தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் - சந்தோஷ் கங்வார்

Posted On: 06 NOV 2017 6:39PM by PIB Chennai

டெல்லி, ரோஹினியில் உள்ள ESIC பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2வது பட்டமளிப்பு விழாவில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. சந்தேஷ் குமார் கங்வார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

     நிகழ்ச்சியில் பேசிய திரு. சந்தோஷ் குமார் கங்வார், பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்தினார். பட்டம் பெற்றுள்ளதற்காக அவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தொழில் கடமையை மனதில் கொண்டு சமுதாய நலனுக்காக அனைத்து பட்டதாரிகளும் கடமையாற்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தங்களால் இயன்ற வரையில் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றுமாறு அவர் வலியுறுத்தினார். அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும், சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.  மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெறுவதற்கு ஆதரவு அளித்த டெல்லி, ரோஹினி ESIC பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்வியாளர்களுக்கும், பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

     ஓரளவுக்கான மருத்துவ கவனிப்பு  மற்றும் பணியின் போது காயம் ஏற்படுதல், நோயுறுதல், இறப்பு போன்ற சமயங்களில் தேவையான நேரங்களில் ரொக்க பயன்கள் போன்ற விரிவான சமூகப் பாதுகாப்பு பயன்களை அளிக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நிறுவனமாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கார்ப்பரேஷன் உள்ளது. தங்களது வளாகம் / கட்டுப்பாட்டில் 10 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனங்கலுக்கு ஈ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும். மாதம் ரூ.21,000 வரையில் சம்பளம் பெறும் பணியாளர்கள், ஈ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் சுகாதாரக் காப்பீடு மற்றும் இதர பயன்களைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்கள்.  தற்போது நாட்டில் 8.73 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துகிறது. இதனால் 3.18 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. இப்போதைய நிலவரப்படி, ஈ.எஸ்.ஐ. திட்டத்தில் பயன்பெறுபவர்களின் மக்கள் தொகை 12.02 கோடியாக உள்ளது. 1952ல் இது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, இதுவரையில் 151 மருத்துவமனைகள், 1467 / 159 மருந்தகங்கள் / ISM பிரிவுகள், 813 கிளை / பட்டுவாடா அலுவலகங்கள் மற்றும் 62 பிராந்திய & சார்-பிராந்திய / டிவிஷனல் அலுவலகங்களை ஈ.எஸ்.ஐ. உருவாக்கியுள்ளது.

     தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி, ரோஹிணியில் உள்ள ஈ.எஸ்.ஐ.சி. பல் மருத்துவக் கல்லூரி, டெல்லி - என்.சி.ஆர். பகுதியில் இயங்கும் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியாக உள்ளது. உலக அளவில் சிறந்த மற்றும் பெயர் பெற்ற நிறுவனமாக வளருவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்தக் கல்வி நிலையத்தில் அளிக்கப்படும் BDS கல்வி, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியதாக உள்ளது. பெருமை மிக்க குரு கோவிந்த சிங் இந்திர பிரஸ்தா பல்கலைக்கழகத்துடன்  (GGSIP) இணைக்கப்பட்டுள்ளது. ஈ.எஸ்.ஐ.சி. பல் மருத்துவக் கல்லூரியில் தரமான சிகிச்சை மற்றும் நன்னெறி சார்ந்த பல் மருத்துவக் கல்வி கற்பிக்கப் படுகிறது; தனது வாக்குறுதிகளை ஈ.எஸ்.ஐ.சி. தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

     இந்திய அரசின் தொழிலாளர் & வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி எம். சத்தியவதி, ஈ.எஸ்.ஐ.சி. டைரக்டர் ஜெனரல் திரு. ராஜ்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

*****


 



(Release ID: 1509188) Visitor Counter : 164


Read this release in: English