பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

அரசு அமைப்பில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: திருமதி.மேனகா சஞ்சய் காந்தி

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், ஊழலைக் குறைக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார் அமைச்சர்

Posted On: 08 NOV 2017 2:25PM by PIB Chennai

நாட்டில் இன்று கறுப்புப்பண ஒழிப்புத் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.மேனகா சஞ்சய் காந்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் மின்-ஆளுமையை ஊக்குவிக்கவும், அரசு அமைப்பில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஊழலை ஒழிக்கவும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். ஊழலையும், கறுப்புப்பணத்தையும் கட்டுப்படுத்த வெளிப்படைத்தன்மை முக்கியம் என்பதால், அரசு அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு முற்றிலும் உறுதிபூண்டுள்ளதாக மேனகா காந்தி தெரிவித்தார். இதனை செயல்படுத்தும் வகையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அரசின் மின்னணு சந்தை வலைதளம் மூலம், கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்கிய முதல் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் என்றும், இன்று பென்சில் முதல் கணிப்பொறி வரை, அனைத்துமே அரசின் மின்னணு சந்தை வலைதளம் மூலம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் திருமதி.மேனகா காந்தி தெரிவித்தார். சில சேவைகளை வழங்குவதற்கான நபர்களைக் கூட, இந்த வலைதளம் மூலமே தேர்வுசெய்வதாக அவர் கூறினார். இதன்மூலம், தனது அமைச்சகத்துக்குத் தேவையான பொருட்கள், ஊழலுக்கு வாய்ப்பே இல்லாமல், சிறந்த விலையில் கிடைப்பதாக அமைச்சர் விளக்கினார்.

மேலும் விவரங்களை அளித்த திருமதி.மேனகா காந்தி, பல்வேறு திட்டங்களின் கீழ், ஏராளமான அரசுசாரா அமைப்புகளுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் பணியாற்றி வருவதாகக் கூறினார். திட்டங்களுக்கான கருத்துருக்களைப் பெறுவதையும், நிதியை ஒதுக்கீடு செய்வதையும் ஒழுங்குபடுத்த அரசுசாரா அமைப்புகளுக்கான வலைதளத்தை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு அரசுசாரா அமைப்பும், இந்த வலைதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும். இந்த வலைதளம், நிதி ஆயோக் அமைப்பின் வலைதளத்துடன் இணைக்கிறது.

நேரடி மானிய பரிமாற்றத் (DBT) திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் பட்டியலிட்டார். இந்த அமைச்சகம், 14 வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், தனிநபர்கள் மற்றும் அமைப்புரீதியான பயனாளர்களுக்கு நிதி/சேவைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து திட்டங்களும், நேரடி மானிய பரிமாற்றத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் மிகப்பெரும் நேரடி மானிய பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாக இருப்பதாக திருமதி.மேனகா காந்தி கூறினார்.

பொது நிதி மேலாண்மை அமைப்பை முற்றிலும் செயல்படுத்திய முதல் அமைச்சகம் தனது அமைச்சகம் என்று அவர் கூறினார். இது அனைத்து நிதியையும், உரிய நபர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல், இந்த நிதி பயன்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் வழிவகை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

தத்தெடுப்பதற்கான இணையதளத்தை தொடங்கியதால், காரா என்ற இந்த இணையதளம் மூலம், தத்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முற்றிலும் தானியங்கி முறையில் அமைந்துள்ளது. சட்டப்பூர்வமாக தனியாக உள்ள குழந்தைகளும், பெற்றோரும் தற்போது தத்தெடுத்துக் கொள்ள விரும்பினால், ஒரே தகவல் தொகுப்பில் வருவார்கள். அவர்களை இணையதள அமைப்பே இணைக்கும். இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், அனைத்து முறைகேடுகளும், இடைத்தரகர்களும் அகற்றப்படுவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

அங்கன்வாடித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வழங்குவது என்பது இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு வழியை ஏற்படுத்துகிறது. இதனை சரியாக கண்காணிப்பதற்காக மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பத்தை அமைச்சகம் ஈடுபடுத்தியுள்ளது. இதன்மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும். இதன் முதல் கட்டமாக, ஆதார் அடிப்படையிலான பதிவு, தினசரி வருகைப்பதிவு, உணவு வழங்குவதை பதிவுசெய்தல், உடல் ஆரோக்கியம் குறித்த பதிவு ஆகியவற்றுக்கு 50,000 அங்கன்வாடிகளில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வருகைப் பதிவு இல்லாமல் இருந்தாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்தாலோ இந்த அமைப்பு எச்சரிக்கையை அளிக்கும். இது முறைகேடான பயனாளிகளை நீக்குவதுடன், ஊழல் நடைமுறைகளையும் அகற்றும். இது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், நிதி மேலாண்மையை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மற்ற முக்கிய நடவடிக்கைகளின் விவரங்களை திருமதி.மேனகா காந்தி எடுத்துரைத்தார். அதாவது, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தில் மின்னணு அலுவலக முறையை அமல்படுத்துதல், தேசிய மகளிர் நிதியத்தின் கடனை 87 சதவீதம் அளவுக்கு திரும்பப் பெறுதல், வலுவான குறைதீர் வழிமுறை, குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை நேரடியாக சென்று ஆய்வுசெய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

இறுதியாக, தனது சொந்தத் தொகுதியான பிலிபிட் தொகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய திருமதி.மேனகா காந்தி, பண மதிப்புநீக்க நடவடிக்கையின் குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையிலான அனைத்து பயன்களையும் விளக்கினார்.

*****

 

 



(Release ID: 1508934) Visitor Counter : 113


Read this release in: English