனுக்குப் பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது என்று இந்தியா கருதுகிறது. இதைத் தடுப்பதில் ஆக்கபூர்வமான பங்காற்ற இந்தியா விரும்புகிறது. இதனால் பெருமளவு மக்கள் தொகை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சவாலை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உலக அளவில் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை இது சுமத்தும் என்பதால் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, நம் அனைவருக்கும் இந்த COP மிக முக்கியமானதாக இருக்கிறது.

பாரிஸ் உச்சி மாநாட்டின் ஒப்பந்தத்தை சிறப்பாக அமல் செய்வதற்கு வழிகாட்டுதல்களை உருவாக்குவத்கு பணி ஆற்றவும், முன்னெடுத்துச் செல்லவும் நாம் இங்கே COP-23 -ல் பான் நகரில் கூடியிருக்கிறோம்.

பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தாமதித்தால் ஏற்படும் பாதிப்புகளையும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். ``சுத்தமான காற்று, தண்ணீர், வாழ்வதற்கேற்ற பருவநிலை ஆகியவை மனித உரிமைகளில் பிரிக்க முடியாத அங்கங்களாக உள்ளன. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பது அரசியல் ரீதியிலான கேள்வியாக மட்டுமில்லை, அது நம்முடைய தார்மிகக் கடமையாகவும் இருக்கிறது. ஒரே பூமிதான் இருக்கிறது. நம் எல்லோருக்கும் வாழ்விடமாக உள்ள பூமி அழிவதற்கு மனிதகுலம் தான் பொறுப்பேற்க வேண்டும். நமது சந்ததிகளை கவனமாக உருவாக்குவதைப் பொருத்து தான், இந்தப் பூமியில் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது இருக்கிறது. தனிநபர் கரியமில வாயு உற்பத்தியில் உலக சராசரியில் இந்தியா மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது என்றாலும், உலக கரியமில வாயு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 3% -க்கும் குறைவுதான் என்றாலும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் துடிப்புமிக்க தலைமையின் கீழ் தடம் பதிக்கும் முயற்சிகளை செயல்படுத்துவதில் முன்னேறிச் செல்கிறது.

இந்த விஷயத்தைப் பொருத்தவரையில், இந்தியாவின் பாரம்பரியத்தைக் காட்டும் சாளரமாகவும், உள்நாட்டுத் தொழில்நுட்பம்,  உயர் லட்சியம் மற்றும் சாதனைகளைக் காட்டும் வகையிலும் இந்திய அரங்கம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புதிய பொருளாதார உத்வேகம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள அம்சமாகவும், உலகளவில் வாய்ப்புகளை உருவாக்கும் ஆதாரமாகவும் உள்ளது.

பருவநிலை மாற்ற பிரச்சினையை சமாளிப்பதில்  இந்தியாவின் பல்வேறு வகையிலான முயற்சிகள் , பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை வெளிக்காட்டும் வகையிலான நிகழ்ச்சிகள் இந்திய அரங்கில் இடம் பெறும். பருவநிலை மாற்றத்தில் தொடர்புடைய தரப்பினர் தங்களது கருத்துகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். எனவே, நாங்கள் ஆக்கபூர்வமான, நேர்மறை அணுகுமுறையுடன்  இங்கு வந்திருக்கிறோம். யாரும் பின்தங்கிவிட விட்டுவிடாமல் உலகம் முழுக்க அனைவரும் பங்கேற்கும் வகையிலான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது  உலகளாகிய முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.  எனவே, எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான மற்றும் பசுமையான பூமியை விட்டுச் செல்வதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய மிகவும் அடிப்படையான உயர்லட்சியங்களில் ஒன்றாக வறுமை ஒழிப்பு இருக்கிறது.

தொலைநோக்கு சிந்தனை கொண்ட பிரதமரின் தலைமையில், எங்கள் பருவநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் பல கொள்கைகள் மற்றும் நிறுவனம் சார்ந்த நடைமுறைகளைத் தொடங்கி இருக்கிறோம். எரிசக்தி பாதுகாப்பு, உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு, தேசிய மற்றும் மாநில அளவில் திறன் மேம்பாடு உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எங்களின் உறுதியைக் காட்டுவதாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எங்களின் முக்கிய முயற்சிகளில் அடங்கும் சில அம்சங்கள் :

  • 2022 க்குள் 175 GW அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தி என்ற இலக்கில் 58.3 GW எட்டப்பட்டுள்ளது.
  • நீடித்த பயன்தரும் வாழ்க்கை முறைக்கு குடிமக்கள் மாறுவதற்கு உதவும் வகையில், இலவச சமையல் எரிவாயு இணைப்பு தருவதற்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம், மின்சிக்கனத்தை அளிக்கும் LED பல்புகளை அளிக்கும் உஜாலா திட்டம்.
  • மத்திய அரசின் பரந்த கொள்கை முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மாநில செயல் திட்டத்தை  32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது திட்டமிடல் செயல்முறையில் சேர்த்துக் கொண்டுள்ளன.
  • பருவநிலை மாற்றம் குறித்த முக்கிய தகவல்கள் விஷயத்தில் எங்களுடைய இலட்சியத்தின் ஓர் அங்கமாக புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட எரிசக்தி தொழில்நுட்பம், நவீன நிலக்கரி தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட எரிசக்தி சிக்கனம், பசுமை வனம், நீடித்த வாழ்வுக்கான குடியிருப்பு, நீர், நீடித்த பயன்தரும் வேளாண்மை மற்றும் உற்பத்தி துறைகளில் 8 உலகளாவிய தொழில்நுட்ப கவனிப்பு குழுக்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
  • வளர்ச்சிப் பணிகள் நடந்து வரும் நிலையிலும், வனம் மற்றும் மரங்களின் பரப்பு அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. வனப் பகுதிகளைப் பாதுகாப்பது, நீடித்திருக்கும் வகையிலான மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய கொள்கைகளால் இது சாத்தியமாகியுள்ளது.
  • நகர்ப்புறப் பகுதிகளில் புத்துயிராக்கம் செய்து மாற்றத்தை ஏற்படுத்த பல திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன. பொலிவுறு நகரங்கள் திட்டம், புத்துயிராக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக  இந்தத் திட்டங்கள் உள்ளன.
  • இந்தியாவை தூய்மையானதாகவும், குப்பைகளற்றதாகவும் ஆக்கிட தூய்மை பாரதம் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. கழிவு மேலாண்மை விதிகளை அரசு சமீபத்தில் திருத்தி அமைத்துள்ளது. விதிகள் மேலும் சிறப்பானவையாக, செம்மையானவையாக, கடுமையானவையாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
  • அந்த வகையில் ஆறு கழிவு மேலாண்மை விதிகளை அரசு திருத்தியுள்ளது. திடக் கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, உயிரி-மருத்துவம், நாசகரமான மற்றும் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவுகள் ஆகியவற்றுக்கான விதிகள் இதில் அடங்கியுள்ளன.
  • இந்தியாவின் விரிவான ரயில்வே வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை பசுமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • காற்று மாசு அளவை தினசரி அடிப்படையில் உடனுக்குடன் அறியும் வகையில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரமறியும் குறியீடு தொடங்கப் பட்டுள்ளது.
  • பாசனப் பகுதியை விரிவாக்கம் செய்யவும், நீர் பயன்பாட்டை மேம்படுத்தி `ஒவ்வொரு சொட்டுக்கும் அதிக சாகுபடி' என்ற இலக்கை நோக்கிய தொலைநோக்கு சிந்தனையுடன் பிரதமரின் கிரிஷி சிஞ்சயி திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
  • விவசாயிகளின் நலனுக்காக பிரதமரின் பசல் பீமா திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் மண்வள அட்டை வழங்குவதற்கு இன்னொரு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது.
  • சமூகத்தில் பல தரப்பு மக்களிடம், குறிப்பாக மாணவர்களிடம், பருவநிலை மாற்றத்தின் அறிவியல் , கவனிக்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் மற்றும், பருவநிலை மாற்றத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான வெவ்வேறு தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, அறிவியல் எக்ஸ்பிரஸ் பருவநிலை செயல்பாட்டு சிறப்பு ரயிலின் இரண்டாவது கட்டப் பயணம் நடைபெற்று வருகிறது.
  • நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் திறன் பயிற்சி வழங்குவதை இலக்காகக் கொண்டு ``தொழில் திறன்மிக்க இந்தியா'' திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் பேருக்கு இதில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • குறு & சிறு தொழிற்சாலைகளில் எரிசக்தி சிக்கனம் மற்றும் ஆதாரவளங்கள் சேமிப்பை மேம்படுத்தும் வகையில், பாதிப்புகளற்ற, குறைகளற்ற செயல்பாடு என்பது கொள்கை முயற்சியாக உள்ளது.
  • நதிகளை சுத்தம் செய்வது தொடர்பான மற்றொரு முக்கியமான முயற்சியாக, கங்கையை சுத்தம் செய்யும் தேசிய திட்டம் உள்ளது. 2,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கங்கை ஆற்றை புத்துயிராக்கம் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
  • இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும், அறிவார்ந்த பொருளாதாரம் கொண்டதாகவும் மாற்றுவதற்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த அனைத்து திட்டங்களும் பாதிப்பைக் குறைத்தல் மற்றும் தகவமைப்பு செய்வதில் பங்களிப்பு செய்கின்றன.

பருவநிலை மாற்ற செயல்பாடுகளில் இலட்சியங்களைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது. விகிதப்பங்கு மற்றும் பொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொறுப்புகளின் அடிப்படையில்,  தங்களின் வரலாற்றுப் பொறுப்புக்கு ஏற்ப மற்ற நாடுகளும் இலட்சியங்களை உருவாக்கிட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.  பருவநிலை மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் குடிமக்களின் பங்களிப்பு, நீடித்த பயன்தரும் வாழ்க்கை முறைகள், பருவநிலையை கையாள்வதில் சமன்பாடு ஆகியவை மாற்று வழிகளைத் தருபவையாக உள்ளன  என்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.''

 

 

***



(Release ID: 1509192) Visitor Counter : 306


Read this release in: English