குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்கொள்ள உலக அளவில் நடவடிக்கை தேவை: குடியரசு துணைத் தலைவர்
பெல்ஜியம் மன்னர் பிலிப்-பை சந்தித்தார்
Posted On:
07 NOV 2017 6:48PM by PIB Chennai
உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்கொள்ள சர்வதேச அளவிலான நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் மேதகு பெல்ஜியம் மன்னர் பிலிப்புடன் அவர் இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், இரு நாடுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் எடுத்துரைத்தார். இது மிகப்பெரும் சர்வதேச சவால் என்பதை ஒப்புக் கொண்ட பெல்ஜியம் மன்னர், அவர்களது நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், இந்தியா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச தீவிரவாதத்துக்கான ஒருங்கிணைந்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து, நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்கு பெல்ஜியம் மன்னர் ஆதரவை வெளிப்படுத்தினார்.
இந்தியாவும், பெல்ஜியமும் இன்று இரண்டு வலுவான ஜனநாயகங்கள் மற்றும் பல்வேறு கொள்கைகளும், லட்சியங்களும் ஒரே மாதிரியானவை என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பேச்சுரிமை, சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான பத்திரிகை மற்றும் மனிதஉரிமைகள் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை மதிப்புகளாக இருப்பதாகவும், இதன்மூலம், நமது சமூகங்கள் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய மொழியியல் கல்வியின் முன்னேற்றத்துக்கு பெல்ஜியமைச் சேர்ந்த கல்வியாளர்கள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர், குறிப்பாக, இந்தியாவிலும், பெல்ஜியமிலும் இந்தி மற்றும் சமஸ்கிருத படிப்புக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்று அவர் கூறினார்.
முதலாம் உலகப் போரின்போது, பெல்ஜியமுக்காக 1,30,000-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், போர்க்களத்தில் போரிட்டனர். 9,000-க்கும் மேற்பட்டோர் அளப்பரிய தியாகத்தை செய்தனர் என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். முதலாவது உலகப் போரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சியைத் திறந்துவைத்து, “ஃபிளாண்டர் களத்தில் இந்தியா” (“India in Flanders Fields”) என்ற மிகப்பெரிய புத்தகத்தை மன்னர் வெளியிட உள்ளதற்கு தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். இது இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்துக்கான மரியாதையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
பெல்ஜியமைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களை கவர்ந்து இழுக்கும் சிறந்த வர்த்தக இடமாக இந்தியா இன்று திகழ்கிறது மற்றும் இந்தியாவில் தொடங்குவோம் திட்டத்தில் பெல்ஜிமின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். மேலும் அவர், நகர்ப்பகுதி மையங்களின் பொருளாதாரத் திறனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே 100 பொலிவுறு நகரங்கள் திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாகக் கூறினார். நகர்ப்பகுதி போக்குவரத்து தீர்வுகள், எரிசக்தியை சிறப்பாக பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், சிறந்த குடிமக்கள் சேவைகள், துப்புறவு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் பெல்ஜியம் நிறுவனங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தால், அந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
பெல்ஜியம் மன்னருடன் உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது.
*****
(Release ID: 1509187)
Visitor Counter : 193