தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான உத்திகள் குறித்து வல்லுநர்கள் ஆலோசனை

Posted On: 08 NOV 2017 4:57PM by PIB Chennai

உலகிலேயே அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நமது நாடு திகழ்கிறது. ஒவ்வொரு இளைஞரும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், உடனடி நடவடிக்கைகளை நாம் எடுக்காவிட்டால், எதிர்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.” இந்தக் கருத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு.சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். நொய்டாவில் வி.வி.கிரி தேசிய வேலைவாய்ப்பு கல்வி நிறுவனம் (VVGNLI) இன்று ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உத்திகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வல்லுநர்கள் மத்தியில் உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 

     அவர் பேசும்போது, “நமது அமைச்சகம் நேரடியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், வேலைவாய்ப்பை வழங்குவோருக்கும், பணியாளர்களுக்கும் உரிய சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது,” என்று கூறினார். மேலும், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான சரியான பாதையில் நமது அரசும், அமைச்சகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். வரலாற்றுப்பூர்வமான பண மதிப்பு நீக்க நடவடிக்கையை குறிப்பிட்ட அவர், இது கடந்த ஓராண்டில் ஏராளமான நற்பயன்களை அளித்துள்ளதாகக் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி (EPFO) மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் (ESIC) ஆகியவற்றில் பயனாளிகளின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் ஒரு கோடி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், விவிஜிஎன்எல்ஐ வெளியிட்ட 4 பதிப்புகளை திரு.கங்வார் வெளியிட்டார். மேலும், கல்வி நிறுவனத்தின் புனரமைக்கப்பட்ட கருத்தரங்க வளாகத்தை தொடங்கிவைத்தார்.

                                                                     

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகச் செயலாளர் திருமதி. எம்.சத்தியவதி, வேலைவாய்ப்பை தேடுவோருக்கான போட்டியில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி இளைஞர்கள் சேர்கின்றனர். எதிர்பாராதவிதமாக, வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறனை பெரும்பாலான இளைஞர்கள் பெற்றிருப்பதில்லை என்றார். மேலும் அவர், இந்த இடைவெளியை பூர்த்திசெய்ய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதாகவும் கூறினார். அண்மைக்காலமாக 1.17 கோடி இளைஞர்கள், பல்வேறு வகையான திறனுக்கான பயிற்சிகளைப் பெற்றனர். தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்த இளைஞர்கள், வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக 920 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கர்ப்பிணி பெண் தொழிலாளர்களுக்கு 26 வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையிலான முக்கியத்துவம் வாய்ந்த சட்டத் திருத்தத்தை குறிப்பிட்ட அவர், சம்பளத்துடன் கூடிய 26 வார விடுமுறையை அளிக்க பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரும்புவதில்லை என்றும் கூறினார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய தொழிலாளர் அமைப்பு (ILO), நிதி ஆயோக், டெல்லி பல்கலைக் கழகம், மனித வள மேம்பாட்டு கல்வி நிறுவனம், வேளாண் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்களை வி.வி.கிரி தேசிய வேலைவாய்ப்பு கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹெச்.சீனிவாஸ் வரவேற்றார். மேலும் அவர், இந்த நிகழ்ச்சியின் மூலம், பயனுள்ள, செயல்பாட்டுக்கு உகந்த ஆலோசனைகள் கிடைக்கும் என்றும், இவை பரிசீலனை செய்வதற்காகவும், செயல்படுத்துவதற்காகவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

*****



(Release ID: 1508942) Visitor Counter : 90


Read this release in: English